தினம் ஒரு கதை - 15

பெரும் மக்கள் கூட்டம் ஒன்று, தங்கள் இடத்திலிருந்து இன்னொரு நிலப்பரப்புக்கு இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்தது.

பயணத்தில் மக்களிடையே சின்னச்சின்ன சச்சரவுகள் ஏற்பட்டன. அவற்றைத் தீர்த்து வைக்க தலைவன் தேவை என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.

தங்கள் தலைவன் வலிமைமிக்கவனாக, தைரியமானவனாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, தங்கள் கூட்டத்தில் 10 நபர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அந்த 10 பேரும் உடல் வலிமைமிக்கவர்கள். தைரியமானவர்கள். இந்த 10 பேரில் யார் தலைவனாவது என்பதை விவாதிக்க  இரவில் தீ மூட்டி சுற்றி அமர்ந்திருந்தனர்.

அவர்கள் பேசுவதை மக்கள் பார்வையாளர்களாக இருந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

முதலாமவர், தான் யானையை வீழ்த்திய கதையை சொன்னார். இரண்டாமவர் மலை உச்சியிலிருந்து குதித்துப் பிழைத்த கதையைச் சொன்னார்.

இப்படியே ஒவ்வொருவரும் அவர்களுடைய வீரதீர பராக்கிரமங்களைப் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

பத்தாம் மனிதர் எதுவும் பேசவில்லை. திடீரென்று எழுந்த அவர், ‘‘என்ன இது... நெருப்புக்கு விறகை சரியாக அடுக்கவில்லையே’’ என்று நெருப்புக்குள் கைகளை விட்டு விறகுகளை ஒழுங்குபடுத்தினார்.

மற்ற ஒன்பது பேரும் அவரை தலைவனாக மறுபேச்சின்றி ஏற்றுக் கொண்டார்கள்.

பேச்சைத் தவிர்த்து, செயலில் காட்டிய பத்தாம் மனிதர்தான் சரியான தலைவன் என்று மக்கள் அவரைப் புகழ்ந்தார்கள்.

crossmenu