தினம் ஒரு கதை - 126

தினம் ஒரு கதை - 126

உயர்கல்வி படிப்பதற்காக சிறு நகரம் ஒன்றிலிருந்து சென்னை வந்தார் அந்த இளம்பெண். ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் அறை எடுத்து தங்கிக் கொண்டார். தினமும் காலையில் எழுந்து ஹாஸ்டலில் கொடுக்கும் உணவை உண்டு விட்டு கல்லூரி செல்ல ஆரம்பித்தார். அங்கே பல ஆண், பெண் நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் மிக கண்ணியமாக பழகினார்கள். இவரும் கண்ணியமாகப் பழகினார்.

இரண்டு மாதங்கள் வாழ்க்கை சிறப்பாக சென்றது. அதன்பிறகு இரவுகளில் தனிமையும் வெறுமையும் வாட்ட ஆரம்பித்தது. இரவு  எட்டரை மணிக்கு சாப்பிட்டு முடித்து விட்டால் 11 மணி வரை என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. டி.வி பார்க்க போரடித்தது. மொபைல் பார்க்க போரடித்தது. புத்தகம் படிக்க போரடித்தது. அறைத் தோழி அதிகமாய் பேசாதவர் என்பதால் அவரிடமும் எதையும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை.

அப்போது அவர் பிறந்த நாள் வந்தது. ஊரிலிருந்து வந்த அண்ணன் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்தான். ஸ்மார்ட் போன் வந்த பிறகு அவர் வாழ்க்கையே மாறிவிட்டது. எட்டரை மணிக்குத் தொடங்கினால் இரவு ஒரு மணி வரை நண்பர்களுடன் சமூக வலைதளங்களில் அரட்டை அடித்தார். நேரம் போவதே தெரியவில்லை.

அதிலும் ஆண் நண்பர்கள் அன்பாகப் பேசுவதை அதிகம் ரசித்தார். குறிப்பிட்ட எல்லை தாண்டி அவர்கள் அன்பாகப் பேசும்போது பேச்சை மாற்றிவிடுவார். ஆனால் மனம் படபடவென்று அடித்து அந்த அன்பை ரசித்துக் கொண்டிருக்கும். ஓர் ஆண் நண்பர் மூலம் அறிமுகமாகும் இன்னொரு நண்பர் என்று அவர் நட்பு வட்டாரம் பெருகி விட்டது. எப்போதும் அவர் வாட்ஸ் அப் எண்ணுக்கு நிறைய செய்திகள் வந்து கொண்டே இருந்தன. எல்லாமே ஆண் நண்பர்களின் அக்கறையான அன்பு விசாரிப்பு செய்திகள்தாம். ‘நம் மீது இத்தனை அன்பா’ என்று வியந்து அதையெல்லாம் ரசித்துக் கொண்டே இருந்தார். அடுத்த மூன்று மாதங்கள் இப்படி போனது.

முதல் செமஸ்டர் வந்தது. எழுதிய ஐந்து பாடங்களில் மூன்று பாடங்களில் ஃபெயிலாகி விட்டார்.

இதில்லாமல் இவரிடம் பழகிய ஆண் நண்பர்கள், இப்பெண் ஓர் எல்லைக்கு மேல் அனுமதிக்காதது கண்டு சலிப்புற்று அவரை விட்டு விலக ஆரம்பித்தனர். தான் தூய்மையான நண்பராக  நினைத்திருந்த பலர் தன்னை விட்டு விலக ஆரம்பித்தது கண்டு இவர் கடும் துயரம் அடைந்தார். சிலரிடம் அப்பாவியாக, ‘‘ஏன் என்னை விட்டு விலகுகிறீர்கள்?’’ என்று கேட்டார்.

மொத்தத்தில் அவர் மனம் ஆயிரம் துண்டுகளாக உடைந்து சிதறியது. தன் யதார்த்த வாழ்க்கையை வாழமுடியாமல் திணறினார்.

ஒருநாள் அறையில் படுத்து கண்களில் கண்ணீர் கசிய வருந்திக் கொண்டிருக்கும்போது சுவரைப் பார்த்தார். அதில் எறும்புகள் வரிசையாக நகர்ந்து உணவு சேகரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். கோபத்தில் கையை வைத்து இப்படியும் அப்படியும் அந்த எறும்புக்கூட்டத்தில் அடித்தார். எறும்புக் கூட்டம் சிதறியது. திரும்பிப் படுத்துக் கொண்டு கண்ணை மூடி தூங்க முயற்சி செய்தார். சுடுநீரில் குளித்தால் மன அழுத்தம் குறையும் என்று நினைத்தார். போய் சுடுநீரில் குளித்து திரும்பி மறுபடியும் படுக்கப் போகும்போது கவனித்தார். அந்த எறும்புகள் எல்லாம் மறுபடியும் அதே வரிசையை ஏற்படுத்தி நகர்ந்து கொண்டிருந்தன. இவருக்கு சுளீரென்று இருந்தது.

‘சின்னஞ்சிறிய எறும்புகளே எவ்வளவு இடையூறு வந்தபோதும், அதையெல்லாம் கடந்து தம் லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போது, ஆறறிவுடைய நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? நான் சென்னைக்கு என்ன லட்சியத்துக்காக வந்தேன். இப்போது எவ்வளவு தவறு செய்து கொண்டிருக்கிறேன். இல்லை இனிமேல் இத்தவறை செய்ய மாட்டேன்’ என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

எட்டரை மணிக்கு தன் மொபைலை அணைத்து விட்டு புத்தகங்களை எடுத்துப் போட்டு வெறித்தனமாக குறிப்பெடுத்து படிக்க ஆரம்பித்தார். அன்றிரவு அவர் மனம் நிம்மதியாகி மிக அமைதியாக தூங்கியும் போனார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu