சாக்ரடீஸின் மூன்று சோதனைகள்
- மூன்று சோதனைகள்!
தத்துவ மேதை சாக்ரடீஸ் ஒருநாள் தனிமையில் இருந்தபோது அவரை நெருங்கி வந்தார் ஒரு பெரிய மனிதர். சாக்ரடீஸுக்கு நன்கு அறிமுகமானவர்தான் அவர். பதற்றத்தோடு சுற்றும்முற்றும் பார்த்த அவர், ‘‘நீங்க ரொம்ப நம்பிக்கிட்டு இருக்கீங்களே... உங்க நண்பர், அவர் என்ன செய்தார் தெரியுமா?’’ என்று ஆரம்பித்தார்.
“இருங்க... இருங்க...” என அவர் பேச்சை இடைமறித்தார் சாக்ரடீஸ். ‘‘சம்பந்தமில்லாத இன்னொருத்தர் பத்திப் பேசும்போது, எப்பவுமே மூன்று சோதனைகளைச் செய்து பார்த்துக்கிட்டு அப்புறமா பேசறது நல்லது’’ என்றவர், ‘‘இப்போ முதல் சோதனைக்கு வருவோம்... நீங்க சொல்லப் போற விஷயம் உண்மையா நடந்ததுன்னு உங்களுக்கு உறுதியாத் தெரியுமா? நீங்க உங்க கண்ணால பார்த்த, காதால கேட்ட விஷயத்தைத்தான் என்கிட்ட சொல்லப் போறீங்களா?’’ என்று கேட்டார்.
குழப்பத்தோடு சாக்ரடீஸைப் பார்த்த அந்த பெரிய மனிதர், ‘‘இல்லை! நான் நேரடியாப் பார்த்ததோ, கேட்டதோ இல்லை. வேற ஒருத்தர் சொல்லிக் கேள்விப்பட்ட விஷயத்தைத்தான் சொல்ல வந்தேன்’’ என்றார்.
‘‘அப்படின்னா, உண்மையா நடந்துச்சான்னு தெரியாத ஒரு விஷயத்தைப் பத்தி பேசப் போறோம். சரி, இரண்டாவது சோதனையைச் செய்து பார்க்கலாம். என் நண்பரைப் பத்தி என்கிட்ட நீங்க சொல்லப் போறது, அவரைப் பற்றின நல்ல விஷயமா?’’ என்று கேட்டார் சாக்ரடீஸ்.
‘‘நிச்சயமா நல்ல விஷயம் இல்லை’’ எனப் பதில் வந்தது.
“அப்போ நல்ல விஷயத்தையும் நாம பேசப் போறதில்லையா?’’ என்று கேட்ட சாக்ரடீஸ், ‘‘சரி! நீங்க சொல்லப் போற விஷயத்தால எனக்கோ, என் நண்பருக்கோ, இல்ல... வேற யாருக்காவதோ நன்மை இருக்கா?’’ என மூன்றாவது சோதனையைக் கேள்வியாகப் போட்டார் சாக்ரடீஸ்.
‘‘அப்படி எல்லாம் எதுவும் இல்லை’’ என்றார் அந்தப் பெரிய மனிதர்.
சாக்ரடீஸ் அவரை ஆழமாகப் பார்த்தார். ‘‘உண்மையான்னு நிச்சயமா தெரியாத, நல்லதாவும் இல்லாத, யாருக்குமே நன்மை தராத ஒரு விஷயத்தைப் பத்தி எதுக்கு நாம பேசணும்?’’ என்றார்.
யாரோ ஒருவரைப் பற்றி வேறு ஒருவரிடம் எதையாவது பேச ஆரம்பிக்கும்போது, சாக்ரடீஸ் சொன்ன இந்த மூன்று சோதனைகளை ஞாபகம் வைத்துக்கொள்வது நல்லது.