- ஸ்டீவ் ஜாப்ஸ்
ஐபாட், ஐபேட், ஐபோன் என உள்ளங்கைக்குள் கம்ப்யூட்டரைக் கொண்டுவந்து தொழில்நுட்பப் புரட்சி செய்த ‘ஆப்பிள் கம்ப்யூட்டர்’ நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸை தெரியாத இளைஞர்கள் இருக்க முடியாது. அவரது கண்டுபிடிப்புகளைவிட புகழ்பெற்றது, கடந்த 2005ம் ஆண்டு ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அவர் நிகழ்த்திய உரை. மிகச்சிறந்த தன்னம்பிக்கை உரமேற்றும் அந்தப் பேச்சு, சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் எனர்ஜி டானிக். அந்த உரையின் சுருக்கம் இதோ...
‘‘கல்லூரிப் படிப்பை பாதியில் தலைமுழுகியவன் நான். நான் பிறப்பதற்குமுன்பே இது தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. திருமணமாகாத ஒரு கல்லூரி மாணவி என் அம்மா. வளர்க்க முடியாமல் என்னைத் தத்துக் கொடுக்கத் தீர்மானித்தார். தத்தெடுக்க வந்தவர்கள் ஆசைப்பட்டது பெண் குழந்தையை. அவர்கள் காத்திருந்த ஒரு நள்ளிரவில், நான் ஆண் குழந்தையாகப் பிறந்து விட்டேன். ஆனாலும் என்னை ஏற்றார்கள்.
அதிகம் படிக்காத அந்தத் தம்பதி, என்னை நன்றாகப் படிக்க வைப்பதாக உறுதி தந்தபிறகே என்னைப் பெற்ற அம்மா தத்து கொடுத்தார். என் வளர்ப்புப் பெற்றோர், தங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்து என்னைக் கல்லூரியில் சேர்த்தனர். ஆறு மாதம் போனபிறகே தெரிந்தது, ‘இந்தப் படிப்பு அவ்வளவு மதிப்பு வாய்ந்தது இல்லை’ என்று! வாழ்க்கையில் என்னவாகப் போகிறேன் என்ற தீர்மானம் என்னிடம் இல்லை; அதற்கு உதவுவதாகவும் படிப்பு இல்லை. ‘இதற்கு ஏன் இத்தனை செலவு’ என யோசித்த கணமே நான் படிப்பை நிறுத்திவிட்டேன். ஆர்வமில்லாமல் வகுப்புக்குப் போவதை விட, அதை நிறுத்தியது ஆனந்தம் தந்தது. தங்க இடமில்லாமல் தரையில் தூங்கினேன். ஏழு மைல் நடந்து ஹரே கிருஷ்ணா கோயிலில் சாப்பிட்டு பசியைத் தணித்தேன். ஆனாலும் என் உள்ளுணர்வும் ஆர்வமும் எந்த திசையில் போகிறதோ, அதில் பயணித்தேன்.
நான் படித்த கல்லூரியில் கையெழுத்து வகுப்புகள் தனியாக நடக்கும். விதம்விதமான எழுத்துகள், ஒவ்வொரு எழுத்துக்கும் அழகான இடைவெளி... என அது என்னைக் கவர்ந்தது. போனேன். இது வாழ்க்கைக்கு உதவுமா என்று தெரியாவிட்டாலும் ஆர்வத்தில் கற்றேன். 10 வருடங்கள் கழித்து ‘மேக்’ கம்ப்யூட்டரை உருவாக்கும்போது நான் விதம்விதமான எழுத்துருக்களை வடிவமைக்க இந்தப் பயிற்சிதான் காரணமாக இருந்தது. இன்று உலகெங்கும் கம்ப்யூட்டரில் உதவும் ‘ஃபான்ட்கள்’, நான் படிப்பை விட்டதால் கிடைத்தவை!
வாழ்க்கையில் துண்டுதுண்டாக நடக்கும் சம்பவங்கள் ஏதோ ஒரு புள்ளியில் எதிர்காலத்தில் உதவும் என்று நம்புங்கள். ஏதோ ஒன்றில் நம்பிக்கை வையுங்கள் - உங்கள் தைரியம், விதி, வாழ்க்கை, கர்மவினை எதிலாவது! இந்தப் பாதையில் எங்குமே இடறிவிழ மாட்டீர்கள். என் வாழ்க்கையில் எல்லா மாற்றங்களும் இப்படித்தான் நிகழ்ந்தது.
என் 20 வயதில் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினோம். 2 பேர் தொடங்கிய நிறுவனம், பத்தே ஆண்டுகளில் 4 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் அளவு வளர்ந்தது. அப்போது நான் தூக்கியடிக்கப்பட்டேன். நான் ஆரம்பித்த நிறுவனத்திலிருந்து என்னை எப்படி வெளியேற்ற முடியும்? நிறுவனத்தை நிர்வகிக்க ஒரு திறமைசாலியை அமர்த்தினோம். அவருக்கும் எனக்கும் முரண்பட, நிறுவன இயக்குனர்கள் அவர் பக்கம் சாய, நான் தூக்கி வீசப்பட்டேன்.
என் 10 வருஷ உழைப்பு ஒரே நிமிடத்தில் என் கைகளிலிருந்து பறிபோனது. என்ன செய்வது என புரியாமல் பல மாதங்கள் திரிந்தேன். ஊரைவிட்டே ஓடிப் போகவும் தோணியது. ஆனால் ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது... நான் விரக்தியில் இருந்தாலும், செய்த வேலைமீது காதல் குறையாமல் இருந்தேன். எனவே திரும்பவும் அதே வேலையை செய்ய முடிவெடுத்தேன். வெற்றிகரமான சாதனையாளர் என்ற அடையாளத்தை இழந்துவிட்டு, திரும்பவும் அரிச்சுவடியிலிருந்து ஆரம்பிக்கும் எளிய வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது. ‘நெக்ஸ்ட்’, ‘பிக்ஸர்’ என்ற இரண்டு நிறுவனங்களை ஆரம்பித்தேன். கிரியேட்டிவ்வாக நிறைய செய்ய முடிந்தது. உலகின் முதல் அனிமேஷன் படமான ‘டாய் ஸ்டோரி’யை என் நிறுவனம் உருவாக்கியது. இன்றைக்கும் உலகின் தலைசிறந்த அனிமேஷன் ஸ்டுடியோ என்னுடையதுதான். என் மனைவி அப்போதுதான் எனக்குக் கிடைத்தார். நல்ல குடும்ப வாழ்க்கை கிடைத்தது. கொஞ்ச நாளில் என் ‘நெக்ஸ்ட்’ நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் வாங்க, மறுபடியும் ஆப்பிளுக்கு வந்தேன்.
ஆனால், ‘ஆப்பிளை விட்டு நீக்கப்பட்டதுதான் என் வாழ்நாளில் நடந்த நல்ல விஷயம்’ என இன்றும் நினைக்கிறேன். சில சமயம் வாழ்க்கை உங்கள் உச்சந்தலையில் செங்கல்லால் அடிக்கும்; நம்பிக்கை இழக்காதீர்கள். நீங்கள் செய்யும் வேலைமீது காதல் கொள்ளுங்கள். வேலைதான் உங்கள் வாழ்வின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமிக்கிறது. ரசித்து வேலை செய்யுங்கள்; ரசிக்கமுடிகிற வேலையைச் செய்யுங்கள்; அதைக் காதலியுங்கள்; காதலில் வெறுப்பு ஏது?
கடந்த 33 வருடங்களாக தினமும் காலையில் கண்ணாடிமுன் நிற்பேன். ‘இன்றுதான் என் வாழ்வின் கடைசி தினம் என்று தீர்மானமானால், இன்று நான் செய்யும் அதே வேலைகளைத்தான் அப்போதும் செய்வேனா?’ என்று கேட்டுக் கொள்வேன். தொடர்ச்சியாக பல நாட்கள் ‘இல்லை’ என்கிற பதில் வந்தால், நான் மாற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாக உணர்வேன். மரணம் நெருங்கியதை உணர்ந்த கணத்தில், என் வாழ்வின் மிகப்பெரிய முடிவுகளை என்னால் எடுக்க முடிந்தது.
யாரும் மரணிக்க விரும்புவதில்லை; சொர்க்கத்துக்கு போக விரும்புகிறவர்கள்கூட மரணத்தை விரும்புவதில்லை. ஆனாலும் நம் எல்லோர் பாதையும் முடிகிற இடமாக மரணம்தான் இருக்கிறது. யாரும் அதிலிருந்து மீண்டதில்லை. வாழ்க்கையின் மிக உன்னதமான ஒற்றைக் கண்டுபிடிப்பு மரணம்தான்!
உங்கள் வாழ்க்கை குறுகியது. எனவே வேறொருவரின் வாழ்க்கையை வாழ்ந்து நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்கள் உள்ளுணர்வின் குரலை, மற்றவர்களின் கருத்துகள் அடக்கிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உள்ளுணர்வும் மனசும் என்ன நினைக்கிறதோ, அதை தைரியமாகப் பின்தொடருங்கள். ஏனென்றால், நீங்கள் என்னவாக விரும்பினீர்கள் என்பது அவற்றுக்கு மட்டும்தான் தெரியும். மற்ற எல்லாமே இரண்டாம்பட்சம்.
பசித்திருங்கள். அறியாமையோடு இருங்கள்.