கோபம் என்ற ஆணி!
கல்லூரியில் படிக்கும் தனது மகன் எல்லோரிடமும் சண்டை பிடிக்கிறான் என்ற புகாரோடு அந்த குருவிடம் வந்தார் ஒருவர். இளைஞனைப் பார்த்துச் சிரித்த குரு, ‘‘ஏன்?’’ என்றார். ‘‘அதுதான் எனக்கும் புரியவில்லை. என்னை யாராவது குறை சொன்னால் கடும் கோபம் வருகிறது. கோபத்தில் நான் என்ன செய்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை” என்றான் அவன்.
அவனிடம் ஒரு அழகான பலகையும் கொஞ்சம் ஆணிகளும் கொடுத்தார் குரு. ‘‘இனிமேல் கோபம் வந்தால் யாரையும் அடிக்காதே. உன் கோபம் தீர எதையாவது அடிக்க வேண்டும் என்றால் இந்தப் பலகையில் ஓர் ஆணி அடித்துவிடு!’’ என்றார்.
ஒருநாள் முடிந்ததும் குருவிடம் வந்தான் அவன். பலகையில் 40 ஆணிகள் இருந்தன. ‘‘பலகை ரொம்ப ஸ்டிராங்க். ஆணி அடிப்பது கஷ்டமாக இருக்கிறது’’ என்று குறைபட்டுக் கொண்டான். குரு சிரித்தார்!
அடுத்த நாள் 30 ஆணிகள்தான் பலகையில் அடிக்கப்பட்டிருந்தன. கோபம் குறைத்திருக்கிறான் என்பது குருவுக்குப் புரிந்தது. ‘‘பலகையில் நிறைய ஆணிகள் அடிக்கும் அளவுக்கு இடமில்லை’’ என்றான் இளைஞன்.
அடுத்தடுத்த நாட்களில் ஆணி அடிக்கும் கஷ்டத்தைத் தவிர்ப்பதற்காகவே கோபம் குறைத்தான். கடைசியில் ஒருநாள் உற்சாகமாக குருவிடம் வந்தான். ‘‘இன்று யார் மேலும் எனக்குக் கோபம் வரவில்லை’’ என்றான்.
“கோபம் வராத ஒவ்வொரு நாளிலும் பலகையிலிருந்து ஓர் ஆணியைப் பிடுங்கிவிடு” என்றார் குரு. நான்கு மாதங்கள் கழித்து அவன் திரும்பவும் வந்தான். ‘‘எல்லா ஆணியையும் பிடுங்கி விட்டேன். பலகை பழையமாதிரி ஆகிவிட்டது’’ என்றான்.
பலகையில் இருந்த ஆணியடித்த பள்ளங்களைக் காட்டிய குரு, ‘‘எவ்வளவு தழும்புகள் பார்! நீ சண்டை போட்ட ஒவ்வொருவர் மனசிலும் இப்படித்தான் இருக்கும். சரி செய்ய முடியாத ஏராளமான தழும்புகள்” என்றார். அவன் குற்ற உணர்வோடு தலைகுனிந்து கொண்டான்.
எத்தனை இடங்களில் எரிந்து விழுகிறோம். வீட்டில், ஆபீசில், ஹோட்டலில், பீச்சில், கோயிலில், வீதியில் யார் யார் மீதோ கோபம் வருகிறது. உறவுகள், நண்பர்கள், அறிமுகம் இல்லாத புது மனிதர்கள் என யார் மீதும் நம்மால் சுலபமாகக் கோபப்பட முடிகிறது. ‘கண்ணெதிரே பார்க்கிற மனிதர்கள் மீது அன்பு செலுத்த முடியவில்லை என்றால், பார்க்கவே முடியாத கடவுளை நாம் எப்படி நேசிக்கப் போகிறோம்’ என்று கேட்டார் அன்னை தெரசா. கோபப்படுவது மனித இயல்புதான்; அதைத் தடுக்க முடியவில்லை என்றால், திசை திருப்பி விடலாம். யோகாவில் இதற்கு ஒரு சின்ன டெக்னிக் இருக்கிறது. கட்டுப்படுத்த முடியாத கோபம் வரும்போது, ஐந்து முறை மூச்சை ஆழமாக இழுத்து வெளியில் விடுங்கள். இது சிம்பிளான பயிற்சிதான். பொங்கி வரும் பால் மீது லேசாகத் தண்ணீர் தெளித்தால், பால் பொங்காமல் உடனே தணியுமே... அப்படித்தான் கோபம் கட்டுப்பாட்டுக்கு வரும் என்கிறார்கள்.
ஒரே நேரத்தில் மனதால் இரண்டு விஷயங்களில் தீவிரமாக இயங்க முடியாது. கோபம் மனதைத் தூண்டிவிட்டால், சுவாசப் பயிற்சி மனதை அமைதிப்படுத்தும். கண்ணை மூடிக் கவனத்தை அமைதியின் பக்கமாகத் திருப்பிவிட்டால், பிறகு அதே அளவு கோபம் வெளிப்படாது. தொடர்ந்து இப்படிப் பயிற்சி செய்தால், அதுவே பழக்கமாக ஆகிவிடும் என்கிறார்கள். எல்லாருமே ரொம்ப ஈஸியாக பின்பற்றக் கூடிய பயிற்சிதான். செய்து பாருங்கள்... பயனுள்ளதாக இருக்கும்!