மதிப்பிற்குரியவர்களுக்கு...14

மதிப்பிற்குரியவர்களுக்கு...14

வணக்கம்.

‘ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்றாவது கை, நம்பிக்கை’ என்பார்கள். இரண்டு கைகள் இல்லாமல்கூட நம்மால் வாழ்ந்து விடமுடியும். நம்பிக்கையில்லாமல் வாழ்க்கை இல்லை. ‘‘நாளை சந்திக்கிறேன்’’ என்ற வார்த்தைகளே நம்பிக்கையிலிருந்து பிறப்பவைதான். நிச்சயமற்ற மனித வாழ்வின் ஆணிவேராக இருப்பது, ‘நாளை எல்லாம் மாறும்’ என்ற தீவிர நம்பிக்கைதான்.

தலைமுறை தலைமுறையாக ஒரு சமூகம் பின்பற்றி வரும் பல்வேறு விதமான நம்பிக்கைகளை ஆராய்ந்து பார்த்தால், அதில் பல அர்த்தப்பூர்வமான காரணங்கள் ஒளிந்திருக்கும். ‘புதிதாகத் திருமணமான தம்பதி, ஆடி மாதம் ஒன்றாக இணைந்து இருக்கக்கூடாது’ என்பது நம் சமூகத்தின் நம்பிக்கை. ஆடி மாதத்தில் தாயின் வயிற்றில் கரு உருவானால், சித்திரை வெயிலில் குழந்தை பிறக்கும். வெயிலின் உச்சமான ஒரு மாதத்தில் பிறக்கும்போது குழந்தை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும். வெயில்கால நோய்களை பச்சிளம் குழந்தையால் தாங்க இயலாது. அதனால், ‘ஆடி சீர்’ வைத்து பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். இந்த சமூக நம்பிக்கைக்கு பின்னால், பொருத்தமான காரணம் அடங்கி இருக்கிறது.

சமீபத்தில் ஒரு நண்பருடைய மகளை ஆடி மாதம் வந்ததும் மாமியார் வீட்டிலிருந்து அழைத்து வந்துவிட்டார்கள். ஆனால், மாப்பிள்ளை அமெரிக்காவில் வேலை செய்துகொண்டிருக்கிறார். இந்தப் பெண்ணிற்கு இன்னும் விசா கிடைக்காமல் போனதால் இந்தியாவில் இருக்க வேண்டிய நிலை. ‘‘கணவன் நாட்டில் இல்லாத நேரத்திலும், ‘ஆடி மாதம்’ என்று சொல்லி பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவது மூட நம்பிக்கைதானே’’ என்று என் இன்னொரு நண்பர் கேள்வி எழுப்பினார்.

அது சரியாக இருக்கலாம்! ஆனாலும், புதிதாகத் திருமணமான பெண், கணவன் உடன் இருக்க முடியாத சூழலில், கணவனுடைய உறவுகளுடன் வாழ்வதில் பல மனநிலை மாற்றங்கள் ஏற்படும். ஒரு மாதம் தாய் வீட்டிற்கு வந்து, தான் பிறந்த வீட்டில் தனக்குப் பிடித்தபடி இருப்பதில், அந்தப் பெண்ணின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. வேரோடு பிடுங்கி இன்னொரு மண்ணில் நடப்படும் செடியைப் போல, இருபது ஆண்டுகளுக்கு மேல் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு, உறவுகளை & நண்பர்களைப் பிரிந்து புதிய வீட்டில் வாழப் போகும் ஒரு பெண்ணிற்கு, தாய் வீடு வரக் கிடைக்கும் வாய்ப்பை, ஒரு சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. இதற்கு அறிவியல் ரீதியிலான காரணங்கள் அவசியமில்லை; வாழ்வியல் ரீதியிலான காரணங்களே போதுமானவை.

கடவுள் தொடர்பான நம்பிக்கைகள், குழந்தை தொடர்பான நம்பிக்கைகள், பெண்கள் தொடர்பான நம்பிக்கைகள், திருமணம் தொடர்பான நம்பிக்கைகள், நோய் தொடர்பான நம்பிக்கைகள், கனவு தொடர்பான நம்பிக்கைகள், சகுனம் தொடர்பான நம்பிக்கைகள், மரணம் தொடர்பான நம்பிக்கைகள் என மனிதர்களின் வாழ்க்கையோடு வகை வகையான நம்பிக்கைகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. எல்லா நம்பிக்கைகளும் அறிவியல்பூர்வமானவை என்று சொல்லிவிட முடியாது. பல நம்பிக்கைகள் இந்தக் காலத்திற்கு பொருந்தாமல்கூட போகலாம்.

‘‘பல சமூக நம்பிக்கைகளுக்குப் பின்னாலும், அவை உருவான காலகட்டத்தில் நிச்சயம் அதற்கு ஒரு அவசியமான காரணம் இருந்தே தீரும்’’ என்கிறார்கள் அறிஞர்கள். ‘சந்தனப்பொட்டு வைக்கக்கூடாது’ என்பது காட்டில் வாழும் பழங்குடி மக்களின் நம்பிக்கை. விலையுயர்ந்த சந்தன மரங்களை வெட்டி விற்பனை செய்வதை இந்த நம்பிக்கை தடுக்கிறது. ‘பசியைத் தவிர வேறெந்த காரணத்திற்காகவும் காட்டு விலங்குகளை வேட்டையாடக்கூடாது’ என்பது பழங்குடி இன மக்களிடத்தில் உள்ள முக்கியமான நம்பிக்கையாகும். வேறு காரணங்களுக்காக வேட்டையாடினால் தங்களை குலசாமி தண்டித்து விடும் என்று அஞ்சுகிறார்கள். யானைத் தந்தம், புலி நகம், மான் தோல் என நாகரிக மனிதர்களின் பேராசைக்காக இப்போது காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுவதைப் பார்க்கும்போது, பழங்குடி மக்களின் வாழ்வியல் நாகரிகம் வணங்கத்தக்கதாகத் தோன்றுகிறது.  

பெரும்பாலான நம்பிக்கைகள் அச்சத்தின் அடிப்படையில் தோன்றினாலும், சமுதாயத் தேவைக்காக அவை முன்னோர்களால் உருவாக்கப்பட்டு தலைமுறை தலைமுறையாக மக்களால் பின்பற்றப்படுகிறது. ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்பது ஒரு சமுதாயத்தின் நம்பிக்கை. பிறந்த குழந்தையில் தொடங்கி பெரியவர்கள் வரை அடுத்தவர்களின் பொறமைக்கு ஆளாகி வளரக்கூடாது என்பதில் கவனமாக இருப்பர். குழந்தையைக் குளிப்பாட்டி, அலங்கரித்து, அழகான உடை உடுத்தி, அனைத்தையும் செய்துவிட்டு, கன்னத்தில் ஒரு கறுப்புப் பொட்டை வைப்பதில் தொடங்கி, தொழில் வளர்ச்சி, புகழ் வளர்ச்சி, பதவி உயர்வு போன்ற எந்த வாழ்வின் வளர்ச்சி நிலையிலும் மிளகாய், உப்பு முதலியவற்றைக் கொண்டு சுற்றிப் போட்டு திருஷ்டி கழிப்பது வரை ‘கண்ணடி படக்கூடாது‘ என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தனர் நம் முன்னோர்.

இதே திருஷ்டி கழிப்பதில் இன்னொரு வகையான பூசணிக்காய் சுற்றும் நம்பிக்கை காலம் காலமாக நடந்துவருகிறது. கற்பூரம் ஏற்றி குங்குமம் கலந்து நீரில் வைத்து, வாழும் வீடு, வளரும் தொழில், புதிதாகத் தொடங்கும் முயற்சிகள் என பல நிகழ்வுகளிலும் பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்து, முச்சந்திப்பில் போட்டு உடைப்பார்கள். இருசக்கர வாகனங்கள் வீட்டுக்கு வீடு பெருகிவிட்ட காலத்தில், வீதியில் இப்படிப் போட்டு உடைக்கும் பூசணியால் விபத்துகள் ஏற்படுவதை தொடர்ச்சியாக செய்திகளில் கேட்கிறோம்; நடைமுறையிலும் பார்க்கிறோம். காலத்திற்கேற்ப மாற வேண்டியது அவசியம். நமக்கு நன்மை தருகிற, மனநிறைவு தருகிற எந்த நம்பிக்கையும் பிறருக்கோ சமுதாயத்திற்கோ தீமை தருகிற நம்பிக்கையாக மாறிவிடக்கூடாது. மற்றவர்களைப் பற்றியோ, சமூகத்தைப் பற்றியோ எந்த அக்கறையும் இல்லாத நம்பிக்கைகள் கைவிடப்படவேண்டியவை. பல்வேறு நம்பிக்கைகளை வலியுறுத்தும் சமூகமே, ‘ஆபத்துக்குப் பாவமில்லை’ என்கிற நம்பிக்கையையும் கொண்டு விளங்குகிறது என்பதை உணர வேண்டும்.

இந்த சமூக நம்பிக்கைகளைத் தாண்டி, ஒருவர் தன்னை நம்ப வேண்டும்; உறவுகளை, நட்புகளை நம்ப வேண்டும். குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டி வளர்க்க வேண்டும். யாரை நம்புவது, எப்படிப்பட்ட தவறுகளை செய்யக்கூடாது என கற்றுத்தர வேண்டும். தன்னை நம்பி செயலில் இறங்கும் மந்திரத்தை போதிக்க வேண்டும். நம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்ளத் தெரிந்தவர்களுக்கே எல்லா கதவுகளும் திறக்கின்றன.

நம்பிக்கை என்பது நிச்சயம் ஒருவழிப் பாதையல்ல! மற்றவர்களை நம்புவதைப் போலவே, மற்றவர்களின் நம்பிக்கைக்கு உகந்தவராகவும் திகழ வேண்டும். ‘நம்பிக்கை’ என்ற அச்சாணியின் பற்றுதலில்தான் இந்த பூமி நிரந்தரமாக சுழன்றுகொண்டிருக்கிறது. கொள்ள வேண்டியதைக் கொண்டு, தள்ள வேண்டியதைத் தள்ளி, வாழ்வு சிறக்கும் நம்பிக்கைகளைப் போற்றுவோம்.

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்!

- கே.ஆர்.நாகராஜன்,

நிறுவனர் - ராம்ராஜ் காட்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu