தினம் ஒரு கதை - 113
தினம் ஒரு கதை - 113
விசா எடுக்கும் விஷயமாக அந்தக் கல்லூரி மாணவன் தன் சித்தி வீட்டுக்குச் சென்றிருந்தான். அவனை வரவேற்ற சித்தியும் சித்தப்பாவும், ‘‘எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வீட்டில் தங்கிக் கொள்ளலாம்’’ என்றார்கள். மூன்று நாட்கள் மட்டுமே அங்கே தங்க நேரிடும் என்று தெளிவாகச் சொல்லிவிட்டான்.
காலை உணவாக சித்தி பூரியும் கிழங்கும் செய்து கொடுத்தார். வீட்டில் அனைவரும் சாப்பிட்டனர். மதிய உணவாக நான்கு வகை சாதங்கள் செய்திருந்தார். சித்தப்பா, அவரின் அப்பா, சித்தப்பாவின் தம்பி என்று அனைவரும் அரட்டையடித்துக் கொண்டு சாப்பிட்டார்கள்.
கல்லூரி மாணவன் அவர்களோடு கலந்து கொண்டான். அப்போதுதான் சித்தியின் முகத்தை அவன் பார்த்தான். அதில் பெரிய உற்சாகம் எதுவுமில்லை. ‘‘சித்தி, என்னாச்சு?’’ என்று கேட்டான். ‘‘ஒண்ணுமில்லப்பா!’’ என்று சித்தி ஏதோ சொல்லி சமாளித்தார். ‘ஏன் சித்தி அப்படி இருந்தார்’ என்று யோசித்துக் கொண்டே படுத்துத் தூங்கிவிட்டான்.
மறுநாள் மதிய உணவாக சிக்கன் பிரியாணியும், கத்திரிக்காய் கூட்டும், தயிர் வெங்காயக் கலவையும், பிரெட் அல்வாவும் சித்தி செய்திருந்தார். அனைவரும் சாப்பிட, சித்தி பரிமாறிக் கொண்டிருந்தார். ‘இந்த பூமி எப்பேர்ப்பட்ட ஆபத்தில் இருக்கிறது. இயற்கையை எப்படியெல்லாம் மனிதர்கள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்பதை பிரியாணி சாப்பிட்டுக் கொண்டே சித்தப்பா சுவாரசியமாக விளக்கிக் கொண்டிருந்தார்.
கல்லூரி மாணவன் குறுக்கிட்டான். ‘‘சித்தி! பிரியாணி எப்படி செய்தீங்க? சரியா வெந்திருக்கு. நல்லா மசாலாவும் சிக்கன்ல கலந்திருக்கு. நானெல்லாம் செய்து பார்த்தா இப்படி மசாலா சரியா சேராது சித்தி’’ என்றான்.
தன் பேச்சில் குறுக்கிட்ட கல்லூரி மாணவனை சித்தப்பா எரிச்சலுடன் பார்த்தார். ‘‘சொல்லுங்க சித்தி, ரொம்ப டேஸ்டா இருக்கு பிரியாணி. அதான் கேட்டேன்’’ என்று தொடர்ந்தான் கல்லூரி மாணவன்.
உடனே சித்தி, ‘‘அப்படியாப்பா தம்பி, பொறுமையா மசாலா கலக்கிற வரைக்கும் போட்டு வேக வைக்கணும்பா.’’
‘‘அப்படின்னா சமையல்ல பொறுமை முக்கியம், இல்லையா சித்தி?’’
‘‘ஆமாம்பா! பொறுமையா செய்தா யார் செய்தாலும் சமையல் நல்லா வரும். வேகமா செய்தா ஏதோ ஒரு இடத்துல சரியா வராம போயிரும்.’’
‘‘கத்திரிக்காய் கூட்டும் அருமை சித்தி. எப்படி கசப்பு இல்லாம செய்தீங்க?’’
‘‘வாங்கும்போதே நல்ல கத்திரிக்காயா பாத்து வாங்கினேன்’’ என்று, தான் எப்படி கத்திரிக்காய் வாங்கினேன் என்ற கதையை சித்தி விளக்கமாகச் சொன்னார். இவனும் ஆர்வமுடன் கேட்டான். இப்போது மற்றவர்களும் ஆர்வமுடன் கேட்டார்கள்.
‘‘தயிர் வெங்காயத்தோட சிறப்பே, அதை நீங்க சின்ன சின்னதா நீளமா வெட்டி இருக்கிறதுதான் சித்தி. எப்படி அது?’’
‘‘அதுக்கு வேறு ஒரு அரிவாள்மனை வைச்சிருக்கேன். அதுல உக்காந்து அரிஞ்சேன்னா, இப்படி மெல்லிசா அரிவேன்.’’
‘‘சூப்பர் சித்தி! பிரெட் அல்வாவும் சரியான பதத்துல இருக்கு பாருங்க’’ என்றான். சித்தி பிரெட் அல்வா தயார் செய்த கதையைச் சொன்னார்.
அன்று சித்தி மற்ற நாட்களை விட உற்சாகமாய் சாப்பிட்டார். உற்சாகமாய் பரிமாறினார். அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் அதை கவனித்தார்கள்.
இவன் கை கழுவிவிட்டு வெட்டிய பழங்களை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு பால்கனியில் அமர்ந்து கொண்டான். பின்னால் சித்தப்பா புன்சிரிப்போடு நின்றிருந்தார்.
‘‘என்ன சித்தப்பா, போய் தூங்கலையா?’’
‘‘இல்லடா தம்பி. என்னை நீ திருத்திட்டே. அதான் உனக்கு நன்றி சொல்லலாம்னு...’’
‘‘எனக்குப் புரியலை சித்தப்பா!’’
‘‘இல்லை! உன் சித்தி ரொம்ப நல்லா சமைப்பாங்க. திட்டமிட்டு ரசிச்சி சமைப்பாங்க. அப்படி சமைச்சி பரிமாறும்போது, அது ஒவ்வொண்ணும் எப்படி இருக்கு, எந்த மாதிரி நல்லா இருக்குன்னு எதுவும் சொல்லாம, நாங்க எல்லாரும் பூமியை பத்தி, உலக அரசியல் பத்தி, உள்ளூர் அரசியல் பத்தி வியாக்கியானம் பேசிட்டு இருப்போம்.’’
‘‘ஆமா சித்தப்பா! ஓர் ஓவியர் ஓவியம் வரைஞ்சி முடிச்ச உடனே அதை ரசிச்சி பாராட்டத்தானே செய்றோம். ஒரு மேஜிக் கலைஞர் வித்தை செய்து முடிக்கும்போது கைத்தட்டுறோம். ஆனா உலகத்துல இருக்கிற கோடிக்கணக்கான அம்மாக்கள் தினம் தினம் ருசியா சமைச்சி ஒரு படைப்பை செய்து முடிக்கிறாங்க. அதைப் பத்தி ஒரு வார்த்தை புகழ்ந்து பேசாம, நாம உலகத்தைப் பத்தி பேசி என்ன பயன்? வீட்ல ஒரு உயிரோட உணர்வை நம்ம யாருக்கும் புரிஞ்சிக்கத் தெரியல. இதுல உலக அரசியல் பேசி என்ன செய்யப் போறோம் சித்தப்பா?’’ என்றான்.
புரிந்து கொண்ட சித்தப்பா, அவன் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு உற்சாகமாய் சென்றார். அவர் அன்று முக்கியமான வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொண்டார்.
Share