மதிப்பிற்குரியவர்களுக்கு...10

மதிப்பிற்குரியவர்களுக்கு...10

வணக்கம்.

‘பணக்காரன் ஆக என்ன செய்யவேண்டும்?’ என்ற கேள்விக்கான பதிலாக, ‘தேவையைக் குறைத்துக்கொள். நீ எப்போதும் பணக்காரன்தான்’ என்று எங்கோ படித்த விஷயம் அப்படியே மனதில் கல்வெட்டாக பதிந்துவிட்டது.

‘ஈஸ்வரன்’ என்ற சொல், அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய சிவனின் பெயர். ஆக்கமும், அழிவும் தரக்கூடிய இரண்டு நிலைகளுக்கு ‘ஈஸ்வரன்’ என்ற அடைமொழி நம் மரபில் உண்டு. தொட்டதெல்லாம் துலங்கி, கோடி ரூபாய் வைத்திருப்பவனை ‘கோடீஸ்வரன்’ என்று சொல்வார்கள். அனைத்து சக்திகளையும் உள்ளடக்கியது பணம் என்று குறிப்பிடுவதுபோல, பணம் படைத்தவர்களை கோடீஸ்வரர்கள் என்று சொல்வார்கள். அவர்களின் விழி அசைந்தால் உலகம் அசையும். பணம் ஒருவரை திடீரென்று எஜமானராக்கி அழகு பார்க்கும்.

வாழ்வின் இன்னொரு நிலையில், எவ்வளவு ஓடியும் ஒளிவதற்குக்கூட இடம் இல்லாத துரதிர்ஷ்டத்தின் எல்லைக்குத் துரத்தியடிக்கும் ஈஸ்வரனுக்கும் ‘சனீஸ்வரன்’ என்று பெயர். சனி பகவானையும் சர்வ வல்லமை படைத்த ஈஸ்வரனாகவே பார்த்தனர் நம் முன்னோர்கள். தரித்திரம் பிடிப்பது என்பது பணம் இல்லாத சூழ்நிலையையே பெரும்பாலும் குறிக்கும். பணம் இல்லாத மனிதனின் வாழ்க்கை, இந்த உலகில் ஒரு புழுவைவிடவும் கேவலமாக மாறிவிடும். இந்த ஏற்ற இறக்கங்களில் சிக்கித் தவிக்கும் மனிதர்கள் நம்மைச் சுற்றி எப்போதும் இருக்கவே செய்கிறார்கள். சில நேரம் நாமும்கூட இந்தச் சக்கரத்தில் ஏறி இறங்கி பெருமூச்சு விடுவது உண்டு. 

பணம்தான் ஒருவரின் வலிமையை இந்த ஊருக்கு உணர்த்துகிறது. அதே பணம்தான், செல்வம் இல்லாதவனின் நிலை என்னவாகும் என்கிற ஊரின் மனப்பான்மையையும் அறிமுகப்படுத்துகிறது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும், ஏதோ ஒரு வழியில் பணம் தேடும் முயற்சியில்தான் வாழ்வை அர்ப்பணிக்கின்றனர். சிலர் வாழ்வைத் தொலைக்கின்றனர்.

‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்று உணவு பற்றி திருவள்ளுவர் குறிப்பிடுவார். ஆசைகளும் தேவைகளும் மிகுந்துவிட்ட சூழலில், எது மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் வருவது தவிர்க்க முடியாதது. குறிப்பாக பணம்... மிகினும், குறையினும் தீங்கு செய்யக் கூடியது. அளவு அறிந்து பணத்தைப் பயன்படுத்தினால், எதை இழந்து பணத்தைப் பெறுகிறோம் என்ற தெளிவு இருந்தால், எதைப் பெறுவதற்காக பணத்தை இழக்கத் தயாராக இருக்கிறோம் என்கிற புரிதல் இருந்தால், பணம் நமக்கு வரம். இல்லாமல் போனால் அதுவே நமக்கு சாபம்! பணத்தின் குணம் பணத்திடம் இல்லை; அதைக் கையாளும் மனிதனிடமே இருக்கிறது.

ஒரு விவசாயி கடும் உழைப்பாளி. மண்ணில் உழைப்பைக் கொட்டினால் பொன்னாக விளையும் நிலங்கள் அவருக்குச் சொந்தம். ஒருநாள் உழைத்துக் களைத்து தன் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தடியில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். மரத்திலிருந்து திடீரென்று ஒரு மாயக்குரல் கேட்டது. ‘ஏழு பெட்டி நிறைய பணம் இருக்கிறது. உனக்கு வேண்டுமா?’ விழித்துப் பார்த்த விவசாயி, அதைக் கனவென்று நினைத்துக்கொண்டார். மீண்டும் அதே கேள்வி மரத்திலிருந்து வந்தது. ‘ஏழு பெட்டி நிறைய பணம் வேண்டுமா? வேண்டாமா?’ என்ற மாயக்குரலைக் கேட்டு மயக்கமே வந்தது அவருக்கு. ஆயுள் முழுவதும் விவசாயம் செய்தாலும்கூட ஏழு பெட்டி நிறைய பணத்தைப் பார்க்க முடியாது. இன்ப அதிர்ச்சியோடு, ‘‘வேண்டும்... வேண்டும்...’’ என்று கத்தினார். ‘உன் வீட்டில் பணத்தை வைத்தாகி விட்டது. போய்ப் பார்’ என்றது மாயக்குரல்.

மூச்சிரைக்க ஓடிப்போய் வீட்டில் பார்த்தால், ஏழு பெட்டிகள் இருந்தன. முதல் பெட்டியைத் திறந்து பார்த்தவருக்கு நம்பவே முடியவில்லை. பெட்டி முழுவதும் பணம். அடுத்தடுத்து ஆறு பெட்டிகளையும் நிறைத்து அழகு செய்தது பணம். ஏழாவது பெட்டியை உற்சாகமாகத் திறந்த விவசாயிக்கு ஏமாற்றமாக இருந்தது. அதில் பாதி அளவுதான் பணம் இருந்தது. ‘ஏழு பெட்டி நிறையப் பணம் இருக்கும் என்றுதானே மாயக்குரல் சொன்னது. இந்தப் பெட்டியில் பாதியளவு பணம்தானே இருக்கிறது. மீதி எங்கு போனது’ என்று யோசித்தவருக்கு, வீட்டில் இருந்த அத்தனை பேர் மீதும் சந்தேகம் வந்தது.

இருக்கிற பணம் தந்த சந்தோஷத்தைவிட, இல்லாத அரைப் பெட்டி பணம் அதிக கவலை தந்தது. தோட்டத்திலிருந்து வருவதற்குள் யாரோ பாதி பெட்டி பணத்தை எடுத்துக் கொண்டதாக அனைவரையும் சந்தேகித்தார். உழைத்து வந்த பணத்தில் வாழ்ந்த வரை இனித்த உறவுகள், மாயக்குரல் தந்த பணத்தால் கசக்க ஆரம்பித்தன. நிம்மதி தொலைக்கும் சண்டைகள் தினம் நடக்க ஆரம்பித்தன. மீதம் இருக்கிற ஆறரைப் பெட்டி பணத்தை எப்படிப் பாதுகாப்பது என்று கவலை பெருக ஆரம்பித்ததும், இரவுகள் தூக்கமின்றி நரகமாயின. தோட்டத்திற்குப் போய் உழைக்காததால் பயிர்கள் வாட ஆரம்பித்தன.

ஒருநாள் தோட்டத்தில் வேலை பார்த்து அந்தக் களைப்பில் கைகளை மடித்து தலையணையாக வைத்து அசந்து தூங்கியபோது கிடைத்த மகிழ்ச்சியை நினைத்துப் பார்த்தார் விவசாயி. உழைக்காமல் வருகிற பணம் தன் வாழ்க்கையையே மாற்றிப் போட்டதை உணர்ந்தார். மீண்டும் அந்த மரத்திடம் சென்று, ‘‘எனக்குப் பணம் வேண்டாம். நீயே எடுத்துக்கொள். துன்பமாக இருக்கிறது’’ என்று மன்றாடினார். ‘இருக்கிற பணத்தை பகிர்ந்து கொடுத்து நல்ல காரியங்கள் செய்து பார், இன்பம் வரும்’ என்றது மாயக்குரல்.

தன்னிடம் உள்ள பணத்தை எடுத்து, ஏழைகளுக்கும், கல்விக்கும், நோயுற்றவர்களுக்கும், பசியோடு இருப்பவர்களுக்கும் செலவழிக்கத் தொடங்கினார். மகிழ்ச்சி ஊற்றெடுக்க ஆரம்பித்தது. ஊருக்குள் மரியாதை மிகுந்த மனிதராக ஏற்றம் பெற்றார்.

விவசாயி அந்தப் பணத்தை சார்ந்து இருக்காமல், வயலுக்குச் சென்று உழைக்க ஆரம்பித்த பிறகு நிம்மதியான தூக்கம் வந்தது. தேங்கி நிற்கிற தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய்கள் பரவி ஆரோக்கியமற்ற சூழல் உருவாவதுபோல், அளவுக்கதிகமாக தேங்கி நிற்கிற பணமும் ஆரோக்கியமற்ற சூழலையே உருவாக்கும். உழைத்து வருகிற பணத்தின் அருமையை வார்த்தைகளில் விளக்க முடியாது; அது உணர்ந்து பார்க்க வேண்டிய விஷயம். பணம் வைத்திருப்பதால் கிடைக்கிற மரியாதையைவிட, பணத்தை எதற்காக செலவழிக்கிறோம் என்பதில் கிடைக்கிற மரியாதை நிலைத்து நிற்கும்.

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்..!

கே.ஆர்.நாகராஜன்,

நிறுவனர் - ராம்ராஜ் காட்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu