யார் காரணம்?

யார் காரணம்?

ஒரு கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றுகூடி, ஒரு படகுப் போட்டி அணியை உருவாக்கினர். அவர்களுக்கு பயிற்சியாளர்கள் என்று யாருமில்லை. டி.வியில் எப்போதாவது காட்டப்படும் படகுப்போட்டிகளை பார்த்ததோடு சரி! இயல்பாகவே அவர்களது தொழிலாக படகு ஓட்டுதல் இருந்தது. கடலிலிருந்து அவர்களது கிராமத்தின் வழியே நிலங்களை ஊடுருவிச் செல்லும் ஒரு உப்பங்கழியில் படகில் சென்று மீன் பிடிப்பது அவர்களது தினசரிக் கடமை. மாலை வரை மீன் பிடித்துவிட்டு, அதன்பிறகு அதே உப்பங்கழியில் வேகமாக படகு ஓட்டிப் பயிற்சி எடுப்பார்கள்.
இப்படி அவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், ஆசிய விளையாட்டுப் போட்டி வந்தது. இந்தியா அதற்கு படகுப் போட்டி அணியை அனுப்பும் உத்தேசத்தில் இல்லை. தகுதிவாய்ந்த வீரர்கள் யாருமில்லை என்பதே நினைப்பாக இருந்தது.
இவர்களைப் பற்றிய செய்தி ஒன்று பத்திரிகைகளில் வெளியாக, அதைப் பார்த்து யாரோ ஒரு அதிகாரிக்கு ஆர்வம் வந்தது. அவரே கீழ்மட்ட அதிகாரிகளை அனுப்பி, இவர்களைக் கூட்டிவரச் செய்தார். இவர்கள் படகு ஓட்டும் விதத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். விளையாட்டுத் துறை உயர் அதிகாரிகளுடன் பேசி, இவர்களை போட்டிக்கு அனுப்பி வைத்தார்.
இந்தியா சார்பில் மற்ற போட்டிகளில் பங்கேற்கச் சென்ற வீரர்களுக்கு, இவர்கள் ஜோக்கர் போலத் தெரிந்தார்கள். பயிற்சியாளரும் இல்லை; நாகரிகமாக உடை உடுத்தவும் தெரியவில்லை; யாருடனும் பழகத் தெரியாத கிராமத்து ஆசாமிகளாக இருக்கிறார்கள்; மற்றவர்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதுகூட தெரியாமல் இருக்கிறார்களே என சிரித்தார்கள்.
ஆனால் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்படியாக, இந்த கத்துக்குட்டி டீம் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்து, வெண்கலப் பதக்கம் வாங்கியது. இந்திய அணியின் திறமையைப் பார்த்து வியந்துபோனது ஜப்பான் அணி. ஆண்டுக்கு ஒருமுறை இரண்டு அணிகளும் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தானது. இதேபோல பல அணிகளும் இந்திய அணியோடு மோதுவதற்கு போட்டி போட்டன.
‘கபடியும் கிரிக்கெட்டும் தவிர வேறு எதுவும் தெரியாத இந்தியாவில் இப்படி ஒரு திறமைசாலி இளைஞர் கூட்டமா’ என பத்திரிகைகள் பாராட்டின. ‘எதுவும் இல்லாமலே பதக்கம் வாங்கிய இவர்களுக்கு முறையாகப் பயிற்சி கொடுத்து, சகல வசதிகளும் செய்துகொடுத்தால் ஒலிம்பிக்கில்கூட சாதிக்கலாமே’ என விளையாட்டு அமைச்சர் கணக்கு போட்டார்.
உடனே அணிக்கு ஒரு வெளிநாட்டுப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டார். அவர் அங்கிருந்து வரும்போதே தனக்கு ஒரு உதவியாளர், கம்ப்யூட்டர் அனலிஸ்ட் என இரண்டு பேரோடுதான் வந்தார். அவர்களுக்கு கோடிகளில் சம்பளம். இதுதவிர, இந்திய அணியின் திறமையை மேம்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சி செய்து அறிக்கை தருவதற்கு ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்தக் கமிட்டி இந்தியா முழுக்க உள்ள நகரங்களுக்குச் சென்று, ஆங்காங்கே நட்சத்திர ஓட்டல்களில் தங்கி கூட்டங்கள் நடத்தியது. இரண்டுமுறை வெளிநாடுகளுக்கும் சென்று வந்தது. கடைசியில், ‘‘இந்திய அணியில் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிக்கலான நேரங்களில் அணிக்குத் தலைமை தாங்க, கேப்டன் இல்லை. அது பெரிய பலவீனம்’’ என்று அறிக்கை கொடுத்தது.
உடனடியாக ஒரு கேப்டனை நியமிக்கவும், அவர் இல்லாத போட்டிகளில் தலைமை தாங்க ஒரு துணை கேப்டனை நியமிக்கவும் முடிவானது. பயிற்சியாளரிடம் ஆலோசனை கேட்டபோது, ‘‘இவங்க எல்லாரும் கிராமத்து பசங்க. ஒருத்தருக்கு இன்னொருத்தர் ஃபிரண்டா இருக்காங்க. இதுல ஒருத்தனை கேப்டனா நியமிச்சா, மத்தவங்களை மிரட்டி வேலைவாங்க மாட்டான். அதனால வேற ஆளைப் போடுங்க’’ என்றார். உடனடியாக அணியிலிருந்து இரண்டு வீரர்களை நீக்கிவிட்டு, ஒரு கேப்டனையும் துணை கேப்டனையும் நியமித்தார்கள்.
சில நாட்களில் அடுத்த ஆலோசனை தந்தார் பயிற்சியாளர். ‘‘இந்தப் பசங்களுக்கு ஆங்கிலம் பேச வரவில்லை. நானும் கேப்டனும் துணை கேப்டனும் பேசறதே அவங்களுக்குப் புரியலை. நான் இவங்களுக்கு இங்கிலீஷ் கற்றுத் தருவதற்காக வரவில்லை. படகு ஓட்டக் கற்றுத் தர வந்தேன். பல நாடுகளுக்குப் போட்டிக்குப் போகணும். ஸ்டார் ஓட்டல்கள்ல தங்கணும். வெளிநாட்டு டி.விகளுக்கு பேட்டி தரணும். இது எதுவுமே இவங்களுக்குத் தெரியாது. இவங்களைத் தூக்கிட்டு, நல்லா நாகரிகமா பழகத் தெரிந்தவர்களை அணியில சேர்க்கணும்’’ என்றார் அவர்.
அதன்படியே நடந்தது. அடுத்த மாதம் ஜப்பான் அணி வந்ததும் போட்டி நடந்தது. ஜப்பான் அணி வெற்றிக்கோட்டை நெருங்கியபோது, இந்திய அணி பாதி தூரம்கூட கடந்திருக்கவில்லை. வெண்கலப் பதக்கம் வாங்கிய ஒரு அணிக்கு உள்ளூரில் இப்படி ஒரு நிலைமையா என எல்லோரும் விளாசித் தள்ளினார்கள். அப்புறம் ஆராய்ந்தபோதுதான் விஷயம் புரிந்தது… புதிய இந்திய அணியில் இருந்த வீரர்களுக்கு மற்ற எல்லாம் தெரிந்திருந்தது; ஆனால் படகு ஓட்டத் தெரியவில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu