தினம் ஒரு கதை - 14

வேட்டைக்குப் போன இளவரசன், திரும்பி வரும்போது ஒரு முதியவரைத் தன் தேரில் கட்டி இழுத்து வந்தான்.
மக்கள் ‘ஏன்?’ என்று கேட்டார்கள்.
‘‘இவர் என்னை ‘மடையன்’ என்று சொல்லிவிட்டார்’’ என்றான் இளவரசன்.
‘‘நாட்டின் இளவரசனையே மடையன் என்று சொல்லிவிட்டாரா? இவரை தண்டிக்க வேண்டும்’’ என்று மக்கள் கிளர்ச்சியில் இறங்கி விட்டார்கள்.
மக்களின் கிளர்ச்சியைப் பார்த்து, முதியவருக்கு மரண தண்டனை விதிப்பதாக மன்னர் அறிவித்தார். அந்த முதியவரை மக்கள் முன்பாக நிறுத்தி தண்டனை கொடுக்க முடிவு செய்கிறார்கள்.
தண்டனையை நிறைவேற்றப் போகும் நேரத்தில், மன்னரின் தாயும், இளவரசனின் பாட்டியுமான ராஜமாதா வருகிறார். ‘‘நிறுத்துங்கள்’’ என்கிறார்.
அனைவரும் குழப்பமாக ராஜ மாதாவைப் பார்க்கிறார்கள். அவர் முதியவரைப் பார்த்து, ‘‘ஐயா! ஏன் இளவரசனை ‘மடையன்’ என்றீர்கள்?’’ எனக் கேட்டார்.
‘‘ராஜமாதா! நான் காட்டில் விறகு சேகரித்துக் கொண்டிருந்தேன். மரங்களில் தொங்கும் பழங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்த இளவரசர், கீழே சீறிக்கொண்டு இருந்த கருநாகத்தை கவனிக்காமல் மிதிக்கப் போனார். அப்போதுதான் எச்சரித்து, ‘மடையா, காட்டுக்குள் தரையைப் பார்த்து நட’ என்றேன்’’ என அவர் சொன்னார்.
ராஜமாதா இளவரசனைப் பார்க்க, ‘‘முதியவர் சொன்னது உண்மை’’ என்றான் அவன்.
மக்களைப் பார்த்த ராஜமாதா, ‘‘இந்த முதியவர் நம் இளவரசனின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார். ஆனால் இளவரசன் அதை மறைத்து, பாதி உண்மையை மட்டும் சொல்லி உங்களை கொதிப்படைய வைத்திருக்கிறார். பாதி உண்மை என்பது பொய்யை விட மோசமானது. தீர விசாரிக்காமல் எந்த முடிவையும் எடுக்காதீர்கள்’’ என்றார்.
தீர விசாரிப்பதன் நன்மையை உணர்ந்த மக்கள், ராஜ மாதாவையும் அந்த முதியவரையும் வணங்கினர்.