தினம் ஒரு கதை - 25

தினம் ஒரு கதை - 25

ஒருவர் விடுமுறையன்று வீட்டுத் தோட்டத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்.

அங்கே ஒரு கிளியை கழுகு துரத்துவதைப் பார்த்தார். கிளி அங்கும் இங்கும் பறந்து தப்பிக்க கடும் முயற்சி செய்தது. கழுகு விடவில்லை.

வேறு வழியே இல்லாமல் அவர் கையில் வந்து அமர்ந்தது கிளி. அவர் கழுகை விரட்ட, கழுகு பயந்து பறந்தோடிவிட்டது.

கிளியை அன்புடன் பார்த்து, ‘‘கிளியே! நான் இருக்கிறேன் உனக்கு’’ என்று சொல்லி, குடிக்க பாலும், சுவைக்க பழங்களும் கொடுத்தார்.

பிறகு, ‘‘நீ என்னுடன் இருந்து விடு கிளியே. உன்னை அழகான கூண்டில் வைத்து, சகல வசதிகளுடன் கவனித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

‘‘அப்படியா... சகல வசதிகளும் என்றால் என்ன?’’ கிளி கேட்டது.

‘‘உணவு, விளையாட விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் கொடுப்பேன்.’’

‘‘ஆனால் என்னைப் போன்ற கிளிகளுடன் இணைந்து உறவாடும் குடும்பத்தன்மையைக் கொடுப்பாயா?’’ என்று கேட்டது கிளி.

‘‘அதை எப்படிக் கொடுக்க முடியும்?’’

‘‘அப்படியானால் நீ எனக்குக் கொடுக்கும் சகல வசதிகளும் தேவையில்லை. உறவுகளோடு இருப்பதுதான் இன்பம்’’ என்று சொல்லி, பறந்து சென்று விட்டது கிளி.

‘வசதிகள் மட்டும் ஓர் உயிருக்குப் போதாது, உறவுகளும் முக்கியம்’ என்பதைப் புரிந்து கொண்ட அவர், சகல வசதிகளோடு கூடிய முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்த தன் அம்மாவை அழைத்து வரக் கிளம்பினார்.

crossmenu