தினம் ஒரு கதை - 13
ஓர் இளவரசன் வேட்டைக்குச் சென்றான். போன இடத்தில் வழிதவறி அங்கும் இங்கும் அலைந்து, பழைய பாழடைந்த சிறு கட்டிடம் ஒன்றில் ஒதுங்கினான். உள்ளே மூவர் மெல்லிய குரலில் பேசுவது கேட்டது.
முதல் குரல் சொன்னது, ‘‘நான்தான் நெருப்பு. ஒருவேளை நான் பிரிந்து போய்விட்டால், தூரத்தில் தெரியும் புகையை வைத்து என்னை அடையாளம் கண்டு வந்து சேருங்கள்.’’
இரண்டாம் குரல், ‘‘நான்தான் நீர். ஒருவேளை வழிதவறி நான் பிரிந்து போய்விட்டால், எந்த இடத்தில் பச்சைப் பசேல் என்று செடி, கொடிகள் செழித்து வளர்ந்திருக்கிறதோ, அதை அடையாளம் கண்டு என்னிடம் வந்து சேருங்கள்’’ என்றது.
மூன்றாம் குரலோ, ‘‘நான் ஒருவரை விட்டுப் பிரிந்தால் மறுபடியும் அவரை அடையவே மாட்டேன். என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவும் முடியாது. பிரிந்தது பிரிந்ததுதான்’’ என்றது.
இளவரசனுக்குக் குழப்பம்.
முதல் குரல், ‘நெருப்பு’ என்றது. இரண்டாம் குரல், ‘நீர்’ என்றது. மூன்றாம் குரல் மட்டும் தான் யார் என்று சொல்லவில்லையே! ‘அவர் யாராய் இருக்கும்’ என்ற ஆர்வத்தில் உள்ளே சென்று, ‘‘யாரப்பா நீ? பெயரைச் சொல்லாமல் பேசுகிறாய்?’’ என்று கேட்டான்.
அதற்கு மூன்றாம் குரல், ‘‘என் பெயர் ‘நம்பிக்கை’ இளவரசே!’’ என்றது.
ஒருவருக்கு நம் மேல் உள்ள நம்பிக்கை போனது என்றால் போனதுதான்; திரும்ப வரவே வராது என்ற உண்மையை இளவரசன் கண்டுகொண்டான்.