தினம் ஒரு கதை - 57

பெரிய பொழுதுபோக்கு ஷாப்பிங் மால் அது. அங்கே குழந்தைகள் விளையாட்டுப் பிரிவுக்கு ஒன்பது வயது மாணவி போனாள். உடன் அப்பா, அம்மா தம்பி இருந்தனர். உள்ளே குழந்தைகள் விளையாட பிளாஸ்டிக் சறுக்கு, பிளாஸ்டிக் ஊஞ்சல் என்று ஏராளமான குட்டிக் குட்டி பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தன. அதில் விளையாட ஒரு மணி நேரத்துக்கு 100 ரூபாய்.

அந்த மாணவியும் தம்பியும் ஆவலுடன் நுழையப் போனார்கள். காவலாளி வாசலில் மாணவியைத் தடுத்து நிறுத்தினார். உயரம் அளக்கும் அளவையில் அவள் உயரத்தை அளந்தார். ‘‘நீ 125 சென்டி மீட்டர் உயரத்தைத் தாண்டிவிட்டாய். அதனால் விதிப்படி உள்ளே நுழைய முடியாது’’ என்றார்.

மாணவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் பெற்றோர் எவ்வளவோ வேண்டிப் பார்த்தார்கள். விதியை மீற முடியாது என்று நிர்வாகத்தினர் சொல்லிவிட்டார்கள். ஒரு கட்டத்துக்கு மேலே அப்பா அம்மா கெஞ்சுவதை அவளால் தாங்க முடியவில்லை. கண்களில் நீர் நிறைய, ‘‘நான் விளையாடல. தம்பி போகட்டும்’’ என்று சொல்லி அமைதியாக நின்றாள். தம்பி உள்ளே விளையாடப் போனதும் அப்பா அவளை அழைத்துக் கொண்டு மற்ற விளையாட்டுகளை நோக்கிப் போனார்.

அங்கே பெரிய பெரிய ரோபோக்கள் இருந்தன. ரோபோக்களின் நெஞ்சு பகுதியில் ஓர் இருக்கை இருக்கிறது. அதில் ஏறி பெல்ட் போட்டு அமர்ந்துகொள்ள வேண்டும். வலது பக்கம் லிவரை இழுத்தால் வலது காலை எடுத்து வைக்கும். இடது பக்கம் லிவரை இழுத்தால் இடது காலை எடுத்து வைக்கும். பெரிய உருவத்தை சிறிய உருவ குழந்தைகள் இயக்கலாம். மாணவி அதை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அங்கே விளையாட்டை நடத்துபவர், ‘‘வாம்மா, விளையாடலாம்’’ என்று அழைத்தார்.

‘‘நான் குழந்தையாச்சே. இதை விளையாடலாமா?’’

அவர் அவளை அழைத்து உயரம் அளந்தார். ‘‘நீதான் 125 சென்டி மீட்டரைத் தாண்டி இருக்கியே. தாராளமாய் விளையாடலாம்’’ என்றார்.

அவள் ஓடிப் போய் ரோபா வயிற்றில் அமர்ந்து அதை இப்படியும் அப்படியும் நடக்க வைத்தாள். குதூகலம்க அவள் சிரிப்பதைப் பார்க்க அழகாக இருந்தது.

‘ஒரு விளையாட்டில் உயரமாய் இருக்கிறேன் என்று என்னை நிராகரித்தார்கள். இன்னொரு விளையாட்டில் அதே உயரத்தை வைத்து அனுமதி கொடுத்தார்கள். விதி என்பது விதிதான். இதில் உணர்ச்சிவசப்பட எதுவுமில்லை. ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு வாழ்க்கையில் நிச்சயம் திறக்கும்’ என்றெல்லாம் நினைத்து மகிழ்ந்தாள்.

crossmenu