தினம் ஒரு கதை - 28 

அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கனிடம் அவர் நண்பர் ஒருவர் வேதனையுடன் வந்தார்.

எப்போதும் வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பதாக புலம்பினார். அழுதார்.

இனிமேல் தன்னால் ஆகக்கூடியது எதுவுமில்லை என்று இயலாமையை வெளிப்படுத்தினார்.

நண்பர் பேசப் பேச, லிங்கன் கரும்பலகையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.

‘‘நான் வேதனையுடன் புலம்பிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஆறுதலோ யோசனையோ சொல்லாமல் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்க எப்படி மனம் வந்தது?’’ என்று உரிமையுடன் கோபித்துக்கொண்டார் நண்பர்.

‘‘என் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளை இங்கே எழுதி இருக்கிறேன், படியுங்கள்’’ என்றார் லிங்கன்.

நண்பர் படித்தார்...

‘‘ஆபிரகாம் லிங்கனாகிய நான் 10 வயதில் தாயை இழந்தேன். 21 வயதில் வியாபாரத்தில் தோல்வியுற்றேன். 22 வயதில் தேர்தலில் மோசமாகத் தோற்றேன்.

24 வயதில் காதலியை இழந்தேன். 27 வயதில் நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டேன். 
34 வயதில் உட்கட்சித் தேர்தலில் தோற்றேன். 
45 வயதில் செனட்டராகும் வாய்ப்பு மறுக்கப்பட்டேன்.

47 வயதில் துணை ஜனாதிபதியாகும் வாய்ப்பை இழந்தேன். 
49 வயதில் மறுபடியும் செனட்டராகும் வாய்ப்பை இழந்தேன். ஆனால், 52 வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனேன்.’’

இதை வாசித்து விட்டு நண்பர் உற்சாகம் அடைந்தார். ‘வாழ்வில் இத்தனை தோல்விகளை அடைந்த மனிதரே இவ்வளவு முன்னேறி இருக்கிறார் எனும்போது நம்மாலும் சாதிக்க முடியும்’ என்ற தன்னம்பிக்கையைப் பெற்றார்.

‘‘வாழ்க்கையில் நானும் ஜெயித்துக் காட்டுவேன் நண்பரே’’ என்று ஆபிரகாம் லிங்கனிடம் சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.

crossmenu