தினம் ஒரு கதை - 26

குரு ஒருவர் சீடர்களோடு நடை பயணம் மேற்கொண்டிருந்தார். வழியில் ஒரு நாய் தாகத்தில் மயக்கமாகி, மூச்சிரைத்துக் கிடந்தது. ஒரு சொட்டு நீரை யாராவது அதன் வாயில் ஊற்றி விட மாட்டார்களா என்று காத்துக் கிடந்தது.

அதைப் பார்த்த குரு தன் சீடர்களிடம், ‘‘அருகில் ஒரு கிணறு இருக்கிறது. அதிலிருந்து யாராவது நீர் எடுத்துவந்து அதன் தாகம் தணியுங்கள்’’ என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்துவிட்டார்.

கிணற்றில் நீர் எடுக்கப் போன சீடர்கள், அந்த இடத்தில் ஏதோ விவாதித்துவிட்டுத் திரும்பினார்கள்.

‘‘என்ன?’’ குரு கேட்டார்.

‘‘அங்கே கிணறு இருக்கிறது. ஆனால் அதில் நீரை எடுக்க வாளி இல்லை. அதனால்...’’

‘‘அதனால்?’’

‘‘நாயின் தாகத்தைத் தீர்க்க முடியவில்லை’’ என்றார்கள்.

‘‘நீங்கள் அனைவரும் அங்கே பாருங்கள்’’ என்றார் குரு.

அங்கே ஒரே ஒரு சீடன் மட்டும் நாயின் நிலையைக் கண்டு அதிகம் உணர்ச்சிவசப்பட்டான். நாயை எடுத்து மடியில் வைத்துக் கொண்டான். கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். எப்படியாவது அதன் தாகத்தை தணித்துவிட வேண்டும் என்ற ஆவேசம் அவன் நடவடிக்கைகளில் தெரிந்தது.

திடீரென்று யோசனை வந்தவனாக, காட்டுக்கொடிகளைப் பறித்து இணைத்தான். இணைத்த கொடியில் தன் மேலாடையைக் கழற்றிக் கட்டினான். அதை அப்படியே கிணற்றில் தூக்கிப் போட்டான். கொடியை மேலே இழுத்து, நனைந்த ஆடையை எடுத்து நாயின் வாயருகே பிழிந்தான். நீர் பரவி நாயின் தாகம் அடங்கிற்று. நாய் எழுந்து சுறுசுறுப்பானது. நாய் வாலை ஆட்டிக் கொண்டு அவனோடு வந்தது.

‘‘நீங்கள் அனைவரும் நாய்க்கு உதவி செய்ய வேண்டும் என்று மட்டுமே நினைத்தீர்கள். ஆனால், அவன் நாயின் இடத்தில் தன்னை வைத்து அதன் தவிப்பைப் புரிந்து கொண்டான். அதனாலேயே அவனுக்கு தண்ணீரை எடுக்கும் யுத்தி தெரிந்தது’’ என்றார் குரு.

‘உயிர்களை மனதிலிருந்து நேசிக்க வேண்டும்’ என்பதைத் தெரிந்து கொண்ட சீடர்கள், குருவுக்கு நன்றி சொன்னார்கள்.

crossmenu