மதிப்பிற்குரியவர்களுக்கு - 7

மதிப்பிற்குரியவர்களுக்கு - 7

வணக்கம்.

‘பிள்ளைகளுக்காகத்தானே இந்த வாழ்க்கை’ என்று மெழுகாக தங்களை உருக்கிக்கொள்ளும் பெற்றோர்களை ஏழை முதல் பணக்காரர்கள் வரை எந்த நிலையிலும் பார்க்கலாம். கல்யாணப் பந்தியில் பரிமாறப்பட்ட இனிப்பு தன் மகனுக்கு மிகவும் பிடிக்கும் என்று சாப்பிடாமல் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்ட தாயைப் பார்த்தபோது ஆச்சர்யப்பட்டேன். குழந்தை நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக மனைவியையும் குழந்தையையும் சென்னையில் விட்டுவிட்டு, வெளியூரில் வீடு வாடகை எடுத்து தனியாக வாழும் தகப்பன்களைப் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். குழந்தைகள் விரும்புகின்றவற்றை தேடித் தேடித் தருகிற பெற்றோர்களைப் பார்த்திருக்கிறேன். குழந்தைகளின் எதிர்காலத்தின் மீது பெற்றோர்களுக்கு இருக்கும் அக்கறை, வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை.

எனக்குத் தெரிந்து பெற்றோர்களில் எல்லா வயதுடையவர்களும், தங்களை ஒரு பொருட்டாகக் கருதாமல், பிள்ளைகளின் எதிர்காலத்தை முக்கியமாகக் கருத்தில் கொண்டே எல்லா முடிவுகளையும் எடுக்கின்றனர். கைப்பிடித்து குழந்தைகளை நடை பழக்கும் காலத்தில், பெற்றோரின் கைக்குள் பிள்ளைகளின் கை இருக்கும். எங்கும் தவறி விடக்கூடாது என்பதில் பெற்றோரின் கை, குழந்தையின் கையை இறுகப் பற்றி இருக்கும். அந்தப் ‘பிடிப்பில்’, குழந்தைகள் மீது பெற்றோருக்கு இருக்கும் அக்கறை வெளிப்படும். சூடான உணவை குழந்தைக்கு ஊட்டும்போது, பெற்றோரின் கை அறிந்த சூட்டை, பிள்ளையின் வாய் அறியாது. மழலை தொடங்கி, மலரும் பருவம் வரை இப்படி ஒவ்வொன்றிலும் வெளிப்படும் குழந்தைகள் மீதான பெற்றோர்களின் அக்கறை, குழந்தைகள் வளரும்போது கொஞ்சம் கவலையாக மாறுவதை இந்தக் காலகட்டத்தில் பார்க்க முடிகிறது.

காலம் மிக வேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது. காலத்துக்கேற்ப பிள்ளைகள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமலும், கையாளத் தெரியாமலும் பல பெற்றோர்கள் தடுமாறுகிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் குழந்தை மூன்றாம் வகுப்பு படிக்கிறான். பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும், தன்னுடைய வகுப்பு தோழியுடன், ‘ஐ மிஸ் யூ’ என இன்டர்நெட்டில் ‘சாட்’ செய்கிறான். எட்டு வயது குழந்தையிடம் எந்தத் தவறான நோக்கமும் இருக்காது எனினும், அப்போதுதான் வகுப்பில் பார்த்துவிட்டு வந்த மாணவியை, வீட்டிற்கு வந்ததும் அவன் ‘மிஸ் பண்ணுவதை’ சிரிப்போடு வெளிப்படுத்தினார் அவன் தந்தை. அந்தச் சிரிப்பின் உதட்டோரத்தில் ஒரு எச்சரிக்கை உணர்வும் இருந்தது. எட்டு வயது குழந்தைக்கு இன்டர்நெட் வந்து சேர்ந்துவிடுவதும், செல்போன் சகஜமாகிவிடுவதும், விளையாட்டு வீடியோ கேம்ஸாக மாறிவிடுவதும் பெற்றோர் சம்மத்தோடு நடந்தாலும், பிள்ளைகள் கேட்பதைக் ‘கொடுத்துவிடுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்’ என்று செய்வதறியாமல் திணறுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு வார இதழில், ‘டீன் ஏஜ் பிள்ளைகள் எப்படி வழிதவறிப் போகிறார்கள்’ என்பது பற்றிய ஒரு கட்டுரையைப் படித்தபோது மனம் ‘பகீர்’ என்று பதறியது. பெற்றோருக்குத் தெரியாமல் ஆபாசக் குப்பைகள் பிள்ளைகளை வாரி எடுத்துக்கொள்ளும் விதத்தை புள்ளிவிவரங்களோடு விளக்கி இருந்தது அந்தக் கட்டுரை. மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் எடுத்த சர்வேயில், ‘14 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்திருக்கிறது’ என்றும், அதற்கு இன்டர்நெட் முக்கியமான காரணம் என்றும் அபாயமணி அடித்திருக்கிறது. அதேபோல 60 சதவீத டீன் ஏஜ் இளைஞர்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட ‘சிம் கார்டுகள்’ இருப்பதும், அவர்களின் நேரம் அதிகம் வீணாவது செல்போனில்தான் என்பதையும் உறுதி செய்கிறது இந்த சர்வே. 85 சதவீதக் குழந்தைகள், தங்களின் நடவடிக்கைகளை பெற்றோரிடம் பொய் சொல்லி மறைப்பதாக சர்வேயில் மனம் திறந்து சொல்லி இருக்கிறார்கள். அதேபோல, பெற்றோர்கள் கண்காணிப்பதும் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும் மனம் திறந்திருக்கிறார்கள். 

தொழில்நுட்ப வளர்ச்சியிலிருந்து பெற்றோர்கள் அதிகம் விலகி இருப்பதும், குழந்தைகள் அளவுக்கதிகமாக நெருங்கி இருப்பதும்தான் இந்த நெருக்கடிக்குக் காரணம். குழந்தைகளுக்கு உணவு பழக்கத்தில் அவர்களுக்குப் பிடித்ததை பரிமாறும் அளவுக்கு, ஆரோக்கியமானதையும் சேர்த்தே பரிமாறுகிறோம். இந்த அணுகுமுறை மற்ற விஷயங்களில் இல்லாமல் போவதே, அக்கறை கவலையாக மாறுவதற்கான ஆணிவேர். இன்று செல்போன் எல்லோருக்கும் அவசியம் என்ற நிலை வந்த பிறகு, பிள்ளைகளுக்கு ‘செல்போன் வாங்கித் தர முடியாது’ என்று சொல்ல முடியாதுதான். ஆனால், பல ஆயிரம் ரூபாய் செலவழித்து அதிநவீன போனை 13 வயது பெண்ணுக்கு வாங்கித் தர வேண்டிய அவசியமில்லை என்பதை பெற்றோர்கள் உணர்வதில்லை. ‘சீரியல்’ பார்க்க தொல்லை வரக்கூடாது என்பதால், தங்களுக்கு ஒரு டி.வி, பிள்ளைகளுக்கு ஒரு டி.வி என்று வாங்கி வைத்திருக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் எந்த மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள் என்பதில் அக்கறை கொள்வதில்லை.

‘பருவத்தில்’ வருகிற உடல் மாற்றங்களைப் பற்றியோ, உள்ள மாற்றங்கள் பற்றியோ நாம் நம் குழந்தைகளிடம் பேசத் தயாராக இல்லை. அவர்களை அதற்குத் தயார்படுத்துவதிலும் விழிப்புணர்வு இல்லை. அதனால் அவர்கள் வெளியில் தேடுகிறார்கள். இன்டர்நெட்டும், தொலைக்காட்சியும், செல்போன்களும் அவர்களுக்கு சொல்லக்கூடாததை எல்லாம் சொல்லித் தருகின்றன.

அக்கறைகள், கவலைகளாக மாறாமல் இருக்க வேண்டுமென்றால், காலம் மாறுவதைப் பற்றி புலம்பித் தீர்க்காமல், புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். உங்கள் பிள்ளைகளைப் புரிந்துகொள்ளுங்கள், சரியான வழிகாட்டுங்கள்.  

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்..!

- கே.ஆர்.நாகராஜன்,

நிறுவனர் - ராம்ராஜ் காட்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu