தினம் ஒரு கதை - 92

தினம் ஒரு கதை - 92

ஆறாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவனுக்கும் அவன் அம்மாவுக்கும் அன்று கடுமையான வாக்குவாதம் வந்தது. அப்பாவால் கூட இருவரையும் விலக்கி விட முடியவில்லை.

நடந்தது இதுதான். அன்று அச்சிறுவனுக்கு விடுமுறை. ஆனால் அம்மாவுக்கும் அப்பாவுக்கு அலுவலகம் உண்டு. விடுமுறை நாள்தானே என்று காலை ஆறு மணிக்கு எழுந்து வீடியோ கேம் ஆடிக் கொண்டிருந்தான். ஆறு மணிக்கு எழுந்த அம்மாவும் அவனை பார்த்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவன் வீடியோ கேமை விட்டு எழுந்திருக்கவில்லை.

அலுவலகம் செல்லும் முன் கோபத்தில் அம்மா வெடித்து விட்டார். ‘‘ஏம்பா... இப்படி வீடியோ கேம் விளையாடிட்டு இருக்கியே? கண்ணு கெட்டுப் போயிடாதா?’’

‘‘அம்மா! கண்ணை அதிகம் உபயோகப்படுத்துறதால கண்ணு கெட்டுப் போகாதும்மா’’ என்று அவன் ஏட்டிக்குப் போட்டியாக பதில் சொன்னான்.

‘‘சரிப்பா. கொஞ்ச நேரம் பாடம் படிக்கலாம் இல்ல?’’

‘‘நான் என்ன பாடம் படிக்கலை? எல்லாமே முழுசா படிச்சி உங்க கிட்ட ஒப்பிச்சி எழுதியும் காட்டிட்டேனே!’’

‘‘இல்லப்பா, நான் அதைச் சொல்ல வரலை!’’

‘‘இல்லம்மா, உங்களுக்கு என் மேல இப்பல்லாம் வெறுப்பு இருக்கு. இப்படித்தான் எரிஞ்சி எரிஞ்சி விழுறீங்க.’’

இதைத் தொடர்ந்து அம்மாவுக்கும் மகனுக்கு கொதிப்பான வார்த்தைப் பரிமாற்றங்கள் நடந்தன. முடிவில் அவன், ‘‘இப்பல்லாம் உங்களைப் பாத்தாலே எனக்குப் பிடிக்கலை. எப்பவும் என்னை அதிகாரம் பண்ணிட்டே இருக்கீங்க’’ என்று கத்தினான்.

இதைக் கேட்டதும் அம்மா அதிர்ந்து போனார். அவர் கண்கலங்கியபடி அலுவலகம் சென்று விட்டார். ‘சரி, விடு... விடு...’ என்று சொன்னபடி அப்பாவும் போய்விட்டார்.

இருவரும் போன பிறகு சாப்பிட உட்கார்ந்தான். அங்கே அவனுக்குப் பிடித்த ஆப்பமும் குருமாவும் இருந்தன. இன்னொரு பாத்திரத்தைத் திறந்து பார்த்தான். விடுமுறையில் வீட்டில் இருக்கும் அவன் சாப்பிடுவதற்கு சுழியனும், பருப்பு வடையும் அம்மா செய்து வைத்திருக்கிறார்.

அதையெல்லாம் சாப்பிட்டபோது அம்மாவின் அன்பு பற்றி அவன் மனம் உருகியது. ‘‘ச்சே! ஆத்திரத்தில் அம்மாவை எவ்வளவு மனக்கஷ்டப்படுத்தி விட்டோம்’’ என்று வருந்தினான். மாலை அம்மா அலுவலகத்திலிருந்து வரும்போது ஏதாவது செய்ய நினைத்தான்.

வீட்டில் பிரெட் இருந்தது. அதில் இரண்டை எடுத்து, வெண்ணெய், ஜாம் எல்லாம் தடவினான். பாதாம் பருப்பை மிகப்பொடியாகத் துருவி நடுவே வைத்தான். இன்னும் இரண்டு பிரெட் துண்டுகள் எடுத்து, அவற்றில் மிளகு, தக்காளி சாஸ் தடவி, வெங்காயம், குடமிளகாய், வெள்ளரிக்காய் எல்லாம் வைத்து சாண்ட்விச் செய்தான். மாலையில் அம்மா வருவதற்கு முன் டீ போட்டான்.

அன்று அம்மா சீக்கிரம் வந்துவிட்டார். அவர் முகம் சோர்வாக இருந்தது. காலையில் நடந்த எதையும் விவாதிக்கவில்லை. இவனும் எதுவும் நடக்காத மாதிரி ஒரு டவலைக் கொடுத்து, ‘‘அம்மா, முகம் துடைச்சிக்கோங்க’’ என்றான். அவர் புதிராகப் பார்த்தபடி முகம் துடைத்தார்.

ஒரு ட்ரேயில் சாண்ட்விச்களையும் டீயையும் எடுத்துக்கொண்டு கவனமாக நடந்துவந்த செல்ல மகனைப் பார்த்து அம்மா மனம் நிறைந்து விட்டது. அதை உண்ணும்போது ஒரு நொடி அவர் முகம் மாறியது. ஆனாலும் சட்டென்று இரண்டையும் சாப்பிட்டு முடித்து, டீ குடித்தார். மகனின் சமையல் சூப்பர் என்று புகழ்ந்தார்.

தன் அம்மா ஏன் சாண்ட்விச் சாப்பிடும்போது ஒரு நொடி தயங்கினார் என்ற கேள்வி அன்றிரவு அவனைத் தூங்கவிடாமல் செய்தது. இரவு இரண்டு மணிக்கு எழுந்து பிரெட் கவரைப் பார்த்தான். அதிர்ந்தான். அது ஒருநாள் முன்பே காலாவதியான பிரெட்.

மறுநாள் ஞாயிறு. அம்மா எழுந்து குளித்து முடித்து வந்தார். இவன் அப்பாவோடு விளையாடிக் கொண்டிருந்தான். அம்மாவைப் பார்த்து, ‘‘அம்மா, உன் வயிற்றுக்கு எதுவுமில்லையே?’’

‘‘ஏன் அப்படி கேக்குற செல்லம்?’’

‘‘காலாவதி ஆன பிரெட்ல செய்த சாண்ட்விச்சை தெரிஞ்சே எப்படிம்மா சாப்பிட்டீங்க?’’

‘‘என் மகன் செய்து தந்தா நான் எதை வேண்டுமானாலும் சாப்பிடுவேன் செல்லம். பாசத்துக்கு ஏது லாஜிக்?’’

‘‘ஐ லவ் யூ அம்மா’’ என்று அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டான். அன்று இரவு இரண்டு மணியிலிருந்து ஐந்து மணி வரை கண்விழித்து வரைந்த ஓவியத்தை அம்மாவுக்குக் கொடுத்து, ‘‘இனிய அன்னையர் தின வாழ்த்துகள்’’ என்று வாழ்த்தினான்.

அம்மா மகனை வாரி அணைத்துக் கொண்டாள். அந்த ஓவியத்தின் வண்ணங்கள் எல்லாம் குடும்பத்தின் மனித உணர்வுகளாக மிளிர ஆரம்பித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu