அடிமையாக்கும் போதைகள்!

சில நேரங்களில், நாம் பொழுது போக்க முடியாமல் விளையாட்டாகச் செய்கின்ற விஷயங்களுக்கு அடிமையாகி விடுகிறோம். உதாரணமாக, பேருந்துகளில் செல்லும்போது, ஓய்வாக அமர்ந்திருக்கும்போது, நம்முடைய அலைபேசியில் விளையாடுவோம். நாளாக நாளாக அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறோம். தொடர்ந்து அலைபேசியில் விளையாடிக் கொண்டே இருப்பது, வேலைக்கு இடை இடையே விளையாடுவது, யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும்போது அவர்கள் முகம் பார்த்துப் பேசாமல் அலைபேசியில் விளையாடிக் கொண்டே பேசுவது, இன்னும் ஒரு படி மேலே போய் காலை எழுந்தது தொடங்கி இரவு தூங்கும் வரை விளையாட்டிலே கழிப்பது என அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறோம். ஆங்கிலத்தில் இது ‘மேனியா’ என்று அறியப்படுகிறது.

ஆஷா மிகப் பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். நிர்வாகப் பொறுப்பில் வேலை. அலுவலகத்தில் அதிக வேலைப் பளு, வீட்டிலும் பொறுப்புகள் அதிகம். தங்கையின் படிப்புச் செலவு, அப்பாவின் மருத்துவச் செலவு என கவனித்து வருகிறாள். வேலை முடிந்தால் வீடு, வீட்டிலிருந்து அலுவலகம் என இயந்திரமாக சுழலும் அவளுக்கு ஒரு வடிகால் வேண்டும் என்பதற்காக எப்போதாவது தோழிகளுடன் வெளியே செல்வாள். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இப்படி ஷாப்பிங் மால் செல்லும்போது, பெரிதாக எதுவும் வாங்காமல், தோழிகள் வாங்குவதை வேடிக்கை பார்த்து விட்டு வந்து விடுவாள். நாளடைவில் அவளுக்கு எப்போதெல்லாம் வெளியில் செல்ல வேண்டும் என்று தோன்றியதோ, அப்போதெல்லாம் செல்லத் தொடங்கினாள். சில நேரங்களில் வலுக்கட்டாயமாக தோழிகள் சிலரை அழைத்துச் சென்றாள். இப்படி அழைத்துச் செல்லும்போது, தன்னுடைய சுயமதிப்பை காப்பாற்றிக் கொள்ளும் எண்ணத்தில் சில பொருட்கள் வாங்கத் தொடங்கினாள்.

வாரம் ஒருமுறை வெளியில் போனால்தான் மன நிம்மதி கிடைக்கிறது என அவளுக்குத் தோன்ற, அவளால் ஷாப்பிங் செல்லாமல் இருக்க முடியவில்லை. செல்லும்போது வாங்காமல் இருக்க முடியவில்லை. அவை தேவையா, தேவை இல்லையா என பிரித்துப் பார்க்க அவளுக்குத் தோன்றவில்லை. புடவை, சுடிதார் என யார் எந்த புதுவித உடை அணிந்திருந்தாலும் உடனே அதைப் போலவே வாங்கி அணிய வேண்டும் என்ற எண்ணம் தலைக்கு ஏறிவிடும். எத்தனையோ முறை வீட்டில் சொல்லியும் அவள் காதுகளில் அது ஏறவில்லை, பணத்தைப் பற்றிய கவலை துளியும் இல்லாமல் அவளுடைய இந்தப் பழக்கம் தொடர்கிறது. லட்சக்கணக்கில் கடன் அட்டையில் கடன் வாங்கியும் அவளுடைய இந்தப் பழக்கம் தொடர்வதால், என்ன செய்வது என்று தெரியாமல் பெற்றோர் தவிக்கின்றனர்.

வினுதா கதையும் இதுபோலத்தான். பக்கத்து அபார்ட்மென்ட்டில் வசித்த யாரோ ஒரு பெண் சொன்னதைக் கேட்டு அருகிலிருந்த அழகு நிலையத்திற்கு செல்ல, நாளடைவில் அது பழக்கமாகி விட்டது, கணவனோடு வேலை பார்க்கும் பெண்கள் போடும் நவநாகரிக உடை ஒப்பனைகளையெல்லாம் பார்த்துவிட்டு மிகப்பெரிய அழகு நிலையங்களில் சென்று வாரம் ஒரு முறை முகப் பூச்சு, சிகை அலங்காரம் எனத் தொடங்கி, இப்பொழுது வீட்டில் இருக்கும் எல்லா நேரமும், கையில் கிடைத்த ஏதோ ஒரு பொருளை வைத்து ஏதாவது தயார் செய்து அதை முகத்தில் அப்பிக் கொள்வது, கை கால்களில் போட்டுக் கொள்வது, தலைமுடி வளரப் பயன்படுத்துவது என மாறினாள்.

வினுதா வீடு கிட்டத்தட்ட ஆய்வுக்கூடம் போல் இருக்கும். தினமும் ஏதாவது இலை, தழை அரைத்து முகத்தில் பூசுவது, டி.வி.யிலும் பத்திரிகைகளிலும் கிடைக்கும் எல்லா அழகு குறிப்புகளையும், அது சரியா என ஆராய்ச்சி செய்யாமல் பயன்படுத்துவது என இந்த மோகத்தின் கடைசியில் தோல் எரிச்சல் ஏற்பட்டு முகம் முழுவதும் பருக்கள் உருவாகி, அந்த பருக்களிலிருந்து ரத்தம் கசியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏதாவது செய்தால் பெரிய பாதிப்பு வரக்கூடும் என்ற மருத்துவரின் எச்சரிக்கை இப்போது அவள் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது.

அனுபவ அறிவு அதிகமின்றி, படிப்பறிவு மட்டுமே போதும் என நினைக்கிற பெண்கள் இப்படியாக பல்வேறு பழக்கங்களுக்கு அடிமையாகி, உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி இன்னும் பல்வேறு இடங்களில் நடக்கின்ற எத்தனையோ விஷயங்கள் நம்மை உலுக்கிப் போடுகின்றன. பெரும்பாலான பெண்கள் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி விட்டார்கள். இன்னொரு தலைமுறைப் பெண்கள் தொலைக்காட்சி தொடர்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள். இதை நகைச்சுவையாகக் கூறுவார்கள்... ‘மனிதன் இரண்டு பெட்டிகளில் அடக்கமாகிறான், ஒன்று சவப் பெட்டி; இன்னொன்று தொலைக்காட்சிப் பெட்டி’ என்று!

இப்படிக் காட்சிகளுக்கு அடிமையாகி தனி உலகத்தில் வாழும் பெண்கள்; மறுபுறம் மால்களிலும் அழகு நிலையங்களிலும் நேரத்தையும் வாழ்க்கையையும் தொலைத்துக் கொண்டிருக்கும் பெண்கள்... இது ஒருவிதமான மன நோய் என்று கூட சொல்லலாம். ‘‘மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு வடிகால் தேடியே இப்படிப்பட்ட செயல்களில் பெண்கள் ஈடுபடுகிறார்கள். இறுதியில் அதனால் மனக்குழப்பத்திற்கும் கவலைக்கும் ஆளாகிறார்கள்’’ என்று மனநல நிபுணர்கள் சொல்கிறார்கள்.

பெண்கள் தங்களுடைய மன அழுத்தத்தைப் போக்க முயற்சித்தாலும் சரி, பொழுது போக்க நினைத்தாலும் சரி, அதற்கு என்ன செய்வது என்பதை சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். வேலை நேரம் போக மீதம் உள்ள நேரங்களை பயனுள்ளதாக மாற்ற என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். பொருளாதாரம் மேம்பட வேண்டும் என எண்ணும் பெண்கள், தங்களுக்குத் தெரிந்த வழிகளை மட்டுமே முயற்சிக்க வேண்டும். அடுத்தவர்கள் சம்பாதிக்கிறார்கள் என்பதற்காக, தெரியாத பாதையில் போகக் கூடாது.

வேலைப் பளு அதிகமாக உள்ள பெண்களுக்கு மன அழுத்தம் போக்குவதற்கு எத்தனையோ நல்ல வழிகள் உள்ளன. நல்ல புத்தகங்கள் படிப்பது, கோயில், தேவாலயம் அல்லது காற்றோட்டமான கடற்கரைக்குச் சென்று வருவது என அழுத்தத்தைக் குறைத்து கொள்ளலாம். தியானம், யோகா பயிற்சியில் ஈடுபட்டால் மன அமைதி கிடைக்கும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிறைய உள்ளன. தற்கொலைத் தடுப்பு மையம், மார்பகப் புற்றுநோய் தடுப்பு நிறுவனம், ஆதரவற்றோர் இல்லம் போன்ற தொண்டு நிறுவனங்கள் பலவும் பெண்களின் உதவியை நாடுகின்றன. எதிர்பார்ப்பு இல்லாமல் அடுத்தவர்களுக்கு சேவை செய்வதில் கிடைக்கும் ஆத்ம திருப்தியைவிட சிறந்த மருந்து மனதுக்கு வேறு என்ன இருக்கிறது?          

crossmenu