தாழ்வு மனப்பான்மை.... மீள்வது எப்படி?

ஒவ்வொரு புதிய நாளின் காலைப்பொழுதிலும் நீங்கள் வீட்டுக்கு வெளியில் காலடி எடுத்து வைக்கும்போது, உங்கள் மனதுக்குள் தோன்றும் நினைப்பு என்ன? ‘சூரியன் உலகையே பிரகாசமாக்கி வைத்திருக்கிறது... எங்கும் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது... நாமும் இந்த உற்சாக நதியில் நீந்த வேண்டும்’ என நீங்கள் நினைத்தால் ஓகே! ஆனால் அதற்கு பதிலாக, ‘காலையிலயே இவ்வளவு புழுக்கமா இருக்கே. என்ன கொடுமை இது... இந்த நாளை எப்படி ஓட்டுவது? வீட்டுக்குத் திரும்பி வருவதற்குள் ஒருவழி ஆகிவிடுவோம் போலிருக்கிறதே’ என நீங்கள் நினைத்தால், உங்களிடம் ஏதோ பிரச்னை இருக்கிறது. ஆம்... நீங்கள் தாழ்வு மனப்பான்மையால் தவிக்கிறீர்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதையே இந்த உலகத்தில் பார்க்கிறீர்கள்! உங்கள் நினைப்பு மாறினால், இந்த உலகமும் வேறுவிதமாக உங்களுக்குத் தெரியும்.

* அடுத்தவர்களை விமர்சிக்கும்போதுகூட கருணையுடன் நடந்துகொள்ளும் பலர், தங்களைப் பற்றி ஈவு இரக்கமின்றி சுய விமர்சனம் செய்துகொள்கிறார்கள். இப்படிப்பட்ட விமர்சனம் பெரும்பாலான நேரங்களில் அவசியமில்லை. எங்கோ, ஏதோ ஒரு சம்பவம் நடக்கும்; உடனே நீங்கள் தோற்றுவிட்டதாக உங்களுக்குள் இருக்கும் விமர்சகன் சொல்வான்.

உதாரணமாக, ஆபீசில் உங்களுக்கு சமமாக இருப்பவருக்கு உங்களைவிட அதிக சம்பள உயர்வு கொடுக்கிறார்கள். உடனே உங்கள் விமர்சகன் சிலிர்த்து எழுவான். அவனை அப்படியே உலுக்கி எழுப்பி, வெளியில் துரத்துங்கள். தோல்விகள் என்பவை உங்களை முடக்குவதற்கு கடவுள் அனுப்பிய அஸ்திரங்கள் அல்ல; உலகத்தைப் புரிந்துகொண்டு முன்னேறுவதற்குக் கிடைக்கும் வாய்ப்புகள் என்பதை உணருங்கள்!

* உங்களுக்கு நீங்களே நல்ல விமர்சகனாக மாறுங்கள்... ‘உங்களுக்குச் சமமாக இருப்பவர் அதிக சம்பள உயர்வு பெற்றதற்கு அவரது உழைப்பே காரணம்; நீங்கள் தோற்றுவிட்டதாக அர்த்தம் இல்லை. சொல்லப்போனால், உங்கள் அலுவலகம் மிக நல்ல ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட உழைப்பையும் திறமையையும் மதித்து, அதற்குத் தகுந்த பிரதிபலனைச் செய்கிறது. நீங்களும் ஒன்றும் திறமையில் குறைந்தவர் அல்ல; ஏனோ கவனக்குறைவாக இருந்துவிட்டீர்கள். இப்போது முதல் இரண்டு மடங்காக உழைத்து, உங்கள் திறமையை நிரூபித்து, அடுத்த ஆண்டு அவரைத் தாண்டி சம்பள உயர்வு பெற உங்களால் முடியும். அதற்கான தூண்டுதல்தான், இப்போது நடந்த சம்பவம்.’ இப்படி அலசுபவனே உண்மையான விமர்சகன்.

* பலரும் பல தடவை சொல்லிச் சொல்லி அலுத்துப் போன அதே விஷயம்தான்... திரும்பவும் சொல்வதில் தப்பில்லை! இந்த உலகில் பிறந்திருக்கும் ஒவ்வொரு மனிதரும் பிரத்யேகமானவர்கள். ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கிறது. யாரும் யாருக்கும் இணையோ, யாரும் யாரையும்விட தாழ்ந்தவரோ இல்லை. எனவே அடுத்தவர்களுடனான ஒப்பீடுகளைத் தவிர்த்துவிடுங்கள். இந்த உலகில் இருக்கும் மற்றவர்களைப் போல நீங்களும் திறமைசாலியா எனப் பார்க்காதீர்கள். உங்களுக்கு நீங்கள் எப்படிப்பட்டவராகத் தெரிகிறீர்கள் என்பதைப் பாருங்கள்.

சச்சின் போல என்னால் கிரிக்கெட் விளையாட முடியவில்லை... ஏ.ஆர்.ரஹ்மான் போல என்னால் இசையமைக்க முடியவில்லை... அம்பானி போல என்னால் பணக்காரர் ஆக முடியவில்லை... இப்படி ஒவ்வொரு இந்தியரும் நினைத்தால், இந்தியாவில் யாருக்குமே தன்னம்பிக்கை இல்லாமல் போய்விடும். எல்லோருடைய வாழ்வுமே வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

* உங்களை நீங்கள் நேசியுங்கள்; உரிய மரியாதையும் கொடுங்கள். உங்களுக்கு நீங்களே மரியாதை கொடுக்கவில்லை என்றால், மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படி உங்களை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள். அதே மனநிலையோடு, அதே உடலமைப்போடு உங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தோற்றத்தில் ஏதோ ஒரு தனித்தன்மை இருக்கக்கூடும். மற்றவர்கள் யோசிக்காத ஒரு கோணத்தில் யோசிக்கும் திறமையை உங்கள் மூளை பெற்றிருக்கலாம். நீங்கள் எங்கு இருந்தாலும், யாராக இருந்தாலும், மற்ற யாரிடமும் இல்லாத ஒரு தனித்தன்மை உங்களிடம் கண்டிப்பாக இருக்கும். அதைக் கண்டுபிடித்து விட்டால், உங்கள் தாழ்வு மனப்பான்மை நீங்கிவிடும்!

எந்த ஒரு விஷயத்திலும் எல்லோருக்கும் கருத்து இருப்பது போலவே, உங்களுக்கும் ஒரு கருத்து இருக்கும். மற்றவர்களின் கருத்து அவர்களுக்கு எப்படி முக்கியமோ, அதேபோல உங்களின் கருத்தே உங்களுக்கு முக்கியம். அடுத்தவர்களை நிபுணர்களாகக் கருதி, அவர்களின் கருத்துகளை அப்படியே நம்பாதீர்கள். அதன்பிறகு அவர்களின் அடையாளத்தில் நீங்கள் தொலைந்து போவீர்கள்.

* தெருவில் நடந்து போகிறீர்கள். ரோட்டோர மாடியிலிருந்து யாரோ குப்பையைக் கொட்டுகிறார்கள். சத்தம் கேட்ட பிறகும் நீங்கள் அங்கேயே நின்று அந்தக் குப்பை உங்கள் மீது விழட்டும் எனக் காட்டிக் கொண்டிருப்பீர்களா? சட்டென நகர்ந்து ஓடுவீர்கள் அல்லவா? உறவினர்கள், நண்பர்கள், ஆபீசில் இருக்கும் அதிகாரிகள், வீட்டுக்கு அருகே இருக்கும் அக்கம்பக்கத்தினர் என பலரும் உங்களிடம் பலவிதமான விஷயங்களைச் சொல்வார்கள். அவர்கள் சொல்லும் கெட்ட அபிப்ராயங்களையும் நீங்கள் ஏற்றுக்கொள்வது, குப்பையை உங்கள் தலையில் கொட்டட்டும் என நிற்பதற்குச் சமமானது. சொல்வதில் உங்களுக்குத் தேவையான அபிப்ராயங்களை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள். மற்றவைகளை குப்பையாக ஒதுக்கித் தள்ளுங்கள்.

* தினமும் டைரி எழுதுவது போல, உங்களைப் பற்றிய நல்ல விஷயங்களை, அந்த தினத்தில் நீங்கள் செய்த சாதனைகளை, நீங்கள் புரிந்த நற்செயல்களைப் பற்றி எழுதுங்கள். இதற்காக உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். எப்போதாவது தாழ்வு மனப்பான்மை உங்களை வாட்டி, விரக்தியில் தள்ளும்போது, இந்த டைரியை எடுத்துப் படித்து உங்களை உற்சாகமாக்கிக் கொள்ளுங்கள்.

* தினமும் தூங்கி எழுந்ததும் ஒரு முறை... இரவில் தூங்கப் போவதற்குமுன் ஒருமுறை... இப்படி இரண்டு முறை கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றி நல்லதாக இரண்டு, மூன்று விஷயங்களை, கண்ணாடியில் தெரியும் உங்கள் பிம்பத்திடம் சொல்லுங்கள். சொல்வதற்கு ஏதும் விஷயம் இல்லை எனத் தோன்றினாலும், ‘‘நான் ஜெயிக்கப் பிறந்தவன்’’ என்றாவது சொல்லிக்கொள்ளுங்கள். பல கோடி உயிரணுக்களின் ஓட்டத்தில், மற்ற அத்தனையும் தோற்றுவிட, ஒரே ஒரு உயிரணு ஜெயித்து, உங்களைப் பிரசவித்திருக்கிறது. ஆம்... வாழ்க்கையின் முதன்மையான ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்தவர்களே, இங்கு மனிதர்களாகப் பிறந்திருக்கிறார்கள்.                               

crossmenu