வார்த்தைகளின் சுவை!

விமான நிலையத்தில் காத்திருந்தாள் அவள். விமானத்தில் ஏறத் தாமதம் ஆகும் என்பது தெரிந்ததும் ஒரு புத்தகமும் பிஸ்கெட் பாக்கெட்டும் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தாள். பக்கத்து நாற்காலியில் ஒரு இளைஞன் வந்து அமர்ந்து, அவனும் ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான். இருவருக்கும் இடையே கைப்பிடியில் இருந்த பிஸ்கெட் பாக்கெட்டிலிருந்து அவள் ஒரு பிஸ்கெட்டை எடுத்தாள். அவனும் ஒன்று எடுத்தான். 

உடனே அவளுக்குக் கோபம் வந்தது. ‘என்ன தைரியம் இருந்தால் நான் வாங்கி வைத்திருக்கும் பாக்கெட்டிலிருந்து பிஸ்கெட்டை எடுப்பான்? வேறு இடமாக இருந்தால் கத்திக் கூச்சல் போட்டு அவமானப்படுத்தலாம். இது விமான நிலையம். என்ன செய்வது?’ என நினைத்தவள் அமைதியாகிப் புத்தகத்தில் மூழ்கினாள். 

அவள் ஒவ்வொரு முறை பிஸ்கெட் எடுக்கும்போதும் அவனும் ஒன்று எடுத்தான். அவளுக்குள் ஆத்திரம் பொங்கிக் கொண்டிருந்தது. கடைசியாக ஒரே ஒரு பிஸ்கெட் மிச்சம் இருந்தது. ‘அவன் என்ன செய்யப் போகிறான்’ என ஓரக்கண்ணால் பார்த்தாள். பாக்கெட் காலியானதை உணர்ந்த அவன், அந்த ஒரு பிஸ்கெட்டை எடுத்து, சரி பாதியாக உடைத்து அவளுக்குப் பாதியை நீட்டினான். பொங்கி எழுந்த அவள், ‘‘இது ரொம்ப ஓவர். பொம்பளை கிட்ட இப்படியா நடந்துக்குவே? நீயெல்லாம் அக்கா, தங்கச்சிகூடப் பொறக்கலையா?’’ என்று அவனைத் திட்டிவிட்டு எழுந்து போனாள். அவன் ஒன்றும் புரியாமல் திகைத்தபடி அவளையே பார்த்தான்.

விமானத்தில் ஏறி உட்கார்ந்த பிறகும் அவளது ஆத்திரம் அடங்கவில்லை. இந்த மனநிலையில் தன்னால் புத்தகம் படிக்க முடியாது என்பதை உணர்ந்தவள், அதை உள்ளே வைப்பதற்காகத் தன் கைப்பையைத் திறந்தாள். அப்போதுதான் கவனித்தாள்... அவள் வாங்கிய பிஸ்கெட் பாக்கெட் பிரிக்கப்படாமல் அதற்குள் அப்படியே இருந்தது. அந்த இளைஞனின் பாக்கெட்டிலிருந்து அவள்தான் அத்துமீறி எடுத்திருக்கிறாள். அப்படியிருந்தும், தன் பாக்கெட்டில் இருந்த கடைசி பிஸ்கெட்டையும் அவளோடு பகிர்ந்து கொள்ள முயன்றிருக்கிறான் அவன். அப்படிப்பட்டவனைத்தான் அவள் திட்டியிருக்கிறாள். 

அவளுக்கு அவமானமாக இருந்தது. இப்போது மன்னிப்பும் கேட்க முடியாது. சரிசெய்ய முடியாத ஒரு தவறை இழைத்துவிட்டதாக நினைத்து வருந்தினாள் அவள்.

நம் கைகளிலிருந்து விடுபட்ட கல்லும், நம் உதடுகளிலிருந்து வெளியேறிய சொல்லும் திரும்பப் பெற முடியாதவை. அந்த வார்த்தைகள் நம்மைச் சுற்றி எங்கெங்கோ அலைந்துகொண்டிருக்கும். நம் கட்டுப்பாட்டில் இல்லாத எங்கோ ஒரு மூலையில்கூட, ஏதோ ஒரு விளைவை ஏற்படுத்தும். அவை சமயங்களில் நமக்கே வேதனை தருவதாய் அமையலாம்.  

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு சுவை இருக்கிறது. சில இனிப்பாக இருக்கும்; கேட்கிறவர்கள் மனதை அவை சர்க்கரையால் நனைக்கும்; சந்தோஷத்தையும் குதூகலத்தையும் அவர்களுக்குள் விதைக்கும். சில வார்த்தைகளில் காரம் அதிகமாக இருக்கும்; சொல்லொணாத் துயரத்தையும் தாள முடியாத வேதனையையும் அவை ஏற்படுத்தும்; கேட்பவர்களை அவை பல நாட்கள் தூங்கவிடாமல் செய்யக்கூடும். சில கசப்பாக வெளிப்படும்; நெடுநாள் உறவை அவை நொடிகளில் அறுத்துவிடும். 

நன்றாகச் சமைப்பவர்கள், தாங்கள் சமைத்த உணவை முதலில் சுவைத்துப் பார்ப்பார்கள். அந்தச் சுவையை ரசித்து உணர்வார்கள். தாங்கள் ரசித்த ஒன்றையே மற்றவர்களுக்குப் பரிமாறுவார்கள். நம் நாக்கிலிருந்து ஒவ்வொரு வார்த்தையையும் வெளிப்படுத்துவதற்கு முன்பாக ஒருமுறை நாமே அவற்றைச் சுவைத்துப் பார்க்கலாம். அதன்பிறகு வெளிப்படுத்துவது எனத் தீர்மானித்தால், உலகத்துக்கே நாம் இனிப்பைப் பரிமாறுவோம்.

crossmenu