தினம் ஒரு கதை - 8

‘‘இவ்வளவு குறைவான படைகளை வைத்திருக்கும் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள். அதிக படைபலத்தை வைத்திருக்கும் நான் ஏன் தோற்கிறேன்?’’ என்று மன்னரிடம் பக்கத்து நாட்டு மன்னர் நட்பாகக் கேட்கிறார்.

‘‘அடுத்தமுறை போர் நடக்கும்போது நீங்களும் ஒரு படைவீரனாக வேடமிட்டு வந்தால் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்’’ என்கிறார் மன்னர்.

சில நாட்களில் கிழக்கு திசை நாட்டிலிருந்து ஒருவர் போர் தொடுத்து வருகிறார்.

விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் பக்கத்து நாட்டு அரசரும் ஒரு படைவீரனாக வேடமிட்டு சிறிய படை கொண்ட மன்னரின் வீரர்களோடு நிற்கிறார்.

போர் நடந்து கொண்டிருக்கும்போதே எதிரி மன்னரின் தந்திர வியூகத்தால் எதிரி படையினர் நாலா பக்கமும் சூழ்ந்து விடுகின்றனர்.

படைவீரனாக வேடமிட்டிருக்கும் பக்கத்து நாட்டு மன்னருக்கு உடம்பெல்லாம் நடுங்குகிறது. ‘நேருக்கு நேர் எதிரி வந்தால் சமாளிக்கலாம். நாலா பக்கமும் வந்து சூழ்ந்துகொண்டால் என்ன செய்வது’ என்று திகைக்கிறார்.

ஆனால் போரிடும் மன்னர் பதறவில்லை. அவர் கணீரென்று உரத்த குரலில், ‘‘படை வீரர்களே, வெற்றி நாயகர்களே, நாலா பக்கமும் எதிரி வரும் சூழலை இதுவரை நாம் சந்தித்ததில்லை. நாலாபுறமும் ஒரே சமயத்தில் எதிரிகளைத் தாக்கி வெல்ல இதுவே நமக்கு கிடைத்த அபூர்வமான தருணம். விடாதீர்கள். வெல்லுங்கள்’’ என்று ஊக்கமாக ஆணையிடுகிறார்.

இதைக் கேட்ட படைவீரர்கள் உற்சாகமாகி நாலா பக்கமும் சூழ்ந்த எதிரிகளை சிதறடித்து வெற்றி பெறுகிறார்கள்.

‘எப்படிப்பட்ட சிக்கல் வந்தாலும் எதிர்மறையாகப் பேசாத குணம்தான் வாழ்க்கையில் வெற்றியைக் கொடுக்கும்’ என்பதை கற்றுக் கொண்டு விடைபெற்றார், படைவீரர் வேடமணிந்த பக்கத்து நாட்டு மன்னர்.

crossmenu