எதைக் கற்றுக்கொள்கிறோம்?

எதைக் கற்றுக்கொள்கிறோம்?

பிறக்கும்போது எல்லோருமே நல்லவர்கள்தான். இளம் வயதில் வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகள்தான் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து ஒருவரைச் செதுக்குகின்றன. அந்தச் சம்பவங்களில் கற்றுக்கொள்ளும் பாடங்கள்தான் வாழ்வின் போக்கை நிர்ணயிக்கின்றன. ஒருவர் சாதனையாளர் ஆவதும், சோர்ந்து ஒதுங்குவதும், அரிதாகச் சிலர் மகத்தான மனிதர்கள் ஆவதும் இந்தச் சம்பவங்களின் தாக்கத்தால் நிகழ்வதே! எல்லோரையும் போல மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாகப் பிறந்தவரை, நம் தேசமே தந்தையாகக் கருதும் ‘மகாத்மா’ ஆக்கிய சம்பவங்கள் பல. அவற்றில் ஒன்று பற்றி அவரே விவரிக்கிறார்...

          ‘எனக்குச் சுமார் ஏழு வயது இருக்கலாம். என் தந்தையார் எங்கள் சொந்த ஊரான போர்பந்தரிலிருந்து ராஜ்கோட்டுக்குச் சென்றார். அங்கே என்னை ஓர் ஆரம்பப் பாடசாலையில் சேர்த்தார்கள். அந்த நாட்களில் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களின் பெயர் உட்பட எல்லா விவரங்களுமே எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றன. போர்பந்தரில் இருந்ததைப் போன்றே இங்கும் என்னுடைய படிப்பைப் பற்றி முக்கியமாகக் குறிப்பிடக்கூடியது எதுவுமில்லை. நடுத்தர மாணவனாகவே இருந்தேன். இந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து நகரை அடுத்திருந்த ஒரு பள்ளிக்கு என்னை அனுப்பினார்கள்.

          12 வயதாகியபோது என்னை உயர்தரப் பள்ளியில் சேர்த்தனர். இந்தக் குறுகிய காலத்தில் எனது ஆசிரியர்களிடமோ, பள்ளி நண்பர்களிடமோ ஒரு பொய்யேனும் எப்பொழுதும் நான் சொன்னதாக எனக்கு ஞாபகமில்லை.

          எனக்குக் கூச்சம் அதிகம், யாருடனும் சேரமாட்டேன். எனது புத்தகங்களும், எனது பாடங்களுமே எனக்கு உற்ற தோழர்கள். சரியான நேரத்தில் பள்ளிக்கூடத்துக்குப் போய்விடுவது, பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டுக்கு ஓடிவந்துவிடுவது... இதுவே என் அன்றாடப் பழக்கம். யாருடனும் பேசவே பிடிக்காது என்பதால், உண்மையில் ஓட்டமாகத்தான் வீடுவந்து சேருவேன். இல்லாவிட்டால் வழியில் யாராவது என்னைக் கேலி செய்து விடுவார்களோ என்று பயம்.

      உயர்தரப்பள்ளியில் படித்த முதல் ஆண்டில் தேர்வின்போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதை நிச்சயம் நான் குறிப்பிட வேண்டும். கல்வித் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் கைல்ஸ் என்ற அதிகாரி பள்ளிக்கூடத்தைச் சோதனை செய்வதற்காக வந்திருந்தார். எழுத்துக் கூட்டி எழுதும் பயிற்சிக்காக அவர் எங்களுக்கு ஐந்து சொற்களைக்கூறி அவற்றை எழுதச் சொன்னார். அதில் ஒரு சொல் ‘கெட்டில்’ (Kettle). அதை நான் தவறாக எழுதிவிட்டேன். எங்கள் ஆசிரியர் தன் கால் பூட்ஸ் முனையால் என் காலைச் சீண்டித் தூண்டினார். நான் புரிந்துகொள்ளவில்லை. என் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பையனின் சிலேட்டைப் பார்த்து அந்த வார்த்தையின் எழுத்துகளைக் காப்பியடிக்க அவர் என்னைத் தூண்டுகிறார் என்பதை நான் அறியவில்லை. நாங்கள் பக்கத்துப் பையனைப் பார்த்துக் காப்பி அடிக்காமல் கண்காணிப்பதற்காகவே ஆசிரியர் அங்கே இருக்கிறார் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். இதன் பலன் என்னவெனில், என்னைத் தவிர மற்ற எல்லாப் பிள்ளைகளும் அந்த வார்த்தையைச் சரியாக எழுதியிருந்தனர். நான் ஒருவனே முட்டாளாக இருந்துவிட்டேன். இந்த முட்டாள்தனத்தை நான் உணரும்படிச் செய்வதற்கு ஆசிரியர் பிறகும் முயற்சி செய்தார். ஆனால் அதனாலும் பயனில்லை. காப்பி அடிக்கும் வித்தையை நான் என்றுமே கற்றுக்கொள்ள முடியவில்லை.

          என்றாலும் எனது ஆசிரியரிடம் நான் கொண்டிருந்த மதிப்பை இச்சம்பவம் கொஞ்சமும் குறைத்துவிடவில்லை. பெரியவர்களிடம் இருக்கும் குறைகளைக் காண்பதில் குருடனாகவே இருந்துவிடுவது எனது சுபாவம். இதே ஆசிரியரிடம் வேறு பல குறைபாடுகளையும் பின்னால் நான் அறிய நேரிட்டது. என்றாலும், அவரிடம் நான் வைத்திருந்த மதிப்பு மட்டும் குறையவே இல்லை. ஏனெனில், பெரியவர்களின் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டு, அவர்களுடைய செய்கைகளைக் கவனிக்காமல் இருந்துவிட நான் கற்றுக் கொண்டிருந்தேன்’ என்று தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார் காந்தி.

பள்ளியில் சராசரி மாணவனாக இருந்தபோதும், தேசம் நேசிக்கும் தலைவராக காந்தியால் ஆக முடிந்தது. காரணம், அவர் சத்தியத்தின் பக்கம் நின்றதும், பெரியோரை மதித்ததும்! அவரிடமிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu