தினம் ஒரு கதை - 11

நாட்டில் திருவிழா நடக்கிறது. அந்த திருவிழாவில் ஒரு பயில்வான் வித்தை காட்டுகிறார். இரும்புக் கம்பியை கையால் வளைத்துக் காட்டுகிறார். கருங்கல்லைக் கையால் உடைக்கிறார்.

முடிவில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து சக்கையை மட்டும் மிச்சம் வைக்கிறார்.

‘‘இந்த எலுமிச்சை பழ சக்கையிலிருந்து மேலும் ஒரு துளி எலுமிச்சை சாறை யாராவது பிழிந்து விட்டால் அவருக்கு 100 பொற்காசுகள் தருகிறேன்’’ என்று சவால் விடுகிறார் பயில்வான்.

ஊரில் உள்ள இளைஞர்கள் எல்லாம் வந்து பிழிகிறார்கள். சாறு வரவில்லை. பலசாலிகள் முயற்சி செய்கிறார்கள். ஒரு துளியைக் கூட சக்கையிலிருந்து சொட்ட வைக்க முடியவில்லை.

முடிவில் ஒரு மெலிந்த நடுத்தர வயதுப் பெண் வந்தார். ‘இவரா எலுமிச்சை சக்கையிலிருந்து சாறு எடுக்கப் போகிறார்’ என்று ஊரார் ஏளனம் செய்யும்போதே அவர் எடுத்துப் பிழிய ஆரம்பித்தார்.

இரண்டு நிமிட முயற்சிக்கு பிறகு ஒரு துளி எலுமிச்சை சாறு அதிலிருந்து வருகிறது.

அனைவருக்கும் ஆச்சரியம். பயில்வானுக்கு அதைவிட ஆச்சரியம்.

‘‘எப்படிம்மா இதை சாதித்தீர்கள்?’’ என்று பயில்வான் கேட்டார்.

‘‘நேற்று காலையிலிருந்து இன்று காலை வரை நான்கு வேளைகள் என் குழந்தைகள் சாப்பிடாமல் பட்டினியில் தவிக்கின்றன. அவர்களுக்கு நேர்மையான வழியில் உணவளிக்க பணம் தேவைப்படுகிறது. இந்த நினைப்பு மனதில் இருக்கும்போது, இந்த சாறு பிழிதல் என்ன, பெரிய மலையே இருந்தாலும் உடைத்துத் தூளாக்கிவிடுவேன்’’ என்றார் அந்தத் தாய்.

தாய் அன்பின் சக்தியையும், வீரியத்தையும் கண்டு ஊர் மக்கள் வியந்து அவரைப் பாராட்டினார்கள்.

crossmenu