பாரம்பரியத்தின் பெருமை!

பாரம்பரியத்தின் பெருமை!

மனிதர்களின் அடிப்படைத் தேவைகளாக உணவும், உடையும் வரையறை செய்யப்பட்டுள்ளன. உணவு இல்லாமல் கூட ஓரிரு வேளைகள் இருந்து விடலாம். ஆனால் மானம் காக்கும் உடை அத்தியாவசியம்.

தென்னையிலும், பனையிலும் நார் எடுத்து பெட்டிகளையும் வலைகளையும் செய்யக் கற்றுக் கொண்ட நம் நாட்டினர், அதன் தொடர்ச்சியாக பருத்தியிலிருந்து பஞ்சைப் பிரித்தெடுக்கவும், அந்தப் பஞ்சிலிருந்து நூல் நூற்கவும் கற்றார்கள். ஆடை நாகரிகத்தில் மாபெரும் புரட்சியான இது, இந்தியாவில்தான் நிகழ்ந்தது என்பது நமக்கெல்லாம் பெருமை. வெகு விரைவிலேயே நுண்மையும் மென்மையும் மிக்க மேன்மையான பருத்தி ஆடைகள் நெய்வதை நம் மக்கள் கற்றறிந்தார்கள். நெய்யப்பட்ட இழைகளின் வரிசை தெரியாதபடி அவ்வளவு கச்சிதமாக ஆடைகள் இருந்தன என புலவர்கள் இவற்றைப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

வெடித்துச் சிரித்த பருத்தியிலிருந்து தூய வெண்மையில் ஆடை நெய்து ஆண்கள் அணிந்தனர். கீழே வேட்டியும், மேலே மெய்ப்பை எனும் சட்டையும் ஆண்களின் ஆடை. இதோடு, ஆடைகளுக்கு இயற்கை வண்ணங்கள் சேர்க்கும் கலையும் அறிந்திருந்தனர் நம் முன்னோர்கள். நீலம், சிவப்பு ஆகிய வண்ணங்களில் பெண்கள் அணியும் புடவை உள்ளிட்ட ஆடைகள் உருவாக்கப்பட்டன. இந்த வண்ணங்களில் அழகிய பூ வேலைப்பாடுகள் செய்து, ஆடைகளை மதிப்புமிக்கதாக மாற்றினர்.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிக நகரமான மொகஞ்சதாரோவை அகழ்வாராய்ச்சி செய்தபோது, அங்கு வாழ்ந்த இந்தியர்கள் பருத்தி நெசவு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இன்று உலகத்துக்கே புதிய நாகரிகத்தை, புதிய ஃபேஷனை அறிமுகம் செய்பவர்களாக மேற்கத்திய நாடுகள் இருக்கலாம். ஆனால் நாம் பருத்தியில் மென்மையான ஆடைகளை நெய்து, தூய்மையாக அணிந்து வலம் வந்த காலத்தில் அவர்கள் கம்பளியில் எதையோ கோர்த்து அணிந்து கொண்டிருந்தார்கள்.
இந்தியாவை ஆக்கிரமிக்க வந்த வெள்ளையர்களின் கிழக்கிந்தியக் கம்பெனி, தென்னிந்தியாவிலிருந்து பருத்தி ஆடைகளை வாங்கி பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது. அடிக்கடி துவைக்க முடியாத கம்பளி ஆடைகளை அதுவரை அணிந்துவந்த வெள்ளைக்காரர்கள், இந்தியப் பருத்தி ஆடைகளுக்கு உடனே மாறினார்கள். எளிதில் துவைத்து தூய்மையாக உடுத்திக் கொள்ள முடியும் என்பது பருத்தி ஆடைகளின் சிறப்பு. இந்தியப் பருத்தி ஆடைகள் தரமாகவும் இருந்தன; விலை மலிவாகவும் இருந்தன. நாளடைவில் இந்தியப் பருத்தி ஆடைகளே, பிரிட்டன் முழுக்க மக்களால் விரும்பப்படும் உடையாக இருந்தது. பிரிட்டிஷ் தயாரிப்புகளை வாங்க ஆளில்லை. இப்படி தங்கள் மார்க்கெட்டை இந்திய ஆடைகள் ஆக்கிரமித்தது கண்டு பயந்துபோன பிரிட்டிஷ் அரசு, 1721ம் ஆண்டு ஒரு சட்டம் போட்டு இந்திய ஆடைகளைத் தடை செய்தது.

நாம் அடைந்த சுதந்திரத்துக்கும் நம் ஆடைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. உலகத்துக்கே பருத்தி ஆடைகளைக் கொடுத்த நாம், வெளிநாடுகளிலிருந்து அதை இறக்குமதி செய்து அணியும் அவல நிலைக்கு ஆளானோம். இதை மாற்றியதுதான் மகாத்மா காந்தியின் கதர் இயக்கத்தின் சாதனை! நம்மை சுதேசியாக இருக்கச் சொன்னார் காந்தி. அந்நியத் துணிகளை புறக்கணிக்கச் சொன்னார். அதைச் செய்தே நாம் சுதந்திரம் அடைந்தோம். ‘‘கைத்தறி, ஒரு கண்ணியமான சிறுதொழிலாக இங்கு காலம் காலமாக இருந்து வருகிறது. இந்தியாவின் லட்சக்கணக்கான ஏழைகள் பட்டினியில் தவிக்காமல் இருக்க வேண்டும் என்றால், நாம் நமது நெசவாளர்களைச் சார்ந்திருக்க வேண்டும்’’ என்று காந்தி சொன்னார். வேட்டி அணியும் ஒவ்வொருவரும் காந்தியின் இந்தக் கனவை நனவாக்க உதவுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu