காந்தியும் கடவுளும்!

காந்தியும் கடவுளும்!

          சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தை ஆண்டுவந்த பிரிட்டிஷ்காரர்களை அச்சமின்றி எதிர்த்தவர் மகாத்மா. ஆனால், சிறுவனாக இருந்தபோது காந்திக்குப் பயம் அதிகம். பாம்பு பயமும் திருடர் பயமும் நிறைய. இருட்டைக் கண்டாலே நடுங்குவார். இருட்டில் கண்களை மூடினால் பிசாசுகள் வந்து சூழ்ந்து கொள்வதாகவும் நினைத்து நடுங்குவார்.

          காந்திக்கு தாய் புட்லி பாயின் பக்தியும் தெய்வ நம்பிக்கையும் கண்டு வியப்பு ஏற்பட்டது. தாயோடு அவர் கோயில்களுக்குச் செல்வதுண்டு. ஆனால் அவரின் இளம் உள்ளத்தில் பக்திப் பயிரை விளைவித்தவர், அவரது வீட்டில் வேலை செய்துவந்த அரம்பை என்ற பெண்மணியே.

          காந்திஜியை வளர்த்த செவிலித்தாயாகவும் இருந்தவர் அரம்பை. காந்தியின் பயங்களைப் போக்க அரம்பை பாடுபட்டார்.

          ஒருநாள் காந்தி தனது வீட்டுக்குள் ஓர் இருட்டறையில் தனியாகச் செல்வதற்குப் பயந்தார். ‘‘ஒன்றும் பயமில்லை, போ’’ என்றனர் சகோதரர்கள். ஆனால் காந்தி பயத்தோடு போகாமல் நின்றிருந்தார். அரம்பை அருகில் வந்தார். ‘‘மோகன்தாஸ், உனக்குப் பயம் ஏற்படும்போதெல்லாம் ‘ராம்... ராம்...’ என்று சொல். அந்த ராம நாமம் உன் பயத்தைப் போக்கிவிடும்’’ என்றார்.

          அவர் இப்படிச் சொன்னதும், காந்திக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ‘ராம்... ராம்...’ என்று கூறிக்கொண்டே இருட்டறைக்குள் சென்றார். பயம் மெல்ல மெல்ல அவரைவிட்டு அகன்றது. அன்றுமுதல் காந்தி ராம நாம ஜெபம் செய்யத் தொடங்கினார்.

          மகாத்மா அதிகம் கோயிலுக்குப் போனதோ சாமியார்களைத் தரிசித்ததோ இல்லை. ஆனால் அவரது இறை நம்பிக்கை எவருடையதை விடவும் குறைந்ததில்லை. எல்லா மதங்களையும் இணைக்கும் கூட்டு வழிபாட்டை அவர் வலியுறுத்தினார். வாழ்நாள் முழுக்க அவர் நிகழ்த்தியதும், சுட்டுக்கொல்லப்பட்ட தினத்தன்று அவர் பங்குபெற விரைந்ததும் அப்படிப்பட்ட ஒரு பிரார்த்தனைதான். அவரின் பிரார்த்தனைகளில் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்ற பாடல் தவறாமல் இடம்பெறும். முக்கியமான தருணங்களில் அவர் ‘ஹே ராம்’ என்று சொல்லத் தவறுவதில்லை.

          கடவுளையும் சத்தியத்தையும் அவர் இணைத்துப் பார்த்தார். ‘கடவுளிடம் நம்பிக்கை வைத்திருப்பதால்தான் நான் வாழ முடிகிறது. என்னுடைய கருத்தில் சத்தியத்திலிருந்து வேறாகக் கடவுள் ஒன்றுமில்லை. சத்தியமே கடவுள். இந்த உலகமே மறுத்தாலும் கடவுள் இருக்கத்தான் செய்கிறார்; அதுபோலத்தான் உண்மையும். அதற்கு ஆதரவு இல்லையென்றாலும் அது நீடித்திருக்கவே செய்யும். உண்மை மற்றும் அகிம்சையின் வழியேதான் கடவுளைப் பார்க்க முடியும். அவை இரண்டும்தான் என் கடவுள். அவை, ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை’ என்றார் அவர்.

          இறைவனை உணர்வதற்கான வழியையும் மகாத்மா காட்டுகிறார். ‘ஒரு மனிதன் விருப்பு வெறுப்புகளிலிருந்து முற்றிலுமாக விடுதலை பெறும்போதுதான் இறைவனை உணர்கிறான். வேறு வகையில் உணர்வதிற்கில்லை. கடவுள் நம்மையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார். தண்டிப்பதற்காக அல்ல, திருத்துவதற்காகவே கவனிக்கிறார். கடவுளிடம் நமக்கு நம்பிக்கை இருந்தால், வாசலில் நம்பிக்கையான காவல்காரன் இருக்கும்போது நாம் கவலையின்றி இருப்பது போலவே இருக்க வேண்டும். ஒருபோதும் தவறாதவரான கடவுளைவிட நமக்கு நல்ல வாயில் காப்போன் வேறு யார் இருக்க முடியும்?’ என்றார் மகாத்மா.

          தெய்வ நிந்தனை கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார். ‘கடவுள் எல்லோரையும் பாதுகாப்பவர். இப்படிச் சொல்வதால், நம் உடமைகளை யாரும் கொள்ளையிட முடியாது என்றோ, எந்த மிருகமும் நம்மைத் தாக்காது என்றோ பொருள் அல்ல. அப்படி ஏதேனும் நடந்தால், அது கடவுளின் பாதுகாப்புக்கு இழுக்கு அல்ல; அவரிடம் நமக்கு நம்பிக்கை இல்லாததுதான் காரணமாக இருக்க முடியும். நதி எப்போதும் எல்லோருக்கும் நீர் வழங்கத் தயாராக உள்ளது. ஆனால் ஒருவன் தண்ணீர் நிறைக்க பானை எடுத்துக்கொண்டு ஆற்றுக்குச் செல்லவில்லை என்றால் அது எப்படி ஆற்றின் பிழையாகும்?’ என்று கேட்டார் காந்தி.           பக்தி எப்படி இருக்க வேண்டும்? ‘தினந்தோறும் புதுப்புதுப் பொருட்களையும் செல்வத்தையும் சேர்ப்பதுதான் கடமை என்று இருக்கக்கூடாது. படைத்தவனைப் பாராட்டுவதும் அவனைப் பார்க்க விரும்புவதும்தான் கடமையாகக் கொள்ள வேண்டும்’ என்பது மகாத்மா சொல்லும் மார்க்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu