சச்சினிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கர், ஒரு நீண்ட சகாப்தம் படைத்தவர். கிரிக்கெட் என்ற விளையாட்டை அறியாதவர்களும் வெறுப்பவர்களும்கூட சச்சினை அறிவார்கள். தன் விளையாட்டுத் திறமையால் மட்டுமின்றி, தனிமனித ஒழுக்கத்தாலும் இந்தியர்கள் அனைவரின் நல்மதிப்பையும் பெற்றவர். உதாரண புருஷர்களுக்கு வறட்சி நிலவும் தேசத்தில், இரண்டு தலைமுறை இளைஞர்கள் மனதில் நம்பிக்கை மிக்க ரோல்மாடலாக உருவெடுத்தவர்.

தேசம் முழுக்க அறியப்பட்ட பிரபலங்கள் இங்கே குறைவு. அதிலும் இந்தக் காலத்தில் புகழேணியின் உச்சியில் யாரும் பல காலம் நிலைத்திருக்க முடிவதில்லை. அடுத்தவர் வந்து ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்; அல்லது யாராவது காலைப் பிடித்து இழுத்து விடுகிறார்கள். ஆனாலும் கால் நூற்றாண்டு காலமாக இந்தியர்களின் இதயத்தில் இருந்தார் அவர். கிரிக்கெட் என்ற விளையாட்டில் தனக்கென ஒரு பாதை வகுத்துக்கொண்ட அவர், இதற்குமுன் யாரும் செய்திடாத பல சாதனைகளைப் படைத்தார். இனிவரும் காலங்களில்கூட அந்தச் சாதனைகளை முறியடிக்கக் கூடிய மனிதர்கள் வருவது கடினம் என்கிறார்கள்.

கிரிக்கெட் பழகும் சிறுவர்களுக்கு மட்டுமே சச்சினிடம் கற்றுக்கொள்ள விஷயங்கள் இல்லை... எல்லோருக்கும் அவரிடம் கற்றுக்கொள்ள சில முன்மாதிரி பழக்கங்கள் உண்டு.

கொஞ்சம் இங்கே...

  • ‘நல்ல பள்ளியில் பிள்ளையைச் சேர்க்க வேண்டும். எப்போதும் படிப்பு... படிப்பு... படிப்பு... என பிள்ளை இருக்க வேண்டும். எவ்வளவு கஷ்டமான கேள்விகளுக்கும் பதில் எழுதும் திறமை வந்துவிட்டால் போதும். வாழ்க்கையில் ஜெயிக்கவும் பணம் சம்பாதித்து முன்னுக்கு வரவும் அதுதான் வழி’ என்ற நினைப்பே நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு இருக்கிறது. வகுப்பில் நாற்பது பேர் இருந்தால், பத்து பேர்தான் டாப் 10 இடங்களுக்குள் வர முடியும். அப்படியானால், மற்ற 30 பேரும் வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களா?

‘அப்படி இல்லை’ என நிரூபித்ததுதான் சச்சினின் வெற்றி! பள்ளிப் படிப்பை முழுமை செய்ததில்லை அவர். ஆனால் கிரிக்கெட்டில் அவர் அளவுக்கு ஜெயித்தவர்கள் யாரும் இல்லை; அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் எப்போதும் முன்னணியில் இருந்தார். ‘படிக்க வேண்டாம்; கிரிக்கெட் விளையாடினால் போதும்’ என்பதல்ல அவர் வாழ்க்கை சொல்வது! நீங்கள் நேசிக்கும் ஒரு விஷயத்தை அர்ப்பணிப்போடு கற்றுக்கொண்டு, அதை முழுமனதோடு செய்தால் போதும்... அதில் சிகரங்களைத் தொடும் கனவு சாத்தியமாகும் என்பதே சச்சினின் சாதனைகள் சொல்லும் விஷயம்!

  • சொல் அல்ல; செயல்தான் உங்களை யார் என அடையாளம் காட்டுகிறது. அடித் தொண்டையில் கத்தி, கைகளை ஆட்டி ஆட்டி பேசி, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது பலருக்கு புரியவும் புரியாது. சிறந்த தகவல்தொடர்பு முறை என்ன தெரியுமா? உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை செயலில் காட்டி உணர்த்துவதுதான். சச்சின் மிகச் சிறந்த பேச்சாளர் அல்ல; அவரால் உறுதியான குரலில் பேசவும் முடியாது. அதனால் அவர் வாயால் அதிகம் பேசவில்லை; அவரது பேட்டே அதிகம் பேசியது. எனவே சொல்லாதீர்கள்; செய்து காட்டுங்கள்!
  • ஒரு குழுவில் நீங்கள்தான் மிகச்சிறந்த திறமைசாலி என்பதற்காக, நீங்கள்தான் அந்தக் குழுவுக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களால் மட்டுமே அந்தக் குழுவுக்கு வெற்றி தேடித் தரமுடியும் என்பதில்லை. யாரோ ஒருவர், உங்களை விட திறமையும் தகுதியும் குறைந்த ஒருவர் உங்களுக்கு மேலே இருந்துகொண்டு கட்டளைகள் பிறப்பிக்கக் கூடும். ஆனாலும், உங்கள் பங்கை உன்னதமாக செய்தீர்கள் என்றால், நீங்கள்தான் அந்தக் குழுவில் அதிக புகழோடு இருப்பீர்கள்.

சச்சின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்; ஆனால் தான் திறமையான கேப்டன் இல்லை என்பதைப் புரிந்துகொண்டதும் விலகி வழிவிட்டார். அவரைவிட வயதிலும் அனுபவத்திலும் குறைந்த கங்குலி, டிராவிட், டோனி, ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங் என பலரும் கேப்டனாக இருந்த அணியில் அவர் ஒரு சாதாரண வீரராக இருந்தார். ஆனால் எப்போதும் தன் பங்களிப்பை நூறு சதவீதம் அர்ப்பணிப்போடு செய்ததால், அவருக்குத்தான் நட்சத்திர அந்தஸ்து எப்போதும் இருந்தது. உங்களைவிட வயதிலும் அனுபவத்திலும் குறைந்த யாரோ உங்களுக்கு முதலாளியாகவோ, மேனேஜராகவோ இருந்துகொண்டு கட்டளைகள் பிறப்பிக்கலாம். இதில் மனம் நொந்துகொள்வதற்கு எதுவுமில்லை. உங்கள் வேலையை முழுமையாகச் செய்தால், உயர்வு தேடி வரும்.

  • நீங்கள் ஒரு வேலையைச் செய்ய தீர்மானித்து விட்டீர்கள். அதை மற்ற யாரையும்விட சிறப்பாக உங்களால் செய்யமுடியும் என நம்புகிறீர்கள். தயக்கமே இல்லாமல் களத்தில் இறங்கி விடுங்கள். ‘இந்த வயதில், இந்த சூழலில் இது சாத்தியமா?’ என மற்றவர்கள் கேட்கும் கேள்விகளை காதில் வாங்காதீர்கள். சச்சின் 16 வயதில் கிரிக்கெட் ஆட வந்தபோது, ‘மிரட்டும் வேகப்பந்து வீச்சாளர்களை இவர் சமாளிப்பாரா’ என கேட்டவர்கள் உண்டு; 40 வயதிலும் அவர் ஆடியபோது, ‘இன்னும் ஏன் ரிட்டயராகவில்லை’என கேட்டவர்களும் உண்டு. இரண்டுக்குமே அவர் தன் விளையாட்டால்தான் பதில் சொன்னார். இளமையில் வேகத்தோடு விளையாடினார்; முதுமையில் அனுபவ முதிர்ச்சியைக் காட்டினார். உங்கள் வேலையில் நீங்களும் இப்படி இரண்டின் கலவையாக இருங்கள்.
  • நீங்கள் அழகாக இல்லை, உயரமாக இல்லை என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. உங்கள் வேலையை உன்னதமாகச் செய்து பெயர் வாங்கிவிட்டால் போதும்... பலரும் உங்களை ரோல் மாடலாக நினைப்பார்கள். அழகோ, உடல்தகுதியோ ஒருவர் விரும்பப்படுவதற்குக் காரணமாக இருக்காது; திறமை மட்டுமே உங்களை உயர்த்தும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu