குழந்தையை நம்பர் 1 ஆக்கும் உணவுகள்!

குழந்தையை ஆரோக்கியமாக வளர்ப்பதில் மட்டுமின்றி, அவர்களை அறிவாளியாக செதுக்குவதிலும் உணவுக்கு பெரும் பங்கு உண்டு. வளரும் குழந்தைக்கும் சரிவிகித ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவு தருவது அவசியம். அப்படிப்பட்ட சூப்பர் உணவுகள் சில:

ஓட்ஸ்: காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடும் குழந்தைகள், பள்ளியில் பாடங்களை ஊன்றி கவனிக்க முடிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நார்ச்சத்து நிரம்பிய முழு தானியமான ஓட்ஸ், சிறிது சிறிதாகவே ஜீரணமாகிறது. எனவே சீரான சக்தியை நீண்ட நேரம் குழந்தைக்கு வழங்குகிறது.

லவங்கப்பட்டை தூள்: காலையில் குழந்தைக்குத் தரும் தோசை, பொங்கல் போன்ற டிபன் அயிட்டங்களில் இதைத் தூவிக் கொடுக்கலாம். குறிப்பாக தோசையில் இதைத் தூவி, பொடி தோசை போல தரலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை முறைப்படுத்தும் சக்தி இந்தப் பொடிக்கு உண்டு. மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக குழந்தைக்கு பசி எடுத்து சோர்ந்து போகாமல் இது தடுக்கிறது.

துளசி: புனிதமான இந்த இலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவற்றோடு இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் என எல்லாம் உள்ளன. உணவு ஜீரணமாவதை இது நெறிப்படுத்துகிறது. தலைவலியையும் குணப்படுத்துகிறது. துளசி இலைகள் இரண்டு, மூன்றை நன்கு கழுவிவிட்டு குழந்தைகளை சாப்பிடச் சொல்லுங்கள். அப்படியே சாப்பிட அடம் பிடித்தால் டீ, காய்கறி சூப் போன்ற பானங்களில் கலந்தும் தரலாம்.

காராமணி: பெரியவர்கள் மட்டுமில்லை; துரித உணவு சாப்பிடும் இந்தக் கால குழந்தைகளுக்கும் கொலஸ்டிரால் பிரச்னை உண்டு. கறுப்பு காராமணி பயறுக்கு கொலஸ்டிராலை குறைக்கும் சக்தி உண்டு. அதோடு உடலுக்குத் தேவையான கால்சியமும் புரோட்டீனும் தருகிறது. வாரம் இரண்டு நாள் இதை சுண்டல் செய்து மாலை டிபனாகக் கொடுங்கள்.

தக்காளி: தினம் ஒரு தக்காளி சாப்பிட்டால், புற்றுநோய் வரும் என்ற பயம் தேவையில்லை. சாம்பார், குழம்பு என எல்லாவற்றிலும் தக்காளி இருந்தாலும், வாரம் ஒருநாளாவது காய்கறி சாலடில், பழுத்த தக்காளியைத் துண்டாக்கி பச்சையாக சாப்பிடச் சொல்வது நல்லது.

பசலைக்கீரை: இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி என எல்லாம் தரும் அற்புதக் கீரை. இந்தக் கலவையே எலும்பு வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் அத்தியாவசியத் தேவை. விரைவாக சமைக்க முடிகிற கீரை. சூப்பாக வைத்தும் குடிக்கலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: வழக்கமான ஊட்டச் சத்துக்களோடு நார்ச்சத்தும் நிறைந்தது. வேக வைத்து மாலை நேர டிபனாகக் கொடுக்கலாம். மூளை வளர்ச்சிக்கு உதவும் முத்தான கிழங்கு.

தயிர்: கெட்டித் தயிர் ஒரு மகத்தான கால்சிய வங்கி. புரோட்டீனும் நிறைய தரும். எலும்புகள் மற்றும் பற்களின் நேர்த்தியான வளர்ச்சிக்கு தயிர் உதவுகிறது. உணவின் இயல்பான செரிமானத்துக்கும் உதவுகிறது; குடலில் பாக்டீரியாக்கள் வளராமல் தடுக்கிறது.

முட்டை: ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வைட்டமின்களும் மினரல்களும் அடங்கியது. குறிப்பாக கோலின் என்ற ஊட்டச்சத்து இருக்கிறது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. வைட்டமின் டி இதில் நிறைய உள்ளது; இதர உணவுகளிலிருந்து கால்சியம் சத்தை உடல் உறிஞ்சிக் கொள்ள இந்த வைட்டமின் உதவுகிறது. முட்டை தரும் புரோட்டீன், குழந்தைகள் பாடத்தைக் கூர்ந்து கவனிக்க உதவுகிறது.

crossmenu