அன்பின் பாதையில்…

அன்பின் பாதையில்…

காந்தியின் இளம் வயது நண்பர் ஒருவர், சுருட்டு பிடிக்கும் வழக்கமுடையவர். அவருடன் சேர்ந்ததால் காந்திக்கும் இந்தக் கொடிய பழக்கம் தொற்றிக்கொண்டது. பிரிட்டிஷ்காரர்களைப் பார்த்து, ‘சுருட்டு பிடிப்பதே நாகரிகம்’ என்ற நினைப்பு அப்போது இந்தியாவில் வசித்த மேல்தட்டு மக்களுக்கு இருந்தது. காந்தியும் தன்னை நாகரிக இளைஞனாக காட்டிக் கொள்ள முயன்றார். கூடவே அசைவ உணவும் பழகினார்.
இதனால் காந்தியின் செலவுக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. கடைகளிலும் நண்பர்களிடமும் கடன் வாங்கினார். கடனை அடைப்பதற்குப் பணம் தேவைப்பட்டதும் என்ன செய்வது என்று யோசித்தார். வீட்டில் காசு திருடினார். அதுவும் போதவில்லை. அதன்பின் தனது அண்ணனின் தங்கக் காப்பிலிருந்து ஒரு பகுதியை வெட்டி எடுத்தார்.
ஆனால், ‘தான் செய்யும் செயல் எவ்வளவு கேவலமானது’ என நினைத்துப் பார்த்தபோது தாங்க முடியாத துயரம் அவர் மனதைக் கவ்வியது. ‘இக்குற்றம் என்னால் பொறுக்க முடியாததாயிற்று. இனி திருடுவதே இல்லை என்று முடிவு கட்டிக் கொண்டேன். செய்த குற்றத்தை என் தந்தையாரிடம் ஒப்புக் கொண்டு விடுவது என்றும் தீர்மானித்தேன். ஆனால், சொல்லத் துணிவு வரவில்லை. என் தந்தையார் என்னை அடிப்பார் என்று பயப்படவில்லை. எங்களில் யாரையுமே அவர் அடித்ததாக எனக்கு ஞாபகமில்லை. அவருக்கு நான் உண்டாக்கக்கூடிய மனவேதனையைக் குறித்தே அஞ்சினேன். ஆனால், எல்லாவற்றையும் அவரிடம் சொன்னால்தான் பாவம் தீரும் என்று கருதினேன்’ என தன் சுயசரிதையில் எழுதியிருக்கிறார் காந்தி.
ஒரு கடிதமாக எல்லாவற்றையும் எழுதி, ‘நான் செய்த குற்றங்களுக்குத் தகுந்த தண்டனை அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அப்போது அவரது தந்தை கரம்சந்த் காந்தி உடல்நலமின்றி படுத்த படுக்கையாக இருந்தார். தந்தையிடம் சென்று கடிதத்தைக் கொடுத்த காந்தி, தண்டனையை எதிர்நோக்கி அருகில் நின்றிருந்தார். படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தபடி கரம்சந்த் கடிதத்தைப் படித்தார்.
‘அவர் முழுவதையும் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்து காகிதத்தை நனைத்தது. ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டு சிந்தித்தார். பிறகு கடிதத்தைக் கிழித்தெறிந்தார். திரும்பவும் படுத்துக் கொண்டார். நானும் கதறி அழுதேன். என் தந்தையார் அனுபவித்த வேதனையை நான் காண முடிந்தது. முத்து போன்ற அந்த அன்புத்துளிகள் என் உள்ளத்தைச் சுத்தப்படுத்தி, என் பாவத்தையும் அலம்பிவிட்டன. அத்தகைய அன்பை அனுபவித்தவர்கள் மட்டுமே, அது இன்னது என்பதை அறிய முடியும். இதில் தந்தையின் அன்பைத் தவிர வேறு எதையும் நான் அப்பொழுது காணவில்லை. ஆனால் இன்றோ, அதுதான் சுத்தமான அகிம்சை என்று அறிகிறேன். அத்தகைய அகிம்சை எல்லாவற்றிலும் பரவி விடும்போது. அது தொட்டதையெல்லாம் தன்மயமாக்கி விடுகிறது. அதனுடைய சக்திக்கு எல்லையே இல்லை’ என்றார் காந்தி.
‘தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்பவர்களை மன்னிக்க வேண்டும்’ என்பதே கரம்சந்த் காந்தியின் எண்ணமாக இருந்தது. இதையே காந்திஜி ‘அகிம்சை’ என்று உணர்ந்தார். அன்பால் எதையும் வெல்லலாம் என்பதே அகிம்சையின் ஆணிவேர். அகிம்சையை காந்திஜியின் மனதில் ஆழ வேரூன்றச் செய்தது இந்தச் சம்பவமே! ‘அகிம்சை’ என்பதையே ஆயுதமாக்கி, உலகின் மாபெரும் வல்லரசாக அப்போது இருந்த பிரிட்டனை காந்திஜி எதிர்த்தார்.
தன் வாழ்வில் நடந்த எல்லா விஷயங்களையும் இப்படி வெளிப்படையாகச் சொல்வதற்கு பெரும் துணிச்சல் தேவைப்படும். காந்தியிடம் அது இருந்தது. தன்னைப் பற்றிய எல்லா குறைகளையுமே காந்தியே சுயசரிதையில் எழுதியிருக்கிறார். அதனை வேறு யாரும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. இதுவரை காந்தியின் ஒரு குறையைக்கூட காந்தி சொல்லாமல் வேறு யாரும் கண்டுபிடித்ததே கிடையாது.
‘மகாத்மா’ என்கிற பட்டம் காந்தியடிகளுக்குப் பெருமை சேர்த்தது என்பதைவிட, காந்தியடிகளின் வாழ்வே ‘மகாத்மா’ என்கிற உயரிய சொல்லுக்கு சரியான விளக்கமாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu