தினம் ஒரு கதை - 24

தினம் ஒரு கதை - 24

அமெரிக்க அரசியல் மேதையும் பல்துறை வல்லுநருமான பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஒரு செய்தி நிறுவனம் நடத்தினார்.

அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகம் ஒன்றைப் புரட்டிய வாடிக்கையாளர், அதன் விலையை அங்கிருந்த ஊழியரிடம் கேட்டார்.

‘‘ஒரு டாலர்’’ என்றார் அவர். விலையைக் குறைக்க சொல்லி வாடிக்கையாளர் நெடு நேரம் அர்த்தமில்லாமல் பேரம் பேசினார்.

‘‘இது தரமான புத்தகம். ஒரு டாலருக்குக் கீழே விலையைக் குறைக்க முடியாது’’ என்றார் ஊழியர்.

‘‘உங்கள் முதலாளியைக் கூப்பிடுங்கள். அவரிடம் பேரம் பேசிக் கொள்கிறேன்’’ என்று வாடிக்கையாளர் சொல்ல, பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வந்தார்.

‘‘இந்தப் புத்தகம் எவ்வளவு?’’

‘‘இதன் விலை ஒண்ணேகால் டாலர்.’’

‘‘உங்கள் ஊழியர் சொன்னதைவிட கால் டாலர் அதிகமாக சொல்கிறீர்களே?’’

‘‘புத்தகத்தின் விலை ஒரு டாலர்தான். ஆனால் நீங்கள் வீணடித்த நேரத்துக்கு கால் டாலர் அதிகம் சேர்த்துள்ளேன்.’’

‘‘இது அநியாயம்.’’

‘‘இப்போது விலை ஒன்றரை டாலர் ஆகிவிட்டது. நீங்கள் எங்கள் நேரத்தை வீணடித்தால் விலை ஏறிக் கொண்டே போகும். ஒவ்வொரு விநாடியும் செய்ய வேண்டிய வேலை ஏராளம் இருக்கிறது’’ என்றார் ஃபிராங்க்ளின்.

நேரத்தின் மதிப்பை உணர்ந்து திருந்திய வாடிக்கையாளர், புத்தகத்தை வாங்கிச் சென்றார்.

crossmenu