காந்தியை மாற்றிய கதைகள்!

காந்தியை மாற்றிய கதைகள்!

எந்த சூழலிலும் உண்மை பேசுவதும், பெரியோரையும் பெற்றோரையும் மதித்து அன்பு செலுத்துவதும் மகாத்மா கற்றுத் தந்த அடிப்படைப் பாடங்கள். பள்ளி வயதிலேயே இதையெல்லாம் அவர் கற்றுக்கொள்ள காரணமாக அமைந்தது இரண்டு சம்பவங்கள். தன் வாழ்க்கை வரலாறான ‘சத்திய சோதனை’ நூலில் அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் தங்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி வேறு புத்தகங்கள் எதையேனும் படித்தால் பல பெற்றோர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அப்படிப் படிக்க விடாமல் தடுக்கின்றனர். நல்ல கருத்துகளைச் சொல்லும் காட்சிகளையும் குழந்தைகள் பார்க்க முடிவதில்லை. இவைதான் அவர்களின் குணங்களைச் செதுக்குகின்றன என்று தன் வாழ்க்கையின் வழியே சொல்கிறார் மகாத்மா.

‘என் பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் படிப்பதில் எனக்குப் பொதுவாக விருப்பம் இருந்ததில்லை. அன்றாடம் பாடங்களைச் சரிவரப் படித்து விட வேண்டும் என்று உறுதியாக இருப்பேன். ஏனெனில், சரியாகப் படிக்காததற்காக ஆசிரியரின் கண்டன தண்டனைகளுக்கு ஆளாவது எனக்குப் பிடிக்காது. அதுமட்டுமில்லை, ஆசிரியரை ஏமாற்றவும் நான் விரும்பவில்லை. பாடங்களைப் படிக்கவே நேரம் சரியாக இருக்கும்போது மேற்கொண்டு வேறு புத்தகங்களைப் படிப்பது என்பதற்கே இடமில்லை’ என்று குறிப்பிடுகிறார் மகாத்மா.

என்றாலும், ஒரு நூல் மகாத்மாவைக் கவர்ந்தது. காந்தியின் அப்பா கரம்சந்த் காந்தியிடம் ‘சிரவணபித்ரு பக்தி நாடகம்’ என்னும் நூல் இருந்தது. அது இளம் காந்தியை மிகவும் கவர்ந்தது. புத்தகத்தை அவர் பலமுறை படித்தார். அச்சமயத்தில் படக்காட்சி நடத்துபவர்கள் சிலர் ராஜ்காட்டிற்கு வந்தார்கள். சிரவணபித்ரு பக்தி நாடகக் காட்சிகளைப் படமாக்கிக் காட்டினர். பார்வை இழந்த தாய், தந்தையரை, சிரவணன் காவடியில் வைத்துக்கொண்டு தூக்கிச் செல்வதை இளம் காந்தி படக்காட்சியாகப் பார்த்தார். அக்காட்சி அவர் மனத்தை விட்டு அகலவே இல்லை. அந்திமக் காலத்தில் பெற்றோரை எப்படி அக்கறையோடு கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு சிரவணனின் கதை அவருக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்தது.

அந்த சமயத்தில் ஒரு நாடகக் கம்பெனி காந்தியின் ஊரில் அரிச்சந்திர நாடகத்தை நடத்தியது. தந்தையிடம் அனுமதி பெற்று இந்த நாடகத்தைக் காணச் சென்றார் காந்தி. அரிச்சந்திரனின் சத்தியம் தவறாத வாழ்வு அவர் மனதை உருகச் செய்தது. சத்தியத்தின் பாதையில் சென்றதால் அரிச்சந்திரன் அடைந்த துன்பங்களையும், அத்தனை துயரங்களையும் தாங்கிக் கொண்டு அவர் சத்தியம் தவறாமல் வாழ்ந்ததையும் கண்டு காந்தி மனம் உருகினார்.

தன் சுயசரிதையில் அதுபற்றி எழுதியிருக்கிறார். ‘எண்ணற்ற சமயங்களில் எனக்குள் நானே அரிச்சந்திரனாக நடித்திருப்பேன். அரிச்சந்திரனைப் போல எல்லோரும் ஏன் சத்தியசீலர்கள் ஆகக்கூடாது என்று அல்லும் பகலும் என்னை நானே கேட்டுக்கொள்வேன். சத்தியத்தைக் கடைபிடிப்பதும், அதற்காக அரிச்சந்திரன் அனுபவித்த துன்பங்களையெல்லாம் அனுபவிப்பதுமாகிய லட்சியமே ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியது. அரிச்சந்திரனின் கதையை நினைத்து பல சமயங்களில் அழுதும் விடுவேன். அரிச்சந்திரன் சரித்திர புருஷனாக இருந்திருக்க முடியாது என்று என் பகுத்தறிவு இன்று எனக்குக் கூறுகிறது. என்றாலும், என்னைப் பொறுத்தவரையில் அரிச்சந்திரனும், சிரவணனும் வாழ்வின் உண்மைகள்’ என்று குறிப்பிடுகிறார் மகாத்மா.

சிரவணன் கதையும் அரிச்சந்திரன் கதையும் காந்தியின் மனசாட்சிகளாக இருந்து அவரை வழிநடத்தின. எதிர்கால மகாத்மாவை இளவயதிலேயே அவை செதுக்கின. ‘சில நேரங்களில் ஒரு உயரிய அழைப்பிற்கு நீங்கள் செவி மடுத்திருக்க முடியும். அந்த அழைப்பின் பெயர் மனசாட்சி. அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டதற்காக நீங்கள் கொடுத்த விலை கசப்பான கண்ணீராக இருந்திருக்கும், அதற்கும் மேலானதாக இருந்திருக்கலாம். வாழ்வில் எதை அரிதாக நினைத்தீர்களோ அதைக்கூட இழந்திருக்கலாம். ஆனாலும் மனசாட்சியின் குரலுக்குப் பணியுங்கள்’ என்கிறார் காந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu