மதிப்பிற்குரியவர்களுக்கு...3

மதிப்பிற்குரியவர்களுக்கு...3

வணக்கம்.

          ‘திட்டமிடத் தவறுகிறவன், தவறு செய்யத் திட்டமிடுகிறான்’ என ஒரு பொன்மொழி இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த வாசகம் இது. குடும்பத்தைச் சரியாகத் திட்டமிட்டு நிர்வாகம் செய்யாது போனால், அச்சாணி கழன்ற வண்டி போலக் குடும்பம் ஒரு சூழலில் திடீரெனக் குடை சாய்ந்துவிடும்.

          இருப்பதை வைத்துப் போடுவதற்குப் பெயர்தான் பட்ஜெட். பறப்பதற்கெல்லாம் ஆசைப்பட ஆரம்பித்தால், மாயமானுக்கு ஆசைப்பட்டு சீதை சந்தித்தது போன்ற துயரங்களே கிடைக்கும். கிராமத்துப் பக்கம் இப்போதும் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போது, ‘மாப்பிள்ளைக்கு சொத்து பத்து என்ன இருக்கு?’ எனக் கேட்பார்கள். சொத்து தெரியும்; ‘பத்து’ என்றால் என்ன அர்த்தம்? கணக்கு வழக்கு பார்க்கும் ஆடிட்டர்களைக் கேட்டால், ‘பற்று - வரவு’ எனச் சொல்லி, பற்று என்றால் செலவு என விவரிப்பார்கள். ‘சொத்து பத்து இருக்கா?’ என்ற விசாரணையில், ‘சொத்து எவ்வளவு இருக்கும், கடன் எவ்வளவு இருக்கும்’ என இரண்டையும் தெரிந்துகொண்ட பிறகுதான் பெண் தருவார்கள்.

          சின்னச் சின்ன விஷயங்களில்கூடக் கிராமத்து மனிதர்களிடம் கச்சிதமானத் திட்டமிடல் இருக்கும். வரவுக்கு ஏற்ற வாழ்க்கையை வாழ்ந்தார்கள். இன்று நிலைமை தலைகீழாக மாறிக் கொண்டிருக்கிறது. கிரெடிட் கார்டு இல்லாத வாழ்க்கை பலருக்குச் சாத்தியமில்லை. சலுகை கொடுத்து கடன் வாங்க வைக்கிற காலமாகிவிட்டது இது. அதனால்தான் குடும்ப பட்ஜெட்டுக்கு இன்னும் முக்கியத்துவம் கூடுகிறது. 

          ஒரு நகைச்சுவைக் கதை உண்டு. ஒரு பணக்காரச் சிறுமியை, அவள் படிக்கிற பள்ளியில் ‘ஏழை’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்கள். ‘எங்க தாத்தா ரொம்ப ஏழை. அதனால எங்கப்பாவும் ஏழை. என் வீட்ல சமையல் வேலை செய்யுற ஆறு சமையல்காரங்களும் ஏழை. எங்க வீட்ல இருக்கிற ஐந்து கார் டிரைவர்களும் ஏழை. எங்க வீட்ல வேலை செய்யுற தோட்டக்காரங்க, செக்யூரிட்டி எல்லாருமே ஏழை’ என எழுதினாள் அந்தச் சிறுமி. ‘ஏழை’ என எழுத்தில் எழுதிவிட்டால் நாம் ஏழையாகிவிடுவோம் என நம்பிவிட்டாள் அந்தச் சிறுமி.

          அதுபோலத்தான், தேவைக்கும் பற்றாக்குறைக்குமான வாழ்க்கையில் அல்லாடும் பலர், கடன் வாங்கியாவது வசதியாக வாழ்ந்தால் போதும் என நினைக்கிறார்கள். வரவு எட்டணாவாகவும் செலவு பத்தணாவாகவும் இருந்தால், வாழ்க்கை சீக்கிரம் கஷ்டங்களின் பிறப்பிடமாகி விடும்.

          ராக்கெட்தான் பொதுவாக வேகம் காட்டும். இன்று விலைவாசி ராக்கெட்டைவிட வேகமாக ஏறிக்கொண்டே போகிறது.

          நாட்டுக்கு பட்ஜெட் போட அமைச்சர் இருக்கிறார். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருக்கிறார்கள். வீட்டுக்குத்தான் பிரச்னை. கேஸ் சிலிண்டர் விலை கொஞ்சம் ஏறினாலும், அதை ஈடுகட்ட ஒரு சாதாரணக் குடும்பம் தடுமாறி விடும். நாள்முழுக்கக் கூடை முடைகிற ஒருத்தருக்கு 60 ரூபாய் கூலி கிடைத்தால், பெரிய விஷயம். எப்போதும் பணம் கொடுக்கிற ஏ.டி.எம்., மெஷினுக்குக் காவலாக நிற்கிற ஒரு செக்யூரிட்டிக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய்கூடக் கிடைக்காது. அவர் குடும்பத்தில் இருக்கிற அத்தனை பேருடைய பசியும், அந்த ரூபாயில் தீர வேண்டும்.

          நடுத்தரக் குடும்பங்களும், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிற குடும்பங்களும் சரியாக பட்ஜெட் போட்டு முறையாக வாழவில்லை என்றால், திணற நேரிடும். ‘விரலுக்கு ஏத்த வீக்கம்’ நாம் போடுகிற பட்ஜெட்டில் இருக்க வேண்டும். வளர்ச்சிக்கும், வீக்கத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால், எதையும் நிர்வாகம் செய்ய முடியாது. குடும்பத்தில் இருக்கிற உறுப்பினர்களுக்கு அடிப்படைத் தேவைகள், மருத்துவச் செலவு, நல்லது கெட்டதுக்கு ஆகிற செலவுகள், பிள்ளைகள் படிப்பு, அவர்களின் எதிர்காலம், பெண் பிள்ளையின் திருமணம் என நீள்கிற செலவுகளின் பட்டியலை, நமக்கு வருகிற வரவு பார்த்து பட்ஜெட் போட்டு செய்வது அவசியம்.

          பட்ஜெட் போட்டு வாழ்பவர்கள்தான், எதிர்காலத்தில் கஷ்டம் இல்லாமல் வாழமுடியும். இதில் பெரியவர்கள் மட்டுமின்றி, வீட்டில் உள்ள பிள்ளைகளையும் பங்கேற்க வைப்பது அவசியம். உப்பு, புளி, மிளகாய் என்ன விலை, கரன்ட் பில் எவ்வளவு வருகிறது, காய்கறி விலை என்ன, கடன் செலுத்த எவ்வளவு பணம் தேவைப்படுகிறது... போன்ற விஷயங்களைப் பிள்ளைகளோடு பகிர்ந்துகொண்டு, அவர்களையே பட்ஜெட் போடச் சொன்னால், அவர்கள் பொறுப்பானவர்களாக வளர்வார்கள்.

          திட்டமிட்ட சிறப்பான வாழ்க்கைக்கு, குடும்ப பட்ஜெட் வழித்துணையாக நிச்சயம் அமையும்.

வாழ்க வளமுடன்!

- கே.ஆர். நாகராஜன்,

நிறுவனர் - ராம்ராஜ் காட்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu