உங்களுக்குப் பண ஆரோக்கியம் இருக்கிறதா?

உங்களுக்குப் பண ஆரோக்கியம் இருக்கிறதா?

உடல் ஆரோக்கியமாக இருக்க, உணவில் எல்லா சத்துகளும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும். புரதச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்பு என எல்லாமே அளவான விகிதத்தில் இருப்பது அவசியம். நமது சேமிப்பும் முதலீடும் இப்படி சரிவிகிதத்தில் இருந்தால்தான், பண விஷயத்தில் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். பாதுகாப்பு, வளர்ச்சி, அவசரத்துக்குக் கைகொடுப்பது என்று பல அம்சங்கள் கொண்டதாக இந்த டயட் இருக்க வேண்டும்.

* புரோட்டீன்: தசைகளைக் கட்டமைத்து உடலை நன்கு வளர்ச்சி பெறச் செய்கிறது புரோட்டீன். இளமையாக இருக்கும்போது, உடல் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும் பருவத்தில் புரோட்டீன் மிக முக்கியத் தேவை. வயதாக ஆக... புரோட்டீன் தேவையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால் எந்த வயதிலும் அதை முழுமையாகத் தவிர்க்க முடியாது. உங்கள் சேமிப்புப் பட்டியலில் இப்படி புரோட்டீன் போல முக்கியமாக இருக்க வேண்டியது, ஈக்விட்டி.

பங்குச்சந்தை முதலீடு உங்கள் பண டயட்டில் புரோட்டீன் போல இருக்கும். முதலீட்டை வளரச் செய்யும். இளமையில் துணிந்து பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். ரிஸ்க்கும் இருக்கும்; முதலீட்டுக்கு அதிக லாபமும் கிடைக்கும். அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் நேரடி முதலீடு செய்யாமல், மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீட்டைப் போடலாம். பொறுப்புகள் அதிகம் கழுத்தை நெரிக்காத இளமைப் பருவத்தில் இந்த முதலீட்டில் ஆர்வம் காட்டலாம். வயதாக ஆக, இந்த முதலீட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

* கொழுப்பு: உடல்நலம் கருதி ஒதுக்க வேண்டிய விஷயமாக கொழுப்பை எல்லோரும் தப்பாக நினைக்கிறார்கள். அது உண்மையில்லை. ஒவ்வொருவரும் உணவில் கொழுப்பைச் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உடலுக்கு எனர்ஜி தருவது கொழுப்புதான். அவசரத் தேவைக்கான உணவு சேமிப்பாக நமது உடல் ரிசர்வில் வைத்திருப்பதும் கொழுப்பையே! ஆனாலும் கொழுப்பை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு அதிகம் சேர்ந்தால், அது ஒட்டுமொத்த உடல்நலனையே பாதித்து, பல நோய்களைக் கொடுக்கும்.  

உங்கள் சேமிப்பில் கொழுப்பு போல அளவாக இருக்க வேண்டியது, தங்கம். பணவீக்கத்துக்கு எதிராக உங்கள் சேமிப்பைக் காப்பாற்றுவது தங்கம். அவசரத் தேவைகளுக்கு வங்கிக்கு அடமானத்துக்குப் போய் பலரைக் காப்பாற்றுவதும் தங்கம்தான். தங்கத்தை நகையாக வாங்கி சேமிப்பதைவிட, பார்களாக வாங்கி சேமிப்பது சேதாரத்தைத் தவிர்க்கும். அதைவிட சிறந்த முதலீடாக ‘தங்கப் பத்திரங்கள்’ வந்துவிட்டன. ‘பேப்பர் தங்கம்’ எனப்படும் இந்த தங்கப் பத்திரங்களில் செய்கூலி, சேதாரம் ஏதுமில்லை.

* நார்ச்சத்து: ஃபைபர் எனப்படும் நார்ச்சத்தே வயிற்றை நல்ல நிலையில் வைக்கிறது. நார்ச்சத்து நிறைந்த உணவு உங்களை கச்சிதமான அளவில் வைத்திருக்கும். தேவையில்லாமல் சதை போடாது. ஆனால், வெறும் நார்ச்சத்து மட்டுமே முழுமையான ஊட்டம் தந்துவிடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நிலையான வருமானம் தரும் கடன் பத்திரங்கள் இந்த நார்ச்சத்து போன்றவைதான். அரசு மற்றும் அரசுத்துறை நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கு உலக அளவில் நல்ல மதிப்பு உண்டு. இவற்றில் உங்கள் பணம் மோசம் போகும் அபாயம் மிக மிகக் குறைவு. ஆனாலும் ஒரு சீரான லாபத்துக்கு மேல் இதில் பெரிதாக வருமானம் இல்லை. இப்போது முதலீடு செய்யும் ஆயிரம் ரூபாய், வட்டியோடு சேர்ந்து ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும்போது, அப்போது ஆயிரம் ரூபாயின் மதிப்பு மிகவும் குறைந்திருக்கும். அதனால் இதில் அளவு முக்கியம்.

* மாவுச்சத்து: கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தே நமது உணவில் பெருமளவு இருக்கும். உடலின் இயக்கத்துக்கான சக்தி பெருமளவில் இதில்தான் கிடைக்கிறது. இதர கடின உணவுகளைச் செரிக்கச் செய்வதிலும் மாவுச்சத்தின் பங்கு பிரதானமானது.

நிலங்கள், வீடுகளில் செய்யப்படும் முதலீடு இப்படி நமது முதலீட்டில் பெரிய அளவானதாக இருக்க வேண்டும். நம்பகமானது; ரிஸ்க் குறைவு; நஷ்டம் வராது; மதிப்பு மிக்க முதலீடும்கூட. தங்கம் போலவே அவசரத்துக்குக் கைகொடுப்பது. ஆனாலும் அளவாகச் செய்யுங்கள்.

* ஐஸ்கிரீம்: ஒரு விருந்து முடித்த பிறகு ஐஸ்கிரீம் சாப்பிடுவது இப்போது வழக்கமாகி விட்டது. குளிர்காலம், உடம்புக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் என எத்தனை தடைகள் இருந்தாலும், அதையெல்லாம் மீறி ஐஸ்கிரீம் சாப்பிட ஆசை எழும். ஆனாலும் இதை அளவாகத்தான் சாப்பிட வேண்டும். விருந்து சாப்பாட்டுக்குப் பிறகுதான் இதை சாப்பிட வேண்டும்; விருந்துக்கு பதிலாக இதை சாப்பிடக் கூடாது.

இப்படித்தான் மாற்று முதலீடுகளும். பழங்கால கலைப்பொருட்கள், ஓவியங்கள், அரிய நாணயங்கள், என்.எஃப்.டி என அரிய பொருட்களில் முதலீடு செய்வது இப்போது நகர்ப்புறங்களில் பழக்கமாகி வருகிறது. உடனடியாக இந்த முதலீடு பணமாக திரும்ப கைக்கு வராது. ஆண்டுக்கணக்கில் காத்திருந்தால், பல மடங்கு லாபம் கிடைக்கும். ஆனால், வழக்கமாக செய்யும் முதலீடுகளுக்குப் பிறகு கூடுதலாக கையில் பணம் இருந்தால் மட்டுமே இந்த முதலீட்டு வழியை நாட வேண்டும்.

* வைட்டமின்கள்: மற்ற உணவுகள் சத்து தருபவை. இவற்றோடு உடல்நலனைப் பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கவும் நமக்கு வைட்டமின்கள் அவசியம். அப்படி பணப் பாதுகாப்பு வைட்டமின்களாக இருப்பவை இன்சூரன்ஸ் திட்டங்கள். உங்கள் பணத்தையும் சொத்துக்களையும் ஆரோக்கியத்தையும் காக்க இன்சூரன்ஸ் திட்டங்களை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டுக்கடன் வாங்கினால் அதற்கு ஒரு இன்சூரன்ஸ், மருத்துவத் தேவைகளுக்கு ஒரு இன்சூரன்ஸ், உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தனித்தனியாக உயர்ந்தபட்ச தொகைக்கு ஒவ்வொரு இன்சூரன்ஸ் என அவசியமான அளவுக்கு இன்சூரன்ஸ் எடுங்கள்.

இன்சூரன்ஸில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. உடல் நலமில்லை என்றால், டாக்டர் வைட்டமின் மாத்திரைகளைப் பரிந்துரைப்பார். அவற்றை உணவோடு சேர்த்து சாப்பிட வேண்டுமே தவிர, உணவுக்கு பதிலாக சாப்பிடக் கூடாது. அப்படித்தான் இன்சூரன்ஸ் பாலிசியும். முதலீடாக நினைத்து நிறைய தொகையை அதில் போடக் கூடாது. ரிஸ்க் கவர் மட்டுமே குறிக்கோளாக இருக்கும்படி பாலிசியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

* மினரல்கள்: உணவில் மினரல்கள் ஒரு மெல்லிய இழை போல சேர்ந்திருக்க வேண்டும். உடல் உறுதியாக இருப்பதற்கு மினரல்கள் அவசியம். ஆனால் அளவு அதிகமானால், உடலின் உள்ளுறுப்புகளை இவை பாதித்துவிடும். பண ஆரோக்கிய விஷயத்தில், கடன்கள்தான் மினரல்கள். அளவோடு இருக்கும்வரை கடன் நல்லது. வீட்டுக்கடன் இந்த ரகத்தில் அடங்கும். மிகக் குறைந்த வட்டியில் வாங்கப்படும் கடன் இது. வீட்டுக்கடனுக்கான வட்டியில் இரண்டு லட்சம் ரூபாய் வரை வருமான வரிச் சலுகை கிடைக்கும். அதோடு திருப்பிச் செலுத்தப்படும் அசல் தொகையில் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை உண்டு. இப்படி கடன் சில நன்மைகளையும் செய்கிறது. ஆனால் அதிக கடன், உங்கள் ஆரோக்கியத்தை மூழ்கடித்துவிடும்.     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu