தினம் ஒரு கதை - 93

தினம் ஒரு கதை - 93

அவர் போன மாதம்தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். தன் மனைவியை அழைத்துக் கொண்டு வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தார். இருவரும் விலங்குகளையும் பறவைகளையும் ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்படி புலியையும் பார்க்க நின்றிருந்தார்கள். அங்கே நான்கு புலிகள் சிறு மைதான அமைப்பில் சுற்றித் திரிந்தன. திடீரென்று அவருக்கு போன் வரவே, அங்கிருந்து நகர்ந்து பேசச் சென்று விட்டார். பாதுகாப்புக் கம்பியைப் பிடித்துக் கொண்டு அவர் மனைவி மட்டும் நின்று கொண்டிருந்தார். அந்தப் பக்கம் புலிகள் கம்பி வலையை ஒட்டி நடந்து கொண்டிருந்தன. இந்த 52 வயதுப் பெண் அதை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தார். புலியிடம் பேசிப் பார்த்தார்.

‘‘ஏய் புலி, ஏன் வேலி ஓரமாய் நிற்கிறாய்? என்னைக் கடித்துத் தின்னவா?’’ வேடிக்கையாய் கேட்டார்.

‘‘இல்லை... இல்லை... என் சுதந்திரத்தை நிச்சயம் செய்து கொள்வதற்காக!’’

‘‘உனக்குப் பேச வருமா?’’

‘‘என்னை நம்பியும் மதித்தும் பேசினால் நானும் பேசுவேன். மனிதர்கள் நீங்கள்தான் என்னை ஓர் உயிராக மதிப்பதே இல்லையே. வேடிக்கை பார்க்கும் பொருளாகத்தானே நினைக்கிறீர்கள்.’’

‘‘சுதந்திரத்தை நிச்சயம் செய்வது என்றால் என்ன? கொஞ்சம் சொல்லேன்!’’

‘‘எங்கள் நால்வருக்கும் உள்ளே தனித்தனி கூண்டு இருக்கிறது. பிறகு உலவித் திரிய இந்த மைதானம் இருக்கிறது. இதன் எல்லை வரை நாங்கள் உலவாமல் விட்டால், ‘புலிகளுக்கு இவ்வளவு இடம் தேவையில்லை’ என்று எங்கள் கம்பிவேலியை இன்னும் உள்ளே தள்ளி, தங்குமிடத்தை மனிதர்கள் குறுக்கி விடுவார்கள்.’’

‘‘ஓஹோ!’’

‘‘அதனால் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தினம் தினம் நிச்சயம் செய்து கொள்வோம். எல்லா உயிரும் இதைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், சுதந்திரத்தை அடக்கி ஆளும் உயிர்கள் அவர்களின் வெளியைக் குறுக்கி விடுவார்கள்.’’

இதைக் கேட்டு அந்தப் பெண் ஆழ்ந்த மௌனத்துக்குள் போய்விட்டார். இப்போது புலி கேட்டது. ‘‘என்ன நீங்கள் அமைதியாகிவிட்டீர்கள்?’’

‘‘ஆம் புலியே! நானும் உன்னைப் போல செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.’’

‘‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் அம்மா?’’

‘‘முதலில் காலையில் நானும் என் கணவரும்தான் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தோம். ஆனால் நான்தான், ‘காலை நடைபயின்று பின் வீடு திரும்பி காலை உணவும் சமைப்பது கடினமாய் இருக்கிறது’ என்று நடைப்பயிற்சியை விட்டு விட்டேன். இப்போது அவர் மட்டும் நடைப்பயிற்சி செய்து, அவர் நண்பர்களுடன் அரட்டையடித்து, அன்றைய பேப்பரும் காய்கறியும் வாங்கி வருவார். நானோ காலையில் எழுந்து வியர்வை புழுக்கத்தில் உணவு சமைக்க வேண்டும். அதிலும் அவருக்கு தினம் தினம் சூப் வேறு போட்டுக் கொடுக்க வேண்டும். நீ சொல்லும் ‘சுதந்திரத்தை நிச்சயம் செய்து கொள்ளுதல்’ கருத்துப்படி நானே என் வெளியை குறுக்கி வைத்திருக்கிறேன் புலி.’’

‘‘ஆம் அம்மா. உங்கள் கணவரும் நீங்களும் சேர்ந்து நடை பயின்று பின் வீடு திரும்பி சேர்ந்து சமைத்திருக்க வேண்டும். அவரை அப்படிப் பழக்கி இருக்க வேண்டும். அதை விடுத்து நீங்களே உங்கள் சுதந்திர வெளியை சுருக்கிக் கொண்டு அவஸ்தைப்படுகிறீர்கள். இப்போது கூட ஒன்றும் குறைந்து போகவில்லை. அவருக்கு உங்கள் சுதந்திர வெளியைக் காட்டுங்கள். புரிய வையுங்கள். அதிகப்படியான தியாகம் உங்களுக்கு மனப்புழுக்கத்தையே கொடுக்கும். முடிவில் உங்கள் குடும்பம் மீதே உங்களுக்கு வெறுப்பு வரும். உங்களுக்கான ஆசுவாசத்தை நீங்கள்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். வேறு யாரும் கொடுக்க மாட்டார்கள்’ என்றது புலி.

அன்று மாலை அப்பெண் சுறுசுறுப்பாக ட்ராக் பேன்ட்டை போட்டுக் கொண்டார். ஒரு விளையாட்டுப் பயிற்சி ஷூவை மாட்டிக் கொண்டார். டி ஷர்ட் அணிந்து கொண்டார். ‘‘ஏங்க, நான் வாக்கிங் போயிட்டு வர்றேங்க’’ என்றார்.

கணவர் ஆச்சர்யத்தோடு பார்த்து, ‘‘சரிம்மா, போயிட்டு வா’’ என்றார்.

கேட்டை தாழிடும்போது மனைவி சொன்னார். ‘‘ஆங், மறந்தே போயிட்டேன். அந்த சிகப்பு டப்பால கோதுமை மாவு இருக்கும். அதை ஒரு பாத்திரத்துல போட்டு தண்ணி விட்டு கொஞ்சம் உப்பு போட்டு கரைச்சிக்கோங்க. நான் வாக்கிங் போயிட்டு வந்த பிறகு தக்காளி தொக்கு வச்சி, நைட்டு ஆளுக்கு ரெண்டு தோசையா சுட்டு சாப்பிடலாம்’’ என்றார். கணவர் ‘சரி’ என்று தலையாட்டினார்.

அந்தப் பெண்மணி உற்சாகமாய் அருகில் உள்ள பார்க்கில் மெல்லிய ஓட்ட நடை செய்தார். எதிர்காற்று முகத்தில் பட்டு அவர் உடல் மற்றும் மனப்புழுக்கம் எல்லாம் நீக்கி ஆசுவாசப்படுத்திற்று. மனதுக்குள் புலிக்கு நன்றி சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu