எடை குறைக்கும் டயட்

*காலை உணவு கண்டிப்பாகத் தேவை. குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.

*குறைந்தது தினமும் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் நீண்ட நேரம் இருக்காமல், ஆரோக்கிய உணவை நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது. பசியை வளர்த்தால், அது அளவுக்கு அதிகமாக நம்மை சாப்பிட வைக்கும்.

*உடல் பருமனுக்கு முக்கியக் காரணம் அரிசிச் சாதம். உங்கள் உணவில் சாதத்தைக் குறைத்து, ஒரு பங்கு சாதம், இரண்டு பங்கு வேக வைத்த காய்கறிகள் என்று அளவாகச் சாப்பிடலாம். இரவில் சாதத்தைத் தவிர்த்து சப்பாத்தி போன்ற டிபன் வகைகள் சாப்பிடுவது நல்லது.

*அசைவப் பிரியர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சியைக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். ஆனால் வாரத்துக்கு இரண்டு, மூன்று நாட்கள் என்றெல்லாம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மீனை எண்ணெயில் பொரிக்காமல், குழம்பு வைத்து சேர்த்துக்கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

*குழந்தைப் பருவத்திலேயே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியைப் பழக்கிவிட வேண்டும். தினமும் ஒரு மணி நேரத்துக்காவது விளையாட்டு, உடற்பயிற்சிகளில் குழந்தைகள் ஈடுபட வேண்டும். பெரியவர்கள் குறைந்தது 30 நிமிடங்கள் பிரிஸ்க் வாக்கிங் செய்ய வேண்டும்.

*குடும்பமே தொலைக்காட்சியில் மூழ்கிக்கிடக்காமல், எல்லோரும் சேர்ந்து பங்குபெறும் ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது தோட்ட வேலை போன்ற கூட்டு முயற்சிகளில் வியர்வை சிந்தலாம்.

*காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். முடியாதவர்கள் பிளாக் டீ அல்லது பிளாக் காபியில் சர்க்கரையின் அளவைக் குறைத்து அருந்தலாம்.

*கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், அவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.

*நெல்லிக்காயைக் கொட்டை நீக்கிச் சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

*கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவை மூன்றையும் பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

*அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் தொப்பை குறையும்.

*பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலை டிபனுக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

*கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

*வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்ப்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவற்றை அப்படியேவோ, சாறு எடுத்தோ சாப்பிட்டால் எடை குறையும்.

*கரிசலாங்கண்ணி இலையை, பாசிப் பருப்புடன் சேர்த்துச் சமைத்து தினமும் சாப்பிட்டால் உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டுக் காய்ச்சி அடிக்கடிக் குடித்து வந்தால் உடல் எடை குறையும். 

*உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவில் தேங்காய் சேர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.

*பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். பப்பாளிக் காயைக் கூட்டு, சாம்பார் செய்து சாப்பிடலாம். இதேபோல் முள்ளங்கியும் எடை குறைக்க உதவும்.

*இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து கொதிக்க வைத்து, சாறு சற்றுச் சுண்டியதும் அதில் தேன் விட்டுச் சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும். இதில் காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.

*இப்போது லிப்போசக்ஷன் என்ற கொழுப்பு உறிதல் சிகிச்சையும் உள்ளது. இது, உடலின் எந்தப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்ற வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த இடத்தில் செய்யப்படும்.

*இதில் லேட்டஸ்ட், ‘பேரியாட்ரிக் சர்ஜரி’ என்ற அறுவைச் சிகிச்சை. அதீத உடல் எடையோடு இருப்பவர்களுக்கு வயிற்றின் அளவைச் சுருக்கியோ, குடலில் ஒரு பகுதியை கத்தரித்தோ, இறுகக் கட்டியோ அல்லது சிறுகுடலை பைபாஸ் செய்தோ நிகழ்த்தப்படும் அறுவைச் சிகிச்சை. இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மூக்கு முட்ட சாப்பிட முடியாது என்பதால், பலரின் விருப்பத் தேர்வாக இப்போது இது இருக்கிறது. 

crossmenu