தினம் ஒரு கதை -23

.

ஆந்தை சூட்கேஸில் எல்லாவற்றையும் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தது.

அந்தப் பக்கம் வந்த கழுகு கேட்டது, ‘‘என்ன கிளம்பிவிட்டாய். எங்கே போகிறாய்?’’

‘‘நான் பக்கத்துக் காட்டுக்குப் போகிறேன்.’’

‘‘ஏன், இந்த காடு பிடிக்கவில்லையா?’’

‘‘ஆம். இங்கே இரவு நேரத்தில் நான் அலறுவது பலருக்கும் பிடிக்கவில்லையாம். கிண்டல் செய்கிறார்கள். அதனால் போகிறேன்.’’

‘‘சரி, பக்கத்துக் காட்டுக்கு போனால் மட்டும் உன் குரல் மாறி விடுமா என்ன?’’

ஆந்தை வெகுநேரம் யோசித்து, ‘‘மாறாதே... அது எப்படி மாறும்? இதே குரல்தான் இருக்கும்’’ என்றது.

‘‘உன் குரல் உன் இயல்பு. அதை நீ யாருக்காகவும் மாற்ற முடியாது. மாற்றவும் கூடாது. இந்த காடு என்றில்லை, எந்தக் காட்டிலும் உன்னை கிண்டல் செய்ய யாராவது இருக்கத்தான் செய்வார்கள். அதைக் கண்டுகொள்ளாமல் உன் இயல்பில் வாழ்வதுதான் புத்திசாலித்தனம்’’ என்றது கழுகு.

‘அவரவர் இயல்புடன் வாழ்வதற்கு வெட்கப்படக்கூடாது’ என்ற உண்மையைப் புரிந்துகொண்ட ஆந்தை, சூட்கேஸை எடுத்து மரப்பொந்திலேயே வைத்துவிட்டு அன்றைய வேலையைப் பார்க்கப் போனது.

crossmenu