மதிப்பிற்குரியவர்களுக்கு...12
மதிப்பிற்குரியவர்களுக்கு...12
வணக்கம்.
பேச்சு என்பது கருத்துகளை பரிமாற உதவும் கருவி மட்டும் அல்ல; அது மனிதனின் தனித்த அடையாளம். கலைகளுள் தலைசிறந்த கலை. ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்று சொல்வார்கள். அதன் அர்த்தம், ‘பேசத் தெரிந்த பிள்ளை எளிதில் ஜெயிக்கும்’ என்பதுதான். முருகன் மயிலேறி உலகம் சுற்றி வருவதற்குள், பிள்ளையார் ‘பெற்றோரே என் உலகம்’ என்று சொல்லி அவர்களை வலம் வந்து ஞானப்பழத்தை வாங்கியே விட்டார்.
பேச்சு என்பது இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி. சரியாகப் பயன்படுத்த தெரியாமல் போனால், அது நம்மையும் கிழிக்கும்; நம்மைச் சார்ந்தவர்களையும் கிழிக்கும். பயன்படுத்தத் தெரிந்தால் தற்காக்கும் ஆயுதம். ‘வாள்முனை எதிரில் உள்ளவர்களைத்தான் கொல்லும். நாமுனை கோட்டை கட்டி வாழ்பவரையும் கொன்று குவித்துவிடும்’ என்று சொல்லுமளவிற்கு நாம் பேசும் வார்த்தைகள் வலிமையானவை.
‘கற்றலின் கேட்டலே நன்று’ என்னும் வாக்கு நூற்றுக்கு நூறு உண்மை. தேனின் சக்தி உடனடியாக நமது உடலில் கலப்பதற்குக் காரணம் உண்டு. பல மலர்களில் இருந்து சேகரித்த தேனை, தேனீக்கள் ஏற்கனவே செரிமானம் செய்து, தேவையற்றதை நீக்கி தேவையானதை மட்டும் பக்குவப்படுத்தி தயாராக வைத்திருப்பதுதான் காரணம். அதுபோலவே பேச்சாளர்கள், பல புத்தகங்களைப் படித்து, சான்றோர்கள் சொன்னதை அலசி ஆராய்ந்து ஒப்பிட்டு, தேவையற்றதை நீக்கிவிட்டுச் சொல்லும்போது, நேரடியாக அதன் பயன் நம்மை வந்தடைகிறது. நம்முடைய மரபில் கற்பது என்பதே, ‘பாடம் கேட்பது’தான். குரு சொல்லச் சொல்ல, சீடர்கள் கேட்டுக்கொண்டு பின்பற்றுவார்கள்.
தன் சொல்லின் மூலம் எதையும் வலிமையாகப் புரிய வைக்கும் மாமேதை பெர்னார்ட் ஷா, தனக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவிற்கு மேல்நாட்டினரின் நாகரிக உடையான கோட்-சூட் அணிந்து போகாமல் எளிமையான உடையில் சென்றிருக்கிறார். ‘எனக்குத்தான் பாராட்டு விழா நடக்கப்போகிறது’ என்று சொன்னாலும் காவலாளி உள்ளே அனுமதிக்கவில்லை. திரும்பிப் போய் கோட்-சூட் அணிந்து வந்த பிறகே உள்ளே போக முடிந்தது. அவரை வரவேற்றுப் பாராட்டிப் பேசி விருந்து அளித்தனர். ஷா தன்னுடைய உடைகளை ஒரு நாற்காலியில் வைத்துவிட்டு, அவருக்குக் கொடுக்கப்பட்ட விருந்தின் உணவு வகைகளை அதன்மீது கொட்டினார். ‘இந்த விருந்து எனக்கல்ல, என் உடைக்குத்தான்’ என்று அவர் சொன்னதும், அங்கிருந்தவர்களுக்கு ‘மதிப்பு என்பது உடையில் இல்லை’ என்பது நன்றாகப் புரிந்தது. ‘சொல்லப்பட வேண்டிய’ விஷயத்தை நகைச்சுவையாகச் சொல்ல முடிந்த பெர்னார்ட் ஷா, காயப்படுத்தாமல் தன்னுடைய முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தினார்.
சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவைக் கேட்டுவிட்டு, ஒரு அமெரிக்கப் பெண் அதிரும்படியான ஒரு வேண்டுகோள் வைத்தார். ‘‘நான் தங்களைத் திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தை பெற வேண்டும். உங்களைப் போல அறிவார்ந்த விவேகமுள்ள குழந்தைக்கு நான் தாயாக வேண்டும்’’ என்று கேட்டபோது, சுற்றி இருந்தவர்கள் ‘துறவியைப் பார்த்து கேட்கிற வரமா இது?’ என்று முகம் சுளித்தனர். விவேகானந்தர் இன்முகத்தோடு, ‘‘அவ்வளவுதானே! இப்போதே நான் உங்கள் பிள்ளையாகிறேன். என்னை தங்கள் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளுங்கள் தாயே’’ என்று இருகரம் கூப்பியபோது, அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து நீர் பெருகியது. முகம் சுளித்து திட்டியிருந்தால் அந்த வார்த்தைகள் காயப்படுத்தி இருக்கும். இன்முகத்தோடு விவேகானந்தர் சொன்ன வார்த்தைகள், அந்தப் பெண்ணின் வலிக்கு மருந்தாகிப் போயின.
பேச்சுக்கலையின் மூலம் வரலாற்றையே மாற்றிக் காட்ட முடியும். மக்களை ஒன்று சேர்க்கவும், அநீதிக்கு எதிராகப் போராடவும் பேச்சுக்கலையைத்தான் தலைவர்கள் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்.
வார்த்தை வேறு, வாழ்க்கை வேறு அல்ல. இரண்டும் வேறு வேறாக இல்லாமல் ஒன்றாக இருப்பதுதான் நாம் வாழ்ந்ததற்கு அர்த்தம். சொல் என்பது வெறும் சொல் அல்ல; அதுவே செயல்தான். நம் நாவிலிருந்து ஒரு சொல் பிறந்துவிட்டால் அதற்கு இறப்பு இல்லை. நாம் சொன்ன சொல், நம் நாக்கிற்குள் திரும்பாது.
நாம் உச்சரிக்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் சுவை உண்டு. அதில் இனிமை இருக்க முடியும். கசப்பு இருக்க முடியும். உள்ளம் எரிக்கிற காரம் இருக்க முடியும். சமைப்பவர்கள் தாங்கள் சமைத்த உணவின் சுவையை ருசி பார்த்துப் பிறகு பரிமாறுவதைப் போல, நம்மிடம் இருந்து பிறக்கிற ஒவ்வொரு சொல்லின் சுவையையும் நாம் உணர்ந்து பிறகு உச்சரிக்க வேண்டியது அவசியம்.
ஒருவரின் பேச்சு ஆறாத காயத்தை ஏற்படுத்தும். ஒருவரின் பேச்சு அந்தக் காயத்தின் மீது மருந்து தடவும். பேச்சு மகிழ்ச்சி தரும்; துன்புறுத்தும்; நம்பிக்கை ஊட்டும். உருக்குலைத்துப் போட்டுவிடும். அன்பை போதிக்கிற பேச்சால் வெறுப்பையும் விதைக்க முடியும். பேச்சில் ஒளியும் உண்டு; இருளும் உண்டு.
இப்படி பலம், பலவீனம் என சமமாக உள்ள பேச்சுக்கலையை சரியாகப் பயின்றுவிட்டால், நம்முடைய வாழ்வில் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் பெருகும். பேச்சின் பலம் அறிந்துதான், அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள், ‘வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என்ற சொற்களை சந்திக்கிற அனைவரிடமும் சொல்லச் சொன்னார். காற்றில் நல்ல அதிர்வுகளை உண்டாக்கக்கூடிய ‘பாஸிட்டிவான’ சொற்களைக் கோர்த்து பேசும்போதே நமக்கு பாதி வெற்றி கிடைத்துவிடுகிறது. இனிமையும், நம்பிக்கையும், உயர்வும் தருகிற பேச்சின் உன்னதத்தை உணர்ந்து, நாமும் பின்பற்றுவோம்.
வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்..!
- கே.ஆர்.நாகராஜன்,
நிறுவனர் - ராம்ராஜ் காட்டன்
Share
Related Posts