தினம் ஒரு கதை - 18

இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

ஒருவன் கையில் அழகான கூழாங்கற்களை வைத்திருந்தான். இன்னொருவன் விதம்விதமான சாக்லேட்கள் வைத்திருந்தான்.

‘‘என்னிடம் இருக்கும் எல்லா கூழாங்கற்களையும் உனக்குக் கொடுத்து விடுகிறேன். அதற்கு பதிலாக உன்னிடம் இருக்கும் சாக்லேட்கள் அனைத்தையும் கொடுத்து விடுகிறாயா’’ என்று முதல் சிறுவன் கேட்டான்.

சாக்லேட் வைத்திருந்த சிறுவன் சம்மதித்து, தன்னிடம் இருந்த எல்லா சாக்லேட்களையும் கொடுத்துவிட்டான். அதற்கு பதிலாக கூழாங்கற்களை வாங்கிக் கொண்டான்.

அன்று இரவு சாக்லேட் கொடுத்த சிறுவன் நிம்மதியாகப் படுத்துத் தூங்கினான். காரணம், அவன் தன் கையில் இருந்த அனைத்து சாக்லேட்களையும் கொடுத்து விட்டான்.

கூழாங்கல் கொடுத்த சிறுவன் நிம்மதியாகத் தூங்கவில்லை. காரணம், அவன் தன்னிடம் இருந்ததில் மிக அழகான கூழாங்கல் ஒன்றை ஒளித்து வைத்துக்கொண்டு, கொடுக்காமல் ஏமாற்றிவிட்டான்.

‘நாம் பிடித்த கூழாங்கல்லை ஒளித்து ஏமாற்றியது போல, அவனும் ஏதாவது சுவையான சாக்லேட்டை மறைத்து ஏமாற்றி இருப்பானோ?’ என்று யோசித்து யோசித்தே தூக்கம் தொலைத்தான்.

மறுநாள் அந்தக் கூழாங்கல்லைக் கொடுத்து மன்னிப்பும் கேட்ட பிறகுதான் அவனால் தூங்க முடிந்தது. 

நாம் பிறருக்கு என்ன செய்கிறோமோ அதைத்தான் பிறரும் நமக்கு செய்வதாகத் தோன்றும். ஆகையால் எப்போதும் பிறரிடம் நேர்மையாகவே இருக்க வேண்டும் என்பதை அவன் கற்றுக் கொண்டான்.  

crossmenu