தினம் ஒரு கதை - 10
ஒரு பறவை காலை முதல் இரை தேடி அலைந்து கொண்டிருந்தது. எங்குமே கிடைக்கவில்லை.
நெடு நேரம் தேடிய பிறகு மரத்தின் அடியில் சில பெர்ரி பழங்கள் விழுந்து கிடந்ததைப் பார்த்தது.
ஆசையுடன் அவற்றைக் கொத்த கீழே இறங்கும்போது, எங்கிருந்தோ பெரிய பூனை ஒன்று பறவை மீது பாய்ந்தது.
பூனையிடமிருந்து தப்பித்து இரை தேடப் போகும்போது பாம்பொன்று துரத்தியது.
பசியில் இருந்த பறவைக்கு உயிர் பயமும் வர, மேலே மேலே பறந்தது. மிருகங்கள் இல்லாத இடமாக, பாம்புகள் இல்லாத இடமாக போய் நிம்மதியாக இளைப்பாற வேண்டும் என்று மரத்தின் உச்சிக் கிளையில் போய் அமர்ந்தது.
மூச்சு வாங்கியது. ‘இங்கே யாரும் வர முடியாது’ என்று முணுமுணுத்தபடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது. அப்போது பார்த்து அந்தக் கிளையும் இரண்டாக முறிய ஆரம்பித்தது.
‘‘ஐயோ, இந்த கிளையும் முறிகிறதே. நான் எங்கே போவேன்?’’ என்று அது கலங்கியது. கிளை முறிந்து விழ, பறவை தன் இரு இறக்கைகளையும் வீசிப் பறக்க ஆரம்பித்தது.

அப்போதுதான் பறவைக்கு நினைவு வருகிறது. ‘ச்சே! எனக்குத்தான் வானத்தில் பறக்க சிறகுகள் இரண்டு இருக்கின்றனவே! ஏன் கிளை முறிந்தபோது என்னை நம்பாமல் கலங்கினேன்? ஒரு கிளை முறிந்தால் இன்னொரு கிளையில் தேடி அமர்வேன்’ என்று தன்னைத்தானே கண்டித்துக் கொண்டது.
‘வாழ்க்கையில் இன்றுள்ள சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் நம்மிடம் உள்ள சக்தியும், திறமையும் நமக்கானது. அதை வைத்து என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம்’ என்று பறவை தெளிவடைந்தபோது அதன் கண்களில் அழகான பழத்தோட்டம் தென்பட்டது.
மகிழ்ச்சியுடன் பழத்தோட்டத்தில் இறங்க ஆரம்பித்தது.