உயரே போவது எப்படி?
புகழ்பெற்ற எழுத்தாளர் பாவ்லோ கொய்லோ எழுதிய மிகப் பிரபலமான கட்டுரையின் சுருக்கம் இது. ஏதோ மலை ஏறுகிறவர்களுக்கான ஆலோசனைக் கட்டுரை போல இருக்கும். ஆனால் வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள நினைக்கும் ஒவ்வொருவருக்குமான அட்வைஸ் பட்டியல் இது. ‘மலை’ என்ற இடத்தில் வேலை, வாழ்க்கை, லட்சியம், ஆசை என எந்த வார்த்தையை வேண்டுமானாலும் பொருத்தி படித்துக் கொள்ளலாம்...
மலையைத் தேர்ந்தெடுங்கள்
‘அந்த மலை அழகாக இருக்கும்...’, ‘இந்த மலைதான் ஏறுவதற்கு மிகவும் சுலபமானது’ என அடுத்தவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு காது கொடுக்காதீர்கள். நீங்கள் ஏற விரும்பும் மலையை நீங்களே தேர்ந்தெடுங்கள். உங்கள் சக்தியையும் ஈடுபாட்டையும் முழுமையாகக் கொட்டி, இலக்கை அடைய நினைக்கிறீர்கள். எனவே, உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் எப்போதும் தெளிவாக இருங்கள்.
வழி காணுங்கள்
தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு மலை மிக அழகு. ஆச்சரியங்களையும் சுவாரசியங்களையும் சவால்களையும் தன் ரகசிய மடிப்புகளில் அது மறைத்து வைத்திருக்கும். அதை அடைய முயற்சிக்கும்போதுதான் சிரமங்கள் புரியும். ஏகப்பட்ட பாதைகள் இருக்கும்; காடுகளுக்குள் அவை மறைந்திருக்கும். ஒரு வரைபடத்தில் நீங்கள் பார்க்கும் எளிய பாதைகள், நிஜத்தில் கரடுமுரடான காட்டுவழிகள்! ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமான தடை இருக்கக்கூடும். எல்லாப் பாதைகளையும் ஆராய்ந்து பார்த்து, உங்களுக்கான வழியைத் தீர்மானியுங்கள். அதுவே உங்களை சிகரத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.
அனுபவசாலிகளை ஆலோசியுங்கள்
ஒவ்வொரு மனிதனும் தனித்துவமான படைப்புதான்! நீங்களும் அப்படித்தான். ஆனாலும் உங்களைப் போலவே கனவு கண்டவர்கள் யாரேனும் இருக்கக்கூடும். நீங்கள் அடைய விரும்பும் சிகரத்தை அவர்கள் எட்டிப் பிடித்திருக்கக் கூடும். பின்னால் வருகிறவர்களுக்கு உபயோகமாக இருக்குமே என்று, செங்குத்தான ஒரு பாறையில் அவர்கள் கயிறு கட்டி வைத்திருக்கலாம். குறுகலான வழியில் குறுக்கிட்ட மரக்கிளையை வெட்டி, வழியை அகலமாக்கி இருக்கலாம். உங்கள் பயணத்துக்கும் அதில் குறுக்கிடும் ஆபத்துகளுக்கும் முழுக்க முழுக்க நீங்கள்தான் பொறுப்பு. ஆனாலும் அதில் அனுபவசாலிகளின் ஆலோசனைகள் உதவும் என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்.
ஆபத்துகளை அறியுங்கள்
உங்கள் கனவான சிகரத்தை அடையும் பயணத்தைத் துவக்கும்போது, உங்கள் பாதையை உன்னிப்பாக கவனியுங்கள்; அதன் சூழலை அறியுங்கள். ஆளையே உள்ளே விழுங்கும் ஆபத்தான பிளவுகள் இருக்கலாம்; காலம்காலமாக மழைநீரும் காற்றும் செதுக்கியதில், பாறை வழவழப்பாகி உங்களை வழுக்கிவிழச் செய்யலாம். உங்கள் காலடியை எங்கு எடுத்து வைக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள்.
காட்சிகளில் மயங்காதீர்கள்
நீங்கள் அடைய வேண்டிய சிகரம் எது என்பது, எப்போதும் உங்கள் ஞாபகத்தில் இருக்கட்டும். இந்தப் பயணமே அதற்காகத்தான் என்பதை உணர்வில் வையுங்கள். பயணத்தில் காணும் காட்சிகள் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்; ஒவ்வொரு அடி உயரப் போகும்போதும் புதுப்புது தரிசனங்கள் கிடைக்கும். அவ்வப்போது நின்று அவற்றை ரசிப்பதில் தவறில்லை. ஆனால் அங்கேயே தேங்கி நின்றுவிடாதீர்கள்.
உங்களையும் கவனியுங்கள்
உங்கள் உடல்நலன்மீது போதுமான அக்கறை காட்டினால் மட்டுமே நீங்கள் இலக்கை அடைய முடியும். வாழ்க்கை உங்களுக்கு போதுமான நேரம் கொடுத்திருக்கிறது. தேவையற்ற அவசரம் காட்டி, உங்கள் உடலைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். வேக வேகமாக நடந்தால், விரைவிலேயே களைத்துப்போய் பாதி வழியிலேயே விழுந்து விடுவீர்கள். மெதுவாக நடந்தால், நேரம் போதாமல் இரவிலும் நடக்க வேண்டியிருக்கும். எங்காவது பாதை மாறி தொலைந்து போக நேரிடலாம். இயற்கையை ரசித்தபடி, அது தரும் கனிகளையும் உணவுகளையும் ஏற்றுக்கொண்டு பயணத்தை இயல்பான வேகத்தில் தொடருங்கள்.
உள்ளுணர்வை மதியுங்கள்
‘நான் இதை சாதிக்கப் போகிறேன்’ என திரும்பத் திரும்ப மனதுக்குள் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் உள்ளுணர்வுக்கு அது ஏற்கனவே தெரியும். ஏதோ இறுக்கமான லட்சியப் பயணமாக இதை நீங்கள் நினைத்துக் கொண்டால், பயணத்தின் இனிய சுவாரசியங்களை இழந்துவிடுவீர்கள். அதேபோல, ‘நான் நினைத்ததைவிட இந்தப் பயணம் கடினமாக இருக்கிறது’ என அடிக்கடி சொல்லாதீர்கள். அது உங்கள் மன உறுதியை சிதைத்துவிடும்.
எதற்கும் தயாராகுங்கள்
சிகரத்தை அடையும் பாதை, நீங்கள் நினைத்ததை விட நெடியதாக இருக்கலாம். மிக அருகே நெருங்கி விட்டது போல ஒரு பார்வையில் தோன்றும். ஆனால் இன்னும் நெருங்க நெருங்க, அது விலகிப் போகும். எத்தனை தூரத்தில் இருந்தாலும் அடைந்துவிடும் உறுதியோடு பயணத்தைத் தொடருங்கள்.
வெற்றியில் மகிழுங்கள்
சிகரத்தை அடைந்ததும் உற்சாகக் கூச்சலிடுங்கள்; கைதட்டி உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். அற்புதமான காற்றை அனுபவியுங்கள். களைப்பு தீர ஓய்வெடுங்கள். அந்த இனிமையான தருணத்தை கண்களை மூடி மனப்பூர்வமாக ரசித்துக்கொள்ளுங்கள். எப்போதோ கண்ட ஒரு கனவு, இப்போது உங்கள் வாழ்க்கையில் நிஜமாகிவிட்டது. நீங்கள் சாதித்துவிட்டீர்கள்.
உறுதி எடுங்கள்
உங்களுக்கே இதுவரை தெரியாமல் இருந்த உங்கள் பலத்தை இப்போது நீங்கள் கண்டறிந்து விட்டீர்கள். வாழ்க்கையில் இனிவரும் எல்லா நாட்களிலும் உங்களின் இந்த பலத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு உறுதி எடுங்கள். நீங்கள் அடைய வேண்டிய அடுத்த மலை எது, அடுத்த சாகசப்பயணம் எது என்பதை அங்கேயே உங்களுக்குள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
முன்மாதிரியாக இருங்கள்
ஆம், உங்கள் அனுபவங்களை அடுத்தவர்களுக்கும் சொல்லுங்கள். முன்மாதிரியாக இருங்கள். ‘முயன்றால் முடியும்’ என்பதை ஒவ்வொருவருக்கும் சொல்லுங்கள். எல்லோரும் தங்கள் சிகரங்களை அடைவதற்கான மன உறுதியை உங்களிடமிருந்து பெறுவார்கள்.