தினம் ஒரு கதை - 127

தினம் ஒரு கதை - 127

ஓர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அந்த இளைஞன், தன்னுடன் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவரைக் காதலித்தான். முதலில் தயங்கியவன் பிறகு தைரியத்தை வளர்த்துக் கொண்டு தன் காதலைச் சொல்லிவிட்டான்.

அவள் அந்தக் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. அதே சமயம் அவன் காதலைச் சொன்னதைக் குற்றமாகவும் கருதவில்லை. ‘‘நீங்கள் காதலிப்பது உங்கள் உணர்வு. ஆனால் எனக்கு உங்களைப் பற்றி அதிகம் தெரியாது. எனக்கு உங்கள் மேல் எந்தக் காதல் உணர்வும் இல்லை’’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டாள்.

இதைக் கேட்டு அவன் சிறிது சோர்ந்து போனான். நண்பர்களிடம் சொன்னான். அவர்கள் அந்த இளம்பெண்ணை ஈர்க்க பல யோசனைகளைச் சொன்னார்கள். அதன்படி தன்னை மிக சோகமாக அவள் முன்னால் காட்டிக் கொண்டான். தாடி எல்லாம் வைத்துக்கொண்டு திரிந்தான். அவள் கண்டுகொள்ளவில்லை. திடீரென்று தாடியை மழித்து இன்னும் ஸ்டைலாக உடை அணிந்து கொண்டு வந்து, அளவுக்கு மீறிய உற்சாகத்துடன் நடந்து கொண்டான். அப்போதும் அவள் கண்டுகொள்ளவில்லை.

ஒருமுறை அலுவலகம் அருகே உள்ள நீண்ட ஏ.டி.எம் கியூவில் அவள் நின்றிருந்தபோது, அவனாக வந்து மற்றவர்களிடம் பேசி, ‘அவசரமாகப் பணம் எடுக்க வேண்டும்’ என்று நம்ப வைத்து அவளை வலுக்கட்டாயமாக முன்னால் அழைத்துச் சென்று முதலில் பணமெடுக்க உதவினான். இன்னொரு முறை அவள் தோழிகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இவன் வீட்டில் செய்த தின்பண்டங்களை எடுத்துவந்து, ‘‘அம்மா செய்தாங்க. நல்லா இருக்கும்’’ என்று கொடுத்து விட்டுச் சென்றான்.

திடீரென்று ஒரு மாலை வேளையில் அலுவலகத்துக்கு வெளியே அவன் அம்மா, அப்பா, தங்கை அனைவரையும் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினான். அவர்களோடு அன்று உணவகத்தில் விருந்து உண்ண வேண்டிய கட்டாயத்துக்கு அவள் ஆளானாள். ஒருமுறை அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்ததும், அவள் தோழி ஒருத்தியைக் கட்டாயப்படுத்தி அழைத்துக்கொண்டு அவள் வீட்டுக்கே வந்து விட்டான். சாதாரண காய்ச்சலுக்கு கூடை நிறைய பழங்களும் மலர்களும் வாங்கிவந்து கொடுத்தான். அவளுடைய பிறந்த நாளுக்கு அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு ஏற்பாடு செய்து, திடீரென அவளை அழைத்துப் போய் அவள் கையாலேயே அங்குள்ள குழந்தைகளுக்குப் பரிமாற வைத்தான்.

இப்படி அவளை ஈர்க்க பல காரியங்களைச் செய்துகொண்டே இருந்தான். முடிவாக அவனுக்கு ஒரு வாட்ஸ்அப் செய்தி அவளிடமிருந்து வந்தது. ‘இன்று மாலை வெளியே டின்னர் போகலாமா?’

இதைப் பார்த்த அவன் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டான். மாலை இருவரும் உணவகத்தில் சந்தித்துக் கொண்டனர். ‘‘நான்தான் பில் கொடுப்பேன்’’ என்றான் அவன்.

‘‘ஏன்? நாம் இருவரும் ஒரே சம்பளம்தானே வாங்குகிறோம். நான் ஏன் கொடுக்கக் கூடாது?’’ என்றாள் அவள்.

அதைக் கேட்டு அவன் முழித்தான்.

‘‘இதுதான் உன் பிரச்னை. நீ செய்வது நற்காரியம் என்றாலும், அது அடுத்தவருக்குப் பிடிக்கிறதா, பிடிக்கவில்லையா என்று தெரிந்து கொள்ளாமல் அவர்களை வசதிக்குறைவாக ஆக்குவதுதான் உன் பிரச்னை.’’

‘‘எனக்குப் புரியவில்லை’’ என்று அவன் திணறினான்.

அவள் தொடர்ந்தாள். ‘‘நீ என்னிடம் உன் காதலை சொன்னாய். எனக்கு அப்படி ஓர் உணர்வு வரவில்லை என்றேன். உடனே என்னை ஈர்ப்பதாக நினைத்து பல காரியங்களைச் செய்துகொண்டே இருந்தாய். நல்ல விஷயங்கள்தான். ஆனாலும் என் மனதில் உன் மீது காதல் உணர்வு ஏற்படவில்லை. ஆனால் அதை எல்லாம் கவனிக்காமல் எனக்கு நன்மை செய்து கொண்டே இருக்கிறாய். இதனால் குறிப்பிட்ட காலத்தில் எனக்கு குற்ற உணர்வு ஏற்படும். ‘ஐயோ, இவன் நம் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறானே’ என்று எனக்குள் வராத காதலை ஒரு நன்றிக் கடனுக்காக வந்ததாக நடிக்க ஆரம்பிப்பேன். நான் உன்னைக் காதலிப்பதாக நீ நினைப்பாய். ஆனால் அது ஆழ்மனதில் இருந்து வரும் காதலாக இருக்காது. பிற்காலத்தில் நம் இருவருக்கும் இதனால் பிரச்னைதான் வரும்...’’

அவனுக்குப் புரிந்தது. அவள் தொடர்ந்தாள்... ‘‘காதலில் ஆண் பெண்ணை ஈர்க்க எதையும் செய்யவே கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் அந்த செயல்களால், ‘நீ என்னைக் காதலித்தே ஆகவேண்டும்’ என்று நெருக்குவது தவறு. அது அவளுக்கு வசதிக்குறைவான உணர்வையே கொடுக்கும். காதல் உணர்வைக் கொடுக்காது’’ என்றாள்.

‘‘சரி, நான் இனி இயல்பாய் இருக்கிறேன். உனக்கு என்னைப் பிடித்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் சொல். பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை’’ என்றான் அவன்.

‘‘மகிழ்ச்சி’’ என்று சொல்லி, பில்லுக்கான பணத்தை தன் பர்ஸைத் திறந்து வைத்தாள் அவள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu