மதிப்பிற்குரியவர்களுக்கு..13

வணக்கம்.

எங்கள் நிறுவனத்தில் ஒரு இளைஞர் விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்குச் சேர்ந்தார். மார்க்கெட்டிங்கிற்குப் புதிதாக வந்திருக்கும் அந்த இளைஞரிடம், ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அந்த வேலையைக் குறித்த நேரத்திற்குள் அவரால் செய்து முடிக்க முடியவில்லை. ‘ஏன் என்னால் நேரத்திற்கு இந்த வேலையைச் செய்ய முடியவில்லை’ என்று காரணங்களை அடுக்கியபோது எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. ‘அவரைப் போல் மற்றவர்கள் யாரும் பொறுப்போடு இல்லை’ என்பதே அவரின் ஆதங்கம். வெற்றி பெறும்போது அதற்கு நாம் மட்டுமே பொறுப்பு என்று நினைப்பதும், நாம் தோல்வியடையும்போது அதற்கு மற்றவர்கள் எல்லாம் பொறுப்பு என்று நினைப்பதும்தான், நிரந்தரமான தோல்விக்குள் நாம் எடுத்து வைக்கிற முதல் அடி. ‘இவர்கள் எல்லாம் இல்லாமல் போனால் என்னால் வெற்றி அடைந்திருக்க முடியாது’ என்று நினைப்பதும், ‘இந்தத் தவறுக்கு முதல் காரணம் நான்தான். நான் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும்’ என்று உணர்வதும்தான் வெற்றி பெறுவதற்கான முதல் படி.

‘எல்லோரும் ஏன் இப்படி இருக்கிறார்கள்?’ என்று மற்றவர்களைப் பற்றி நினைக்காதவர்கள் யாரும் இங்கு இல்லை. இந்த நினைப்பில், ‘நாம் சரியாக இருக்கிறோம்’ என்பதாக மனம் நினைத்துக் கொள்கிறது. நம்மைச் சுற்றி சரியும் இருக்கும்; தவறும் இருக்கும். எது அதிகமாக இருக்கிறதோ, அதில் நமக்குத்தான் அதிக பங்கு இருக்கிறது. எதுவும் தானாக மாறாது. நாம்தான் முயற்சி எடுத்து மாற்ற முன்வர வேண்டும். நம் கையில் இருக்கும் ஐந்து விரல்களுமே ஒன்று போல இருப்பதில்லை. இருந்தாலும் பயன் இல்லை. ஒவ்வொன்றிற்கும் ஒரு பயன் இருக்கிறது. நமக்குத் தகுந்தபடி, நாம் நினைத்தபடி மற்றவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்ற நினைப்பு, உருப்படியாக எந்த வேலையையும் செய்ய அனுமதிக்காது. 

ஒரு பெண் தீவிரமான கடவுள் பக்தியோடு இருந்தார். எந்த நேரமும் கடவுளைப் பற்றி நினைக்க வேண்டும், ஒரு நாளில் பத்து முறைக்கு மேல் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நினைத்தார். அவரைப் போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அப்படி இல்லாதவர்களோடு அடிக்கடி சண்டை போட்டார். ஆனால், யாராலும் அந்தப் பெண் நினைத்தபடி நடந்துகொள்ள முடியவில்லை. அம்மா, அப்பா, உடன்பிறந்தவர்கள் என நெருக்கமாக இருப்பவர்களும் அந்தப் பெண்மணியிடம் இருந்து விலகிப் போனார்கள். சொந்த வீட்டிலேயே தனிமையில் இருக்க வேண்டிய நிலைமை.

‘மனிதர்கள்தான் சரியாக இல்லை. எனக்குத் துணையாக ஒரு பெண் கிளியை வளர்க்கிறேன். அதுதான் நான் சொன்னதையெல்லாம் திரும்பச் சொல்லும். நான் செய்ததையெல்லாம் திரும்பச் செய்யும்’ என்று ஆசை ஆசையாக ஒரு கிளியை வாங்கி வளர்த்தார். அந்தக் கிளி அழகாகப் பேசும், பாடும். அந்தப் பெண்ணுக்கு மிகவும் சந்தோஷம். கடவுள் பாடல்களை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். ஆனால், வீட்டில் டி.வியிலும் ரேடியோவிலும் தினம் தினம் வரும் சினிமாப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு கிளியும் மாறி விட்டது. ‘பத்தல... பத்தல...’ என்று பாட ஆரம்பித்து விட்டது. சொன்ன பேச்சைக் கேட்காத கிளியைத் திட்டித் தீர்த்தார் அந்தப் பெண். அவர் திட்டும்போதெல்லாம், ‘ஒய் திஸ் கொலவெறி... கொலைவெறி டி...’ என்று கிளி பாட ஆரம்பித்தது.

‘நான் வளர்க்கும் கிளிகூட எனக்கு ஏற்றபடி இல்லை’ என்று அந்தப் பெண், தன்னுடைய குருவிடம் சென்று முறையிட்டார். குரு உற்சாகமானார். அவர் தான் வளர்க்கும் ஆண் கிளியிடம் அந்தப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு போனார். அந்தக் கிளி பக்திப் பாடல்களை அழகாகப் பாடியது. மனமுருகி கண்கள் மூடி பிரார்த்தனை செய்தது. அந்தப் பெண்ணுக்கு ஆச்சர்யம். ‘எப்படி இது சாத்தியமானது’ என்று கேட்டார் அந்தப் பெண். ‘கடவுளிடம் பிரார்த்தனை செய்தால் நினைத்து எல்லாம் நடக்கும். பாடல்கள் பாடினால் சீக்கிரமே நல்லது நடக்கும் என என் கிளிக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறேன். உன் கிளியை இங்கு கொண்டு வா. கொஞ்ச நாள் இந்தக் கிளியோடு சேர்ந்து இருந்தால், அதுவும் சமர்த்துக் கிளியாக மாறிவிடும்’ என்று ஆலோசனை சொன்னார்.

சந்தோஷமாக தன் கிளியைக் கொண்டுவந்து, அந்தக் கிளியின் கூண்டில் விட்டார் அந்தப் பெண். அங்கிருந்த ஆண் கிளி உடனே சத்தமாக, ‘நன்றி கடவுளே.. என் பிரார்த்தனை உங்களுக்கு சீக்கிரம் எட்டிவிட்டது. தனியாக இருக்கிறேன். ஜாலியாக இருக்க ஒரு பெண் கிளி துணையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்கிற என் பிரார்த்தனையை நீங்கள் இவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றியதற்கு நன்றி’ என்று சத்தமாகச் சொன்னதோடு இல்லாமல், இரண்டு கிளிகளும் சேர்ந்து, ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?’ என்று பாட ஆரம்பித்தன. அந்தப் பெண்ணோடு குருவும் சேர்ந்து அதிர்ச்சி அடைந்தார்.

சொன்னதை திருப்பிச் சொல்லும் கிளிகள்கூட நாம் நினைத்தபடி இருக்காது என்பதைப் புரிய வைக்கிற இந்தக் கதையை, வேலையை முடிக்க முடியாமல் காரணங்கள் சொல்பவர்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள்.

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்..!

- கே.ஆர்.நாகராஜன்,

நிறுவனர் - ராம்ராஜ் காட்டன்   

crossmenu