‘‘நீ நீயாக இரு!’’

‘‘நீ நீயாக இரு!’’

நூற்றுக்கணக்கான மேடைகளில், ஆயிரக்கணக்கான மக்களையும் மாணவர்களையும் சந்தித்து, லட்சக்கணக்கான இளைய தலைமுறையினருக்கு உந்துசக்தியாக இருந்து, கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களில் வாழும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் ஒவ்வொரு உரையும் தன்னம்பிக்கை உரம் தரும். அவரது தாய்மண்ணில் அமைந்த முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் ‘நீ நீயாக இரு’ என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய உரையின் சில பகுதிகள்:

‘‘தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு யார் வருகிறார்? தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களைப் பார்த்தவுடன் நம் மனதில் யார் வருகிறார்கள்? ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியை பார்க்கும்போது அலெக்சாண்டர் கிரகாம் பெல் நம் மனதில் தோன்றுகிறார்.

‘ஏன் கடலின் நிறமும், அடி வானத்தின் நிறமும் நீலமாக இருக்கிறது’ என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை. ஆனால் லண்டனிலிருந்து கொல்கத்தாவிற்கு பயணம் செய்யும்போது ஒரு விஞ்ஞானியின் மனதில் அந்தக் கேள்வி எழுந்தது. அதற்கான பதில்தான் ‘ஒளிச்சிதறல்’. அதுதான் சர். சி.வி.ராமனுக்கு ‘ராமன் விளைவு’க்கான நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. ‘அஹிம்சா தர்மம்’ என்ற ஆயுதத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று உலகிற்கே அஹிம்சா தர்மத்தை போதித்தவர் மகாத்மா காந்தியடிகள்.

எனவே, ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறது. எதற்குத் தெரியுமா, உங்களையும் மற்றவர்களைப் போல் ஆக்குவதற்காக. ‘அந்த மாய வலையில் நான் விழ மாட்டேன், நான் நானாக இருப்பேன்’ என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அதாவது, ‘நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம்’ என்பதுதான் அதன் அர்த்தம்.

நமக்கு வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். நமது எண்ணம் உயர்வாக இருந்தால் அரும் பெரும் லட்சியங்கள் தோன்றும்; பெரும் லட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும்; எண்ணம் உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.

நான் ஒரு கிராம சூழ்நிலையில் வளர்ந்தேன், படித்தேன். வளர்ந்தேன், வளர்ந்துகொண்டே இருக்கிறேன். நம் நாட்டில் 75 கோடி மக்கள் 6 லட்சம் கிராமங்களில் வாழ்கிறார்கள். கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும் உங்களால் வெற்றியடைய முடியும்.

என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 5-ம் வகுப்பு படிக்கும்போது நானும், என் இனிய நண்பன் ராமசாமியும் பக்கத்தில் உட்கார்ந்து இருப்போம். எங்கள் இருவரது குடும்பத்திற்கும் பல்வேறு நிலையில் வேற்றுமைகள் இருந்தாலும், ஓர் ஒற்றுமை இருந்தது. அது எங்களுடைய பெற்றோர்கள் நண்பர்கள் என்பதுதான். எனவே, நாங்களும் நண்பர்களாக இருந்தோம். நானும், என் நண்பனும் படிப்பிலும் எண்ணங்களிலும் ஒரே விதமாக செயல்பட்டோம். பரீட்சை சமயத்தில் பகல் நேரங்களில் என்னுடைய வீட்டில் நாங்கள் இருவரும் சேர்ந்து படிப்போம். இரவில் அவரது வீட்டில் சேர்ந்து மின்சார ஒளியில் ஒன்றாகப் படிப்போம். அவரது வீட்டில்தான் மின்சாரம் இருந்தது. படித்துப் படித்து முன்னேறினோம். தடைகள் எங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கவில்லை.

பினாச்சியோ என்ற பிரெஞ்சு கவிஞர் சொல்கிறார். ‘நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை! நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்!’

மாணவர்களே! உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. கனவு காண்பது ஒவ்வொரு குழந்தையின், இளைஞனின் வாழ்வில் ஒரு முக்கியமான விஷயம். வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும். தொடர்ந்து அறிவைப் பெற, அதைத் தேடிச் சென்றடைய வேண்டும், விடா முயற்சி வேண்டும். அதாவது, தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும்.

அறிவைப் பெற்று அறிவார்ந்த சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்றால் அதற்கான அறிவின் இலக்கணம் என்ன என்று பார்ப்போம். அறிவின் இலக்கணம் என்ன தெரியுமா? அதற்கு மூன்று தன்மைகள் அவசியம். அந்த சமன்பாட்டை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அறிவு = கற்பனை சக்தி + மனத்தூய்மை + உள்ள உறுதி.

கற்பனை சக்தியானது சிந்திக்கும் திறனைத் தூண்டுகிறது. சிந்தனை அறிவை வளர்க்கிறது. அறிவு உன்னை மகான் ஆக்குகிறது. கற்பனை சக்தி உருவாவதற்கு குடும்ப சூழ்நிலையும், பள்ளி சூழ்நிலையும்தான் மிக முக்கிய காரணங்களாக அமையும். அந்த சூழ்நிலை உருவாவதற்கு ஒவ்வொருவரது உள்ளத்திலும் மனத்தூய்மை வேண்டும். எண்ணத்திலே மனத்தூய்மை இருந்தால் நடத்தையில் அழகு மிளிரும். நடத்தையில் அழகு மிளிர்ந்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் அமைதி இருந்தால் நாட்டில் சீர்முறை உயரும். நாட்டில் சீர்முறை இருந்தால் உலகத்தில் அமைதி நிலவும். எல்லாவற்றுக்கும் அடிப்படை மனத்தூய்மை! இந்த மனத்தூய்மை எங்கிருந்து வரும்? மூன்றே மூன்று பேரிடம்தான் இதைக் கற்றுக்கொள்ள முடியும். அவர்கள்தான் தாய், தந்தை மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்.

உள்ள உறுதி இளைய சமுதாயத்தின் சிறப்பான அஸ்திவாரம் ஆகும். நண்பர்களே! உள்ளத்தில் உறுதி வேண்டும் என்று சொன்னேன். அது எப்படி வரும்? யார் மூலம் வரும்? நல்ல மனிதர்கள், நல்ல ஆசிரியர்கள், நல்ல புத்தகங்கள்... இவையே உள்ளத்தில் உறுதி பெற வைக்கும். அது இருந்தால் நாம் எக்காரியத்தையும் செய்யலாம், செய்ய முடியும், செய்து வெற்றி பெற முடியும் என்ற உறுதியும், நம்பிக்கையையும் அளிக்கிறது. மனதில் உறுதி இருந்தால் வெற்றி அடைவீர்கள்.

கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக!’’

- கலாம் தன்னம்பிக்கை பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu