மகாத்மாவின் மகத்தான உரையாடல்!

மகாத்மாவின் மகத்தான உரையாடல்!

காந்தி ஒற்றை வார்த்தை சொன்னாலும், அதை மந்திரமாக ஏற்று மக்கள் பின்பற்றினார்கள். தன் பேச்சால் இந்தியாவையே கட்டிப் போட்ட காந்தி, இளம் வயதில் கூச்ச சுபாவத்துடன் பேசவே தயங்கும் இளைஞராக இருந்தார் என்பது ஆச்சரியம்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து அவர் அட்டர்னி ஆனார். முதல் வழக்குக்காக நீதிமன்றத்தில் வாதாடும்போது, அவர் கால்கள் நடுங்கின. நாக்கு குழறியது. என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிய அவர், அப்படியே கீழே உட்கார்ந்துவிட்டார். ஆனால் தென் ஆப்ரிக்கா சென்றபிறகு அவர் வெற்றிகரமான வழக்கறிஞராக மாறினார். அங்கு அவர் வாதாடிய 70 வழக்குகளில் ஒன்றில் மட்டுமே தோற்றார். பேச்சின் முக்கியத்துவம் பற்றி காந்தி இப்படிக் குறிப்பிடுகிறார். ‘உண்மையை அறிந்தோ அறியாமலோ, மிகைப்படுத்தியும் மறைத்தும் திரித்தும் கூறுவது, மனிதனுக்கு இயற்கையாகவே இருக்கும் ஒரு குறைபாடு. அதிலிருந்து தப்புவதற்கு மௌனம் அவசியமானது. குறைவாகப் பேசுபவர், யோசிக்காமல் பேச வாய்ப்பு இருக்காது. ஒவ்வொரு சொல்லையும் அவர் நிறுத்தியே பேசுவார். பேச வேண்டும் என்று பெருத்த ஆசையுடன் இருப்போர் பலரைப் பார்க்கிறோம். மணிக்கணக்கில் இவர்கள் பேசிக்கொண்டே போகிறார்கள். இத்தகைய பேச்சுக்களால் உலகத்துக்கு என்ன ஆதாயம்? உண்மையில் எனக்கு இருந்த கூச்சமே, எனக்குக் கேடயமாகவும், கவசமாகவும் ஆயிற்று. நான் வளர்ச்சியடைய அது அனுமதித்தது. அளந்து பேச அது உதவியது’ என்கிறார் காந்தி.
கூச்ச சுபாவமுள்ள, வசீகரிக்கும் தோற்றமில்லாத, அருவி போல கொட்டும் மொழிநடையில் பேசத் தெரியாத காந்தியை மக்கள் கொண்டாடியது அவரின் இயல்புக்காகத்தான். அவரது பேச்சில் ஒரு சிநேகத்தன்மை இருந்தது. நெருங்கிய நண்பர்கள் ஒன்றிரண்டு பேருடன் இயல்பாக உரையாடுவது போன்ற தொனியில் அவர் பேசினார். அதில் தேவையற்ற ஒப்பனைகள் இருக்காது, ஏற்ற இறக்கங்கள் இருக்காது. மகுடிக்குக் கட்டுப்படும் பாம்பு போல அந்தப் பேச்சுக்கு மக்கள் மயங்கினார்கள்.
காந்தியின் பணி மிகுந்த சவாலானது. தமிழகம் தொடங்கி காஷ்மீர் வரை, மேற்கில் குஜராத் தொடங்கி, கிழக்கில் வங்காளம் வரை இந்தியா முழுக்க பல்வேறு மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் மொழியில் பேசும் அளவுக்கு இந்தியாவின் எல்லா மொழிகளையும் அறிந்த தலைவர்கள் யாரும் கிடையாது. வெவ்வேறு மதங்களால், வெவ்வேறு ஜாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்தார்கள். இவர்களை ஒன்றிணைத்து விடுதலைப் போரை நடத்துவது சாதாரண விஷயம் இல்லை. அதை காந்தி செய்தார். எளிமையான இந்தியில் அவர் பேசுவார். அந்த மொழியே புரியாத மக்கள் அமைதியாக அமர்ந்து கேட்பார்கள். ஒரிசாவில் ஒரு கடற்கரைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் அவர் கூட்டத்துக்கு வந்து அமர்ந்து அமைதியாக கவனித்ததை வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் யாருக்கும் காந்தி என்ன பேசினார் என்பது புரியவில்லை. ஆனால், காந்தி தங்கள் மத்தியில் பேசுகிறார் என்பதே போதுமானதாக இருந்தது.
அவர் அகிம்சையை, சத்தியத்தை, விடுதலையை, ஒன்றிணைந்து இருப்பதை வலியுறுத்துவார் என்பது எல்லோருக்கும் தெரியும். உண்மையில் காந்தியின் பல கூட்டங்களில் மைக்கே இருக்காது. அவர் பேசுவது, முன்வரிசையில் உட்கார்ந்திருக்கும் சிலரைத் தவிர வேறு யாருக்கும் கேட்காது. என்றாலும், வேட்டி அணிந்த அந்த எளிய உருவத்தை தரிசித்தபடி மக்கள் அமர்ந்திருப்பார்கள்.
படித்த மேதைகள் முதல் எளிய படிப்பறிவில்லா பாமரர்கள் வரை எல்லோரையும் காந்தி தன் பேச்சால் கட்டிப் போட்டார். இத்தனைக்கும் அவர், எல்லோருக்கும் சுகம் தரும் விஷயங்களைப் பேசவில்லை. பிரிட்டிஷார் கொடுத்த வேலைகளை விடச் சொன்னார், அந்நியத் துணிகளை எரிக்கச் சொன்னார், போராட்டத்தில் கலந்துகொண்டு கஷ்டப்படச் சொன்னார். ஆனால், காந்தி சொன்னார் என்பதற்காக எல்லோரும் கேட்டார்கள்.
ஒருவர் எப்படிப்பட்ட இயல்பிலிருந்து பேசுகிறார் என்பதைப் பொறுத்தே, அவர் சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். மகாத்மா அதை நமக்கு உணர்த்துகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu