தினம் ஒரு கதை - 17

மிதிலை நாட்டில் சில துறவிகளுக்கு அந்த சந்தேகம் இருந்ததை நாரதர் கண்டுபிடித்துவிட்டார்.

என்ன சந்தேகம்?

‘மன்னர் ஜனகர் சுகமாக எல்லாவற்றையும் அனுபவித்து, வேளா வேளைக்கு விருந்து உண்டு, பட்டு மெத்தையில் படுத்துறங்கி ராஜ வாழ்க்கைதானே வாழ்கிறார். ஏன் அவரை பெரும் துறவி என்று எல்லோரும் அழைக்கிறார்கள். அவர் எப்படி துறவியாவார்?’

அப்படி சந்தேகப்பட்ட துறவிகளை எல்லாம் நாரதர் விருந்துக்கு அழைத்தார்.

மூன்று நாட்கள் தொடர்ச்சியான விரதத்தால் முனிவர்கள் கடும் பசியில் இருந்தார்கள். விருந்து ஆரம்பமாயிற்று. முனிவர்கள் தத்தம் இலையின் முன் அமர்ந்தார்கள். சிறப்பான விருந்து பரிமாறப்பட்டது.

அதை சாப்பிடும்போதுதான் முனிவர்கள் கவனிக்கிறார்கள், ஒவ்வொருவர் இலையின் மேலேயும் ஒரு முடி தொங்கிக் கொண்டிருக்கிறது. அது மாதிரி ஓர் ஏற்பாட்டை நாரதர் செய்திருந்தார்.

விருந்து முடிந்ததும் நாரதர் கேட்டார், ‘‘என்ன முனிவர்களே!விருந்து அருமையாய் இருந்திருக்குமே.’’

‘‘இல்லை நாரதரே... நாங்கள் எங்கே விருந்தை ரசித்துச் சாப்பிட்டோம்? இலையின் மேல் தொங்கிக் கொண்டிருந்த முடியை அல்லவா கவனித்துக் கொண்டிருந்தோம்’’ என்றனர்.

நாரதர், ‘‘அது போல தான் முனிவர்களே! ஜனக மன்னர் அரச போகங்களை அனுபவிப்பது மாதிரி மேலோட்டமாகத் தெரிந்தாலும், இலைக்கு மேலே தொங்கிய முடியையே நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தது போல இறைவனையும் மக்கள் நலனையும் தர்மத்தையும் நோக்கிக் கொண்டே இருக்கிறார்’’ என்று சொன்னார்.

எவ்வளவு சுகமான வாழ்க்கை கிடைத்தாலும், அடிப்படை அறத்தைப் பின்பற்றுவது முக்கியம் என்பதை முனிவர்கள் புரிந்து கொண்டனர்.  

crossmenu