அன்பாக ஒரு சங்கிலி!

பிஸியான கடைவீதியில் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தபோது யதேச்சையாக அந்த நகைக்கடை ஷோகேஸில் ஒரு நெக்லஸைப் பார்த்தாள் அந்தப் பெண். கழுத்தை ஒட்டி அணியும்விதத்தில் அவ்வளவு கச்சிதமாக இருந்தது அது. ஆங்காங்கே பதிக்கப்பட்டிருந்த சிவப்பு கற்கள் அதன் அழகுக்கு இன்னும் மெருகூட்டின. நடைப்பாதையில் போகும் எல்லாப் பெண்களுமே அந்த நெக்லஸை ஒருவித ஏக்கத்தோடு பார்த்துவிட்டுப் போவது போல அவளுக்குத் தோன்றியது.

ஒரு முடிவோடு கடைக்குள் நுழைந்தாள். அதன் விலையை விசாரித்தாள். இப்போதைக்கு அவள் வாங்கும் அளவுக்கான விலையில் அது இல்லை என்பது புரிந்தது. ‘‘நான் கொஞ்சம் பணம் அட்வான்ஸ் கொடுத்துட்டுப் போறேன். சில நாள் கழிச்சுவந்து இதை வாங்கிக்கறேன். அதுவரைக்கும் இதை யாருக்கும் விற்காம எடுத்து வச்சிருக்க முடியுமா?’’ என்று கேட்டாள்.

“அதுக்கென்ன மேடம்... தாராளமா வச்சிருந்தா போச்சு! சரி... எவ்வளவு நாள் நாங்க இப்படி வச்சிருக்கணும்!’’

அவள் ஒருவிதத் தீர்மானத்தோடு சொன்னாள்... ‘‘என் கணவர் அடுத்துப் பெரிதா ஏதாவது தப்பு செய்யற வரைக்கும் வச்சிருந்தா போதும். அதைக் காரணமா வச்சு அவரை இதை வாங்கித் தரச் சொல்லிடுவேன்...’’ 

உறவுகளுக்குள் இன்று அன்புப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. மேனேஜருக்கு ‘டேமேஜர்’ என பெயர் வைத்து மனசுக்குள் திட்டிக் கொண்டிருந்தாலும், அற்ப விஷயங்களுக்கெல்லாம் அவரைப் புகழ்வார்கள். வியாபாரம் செய்வதற்காக முகம் தெரியாத கஸ்டமரிடம் வழிந்து வழிந்து பேசுவார்கள். காரியம் ஆக வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கிற பலருக்கு வீட்டில் மனைவி, குழந்தைகளிடம் பேச நேரம் இருக்காது. ‘அது தேவையா?’ என நினைக்கிறவர்கள் பலர். ‘என் மனைவிதானே... என் குழந்தைதானே... என்ன பாராட்டும் மன்னிப்பும் வேண்டிக் கிடக்குது’ என அலட்சியம் செய்பவர்கள் பலர். விட்டுக் கொடுப்பதும் தட்டிக் கொடுப்பதும்தான் உறவுச் சங்கிலியைப் பிணைத்து வைத்திருக்கும் மாய வளையம் என்பதை உணராதவர்கள் இவர்கள்.

ஒப்பீடுகளாலும் மதிப்பீடுகளாலும் கணவனைக் காயப்படுத்தும் பெண்களும் இருக்கிறார்கள்...

வேகமாகப் போய்க் கொண்டிருந்தது அந்த ஆட்டோ. திடீரென ஒரு கட்டடத்திலிருந்து வெளிப்பட்ட இளைஞன், கை காட்டி அதை மறித்து ஏறினான். ‘‘சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு போங்க!’’ என்றான்.

ஆட்டோ டிரைவர் அவனைப் பார்த்து புன்னகைத்தபடி சொன்னான்... ‘‘அதிர்ஷ்டக்கார ஆள் சார் நீங்க! ஒரு நொடிகூட வெயிட் பண்ணத் தேவையிருக்காம உடனே ஆட்டோ கிடைச்சிடுச்சு. குப்புசாமியும் இப்படித்தான்!’’ 

‘‘அப்படியா?’’

‘‘அது மட்டும் இல்ல சார்! குப்புசாமி எல்லாத்தையுமே சரியா செய்வான். ஜேசுதாஸ் மாதிரி பாடுவான். பிரபுதேவா மாதிரி டான்ஸ் ஆடுவான். அவனுக்கு சினிமா பிடிக்கலை. அதனால போகலை. அபார ஞாபக சக்தி. எல்லாரோட பிறந்த நாளையும் ஞாபகம் வச்சிருந்து கரெக்டா முதல் ஆளா வாழ்த்து சொல்லுவான். டிராபிக்ல சிக்காம எப்படி சிட்டிக்குள்ள வண்டி ஓட்டறதுன்னு அவனுக்குத்தான் தெரியும். என்னால ரெண்டு தெரு தாண்ட முடியாது. வீட்ல ஒரு பல்பு ஃபியூஸ் போனாக்கூட எனக்குச் சரியாக் கழட்டி மாட்டத் தெரியாது. குப்புசாமி ஒரு முழு வீட்டுக்கும் ஒயரிங்கே பண்ணிடுவான். நல்லா டிரஸ் பண்ணிக்குவான். எப்பவும் சுறுசுறுப்பா இருப்பான். எல்லாத்துக்கும் மேல பொம்பளைங்க கிட்ட அன்பா நடந்துக்கறது எப்படின்னு அவனுக்குத்தான் தெரியும்...’’ 

வந்த பயணி ஆச்சரியமானான். ‘‘யாருங்க அந்த குப்புசாமி... நீங்க பாத்திருக்கீங்களா?’’

ஆட்டோ டிரைவர் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான்... ‘‘இல்லை! என் கையில மட்டும் சிக்கினான்னா, அன்னைக்கே அவன் செத்தான். என் பொண்டாட்டியோட ஃபிரெண்டு புருஷன் அவன். அவனைக் காட்டிக் காட்டித்தான் என்னைத் திட்டிக்கிட்டு இருக்கா...’’

crossmenu