தினம் ஒரு கதை - 9

நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், கல்லூரி முதல்வர் முன்பு தயக்கத்துடன் நின்றார்கள்.

‘‘சார், உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும். நீங்க முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பை கவனித்து, குறிப்பு எடுத்ததைப் பார்த்தோம்...’’

அந்தக் கல்லூரியில் வகுப்புகள் உரைகளாகத்தான் நடக்கும். யார் வேண்டுமானாலும் எந்த வகுப்பிலும் போய் உரைகளைக் கேட்டுக் கொள்ளலாம்.

‘‘ஆம், எனக்கொரு சந்தேகம் அதனால் போய் கற்றுக்கொண்டேன்’’ என்றார் கல்லூரி முதல்வர்.

‘‘நாங்களே முதலாம் ஆண்டு வகுப்புகள் எதையும் கவனிக்க மாட்டோம். ஏன், மூன்றாம் ஆண்டு வகுப்புகளுக்குக்கூட போக மாட்டோம். நீங்கள் ஏன் சார் முதலாம் ஆண்டு வகுப்புக்குச் சென்று கவனிக்கிறீர்கள்?’’

முதல்வர் ஏதும் சொல்லாமல் அனைவரையும் கல்லூரியில் இருக்கும் காய்கறித் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே தக்காளிச் செடிகள் காய்த்திருந்தன.

‘‘இந்த தக்காளிப் பழங்களைப் பாருங்கள். அவை முழுதாய் பழுத்துவிட்ட பிறகு அழுகத் தொடங்குகின்றன. அது இயற்கையின் நியதி. மனிதன் எப்போது தான் கற்று முடித்து விட்டதாக நினைக்கிறானோ, அப்போதே அழுக ஆரம்பித்து விடுகிறான். நான் என் வாழ்க்கையில் கற்று முடித்து விட்டதாக நினைத்ததே இல்லை’’ என்றார்.

கற்பது தொடர்ச்சியான விஷயம் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த மாணவர்கள் முதல்வருக்கு நன்றி சொல்லிக் கிளம்பினர்.

crossmenu