மதிப்பிற்குரியவர்களுக்கு...5

வணக்கம்.

ஒரு ஆப்பிள் பழத்தில் எத்தனை விதைகள் இருக்கின்றன என்பதை நம்மால் எண்ணிப் பார்த்து சொல்லிவிட முடியும். ஆனால், ஒரு விதையில் எத்தனை ஆயிரம் ஆப்பிள் பழங்கள் இருக்கும் என சொல்லமுடியாது. விதைகளின் வீரியம், ஆராய்ச்சிகளைத் தாண்டி ஆச்சரியம் தரக் கூடியது.

மூன்று ஆப்பிள்களுக்கு உலக வரலாற்றில் முக்கியமான இடம் இருக்கிறது.

முதல் ஆப்பிள், மத நம்பிக்கையின் அடிப்படையில் வரலாற்றில் இடம்பெற்றது.  இந்த உலகத்தில் மனிதர்கள் உருவாக ஆப்பிள் பழமே காரணம் என்பார்கள். கடவுளின் எச்சரிக்கையை மீறி, உலகின் முதல் மனிதர்களான ஆதாம் & ஏவாள் ஜோடி, பசிக்கு ஆப்பிள் சாப்பிட்டதால், அடுத்தடுத்து மனிதர்கள் உருவானார்கள் என்பது நம்பிக்கை.

இரண்டாவது, ஐசக் நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள். மரத்தில் இருந்து ஒரு பழம் விழுந்தால் ஆசையாக, அதிர்ஷ்டம் என்று எடுத்து உண்பது இயல்பு. ஆனால், ஐசக் நியூட்டனுக்கு மரத்தில் இருந்து மேலே போகாமல் பழம் ஏன் கீழே விழுந்தது என ஒரு கேள்வி எழுந்தது. புவி ஈர்ப்பு விசை பற்றிய ஆராய்ச்சிக்கு, அந்த ஆப்பிள்தான் காரணம். 

மூன்றாவது ஆப்பிள், பழம் இல்லை. உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த கம்ப்யூட்டர், செல்போன் தயாரிப்பு நிறுவனம். அதன் நிறுவனர், ஸ்டீவ் ஜாப்ஸ் கணினி உலகுக்குத் தந்த ஆப்பிள், இன்று கம்ப்யூட்டர், செல்போன், ஐபேட் மற்றும் ஐபாட் போன்ற தகவல்தொடர்பு சாதனங்களின் கௌரவமான அடையாளம்.

‘கம்ப்யூட்டர், செல்போன் எல்லாம் பயன்படுத்த படிச்சிருக்கணும்’ என்கிற கருத்தை மாற்றி, பாமரர்களும் விரும்பிப் பயன்படுத்தும் வகையில் அழகான கருவிகளாகக் கொடுத்தது ஆப்பிள் நிறுவனம்.

1975ல், படிப்பு முடிந்த பிறகு ‘என்ன வேலை செய்வது’ என்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்த இளைஞர் ஸ்டீவ் ஜாப்ஸ், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்த தங்கள் வீட்டின் கார் ஷெட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் பயணத்தைத் துவங்கினார். அப்போது ஸ்டீவ் ஜாப்ஸின் வயது 21.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ், புகழ்பெற்ற நிறுவனங்களில் படித்தவர் இல்லை. ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு கிடைத்தால் பெரிய விஷயம் என்று கஷ்டத்தை அனுபவித்தவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாழ்விற்கும் மரணத்திற்கும் நடுவில் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர். வறுமை, நோய், முதுமை என எதற்கு முன்னாலும் மண்டியிடாமல், புதுப்புது முயற்சிகள் செய்துகொண்டே இருந்தார். 

‘‘பதினேழு வயதிருக்கும்போது வாசகம் ஒன்றை வாசித்தேன். ‘இன்றுதான் உன் கடைசி நாள் என்பதுபோல் ஒவ்வொரு நாளையும் வாழ்ந்திடு’ என்பதே அந்த வாசகம். வாழ்வின் முக்கிய முடிவுகள் எடுக்க இந்த வாசகம் எனக்கு உதவியது’’ என்று ஸ்டீவ் ஜாப்ஸ் தன் வெற்றி ரகசியத்தைப் பகிர்ந்துகொண்டார்.

‘இன்னும் நாட்கள் இருக்கிறது. நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்’ என்று நினைக்க திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை நம்மை அனுமதிப்பதில்லை. ‘நாளை’ என்பதும், ‘இல்லை’ என்பதும் ஒரே பதில்தான். சின்னச்சின்ன விஷயங்களில் துவங்கி, வாழ்வின் முக்கியமான விஷயங்களைக்கூட எளிதாகத் தள்ளிப் போட்டுவிடுகிறோம். அப்படி நாம் முடிக்காது விட்ட விஷயங்களைத் தொகுத்தால், இன்னொரு ஆயுள் இருந்தாலும் போதாது.

‘நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஒரு வேலையைத் தள்ளி வைக்கும் முன்பு, நாம் யோசிக்க வேண்டிய ஒரேயொரு விஷயம் உண்டு. ‘தள்ளிப்போடுகிற வேலையைவிட, அந்த நேரத்தில் வேறு என்ன முக்கியமான வேலையைச் செய்கிறோம்?’ இந்தக் கேள்விக்கு நிறைவான பதில் கிடைத்தால் மட்டுமே ஒரு வேலையைத் தள்ளிப்போடுவதில் குறைந்தபட்ச நியாயம் உண்டு.

‘நன்றே செய்... இன்றே செய்...’ என்று சொன்னார்கள் நம் முன்னோர்கள். கடந்து போன ஒரு வினாடியைக்கூட எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் திரும்ப வாங்கிவிட முடியாது. அதன் மதிப்புணர்ந்து வாழ்வது நல்லது.

வாழ்க வளமுடன்!

- கே.ஆர்.நாகராஜன்

நிறுவனர் - ராம்ராஜ் காட்டன்

crossmenu