தினம் ஒரு கதை -22
கடற்கரையை ஒட்டிய காடு அது. அங்கே ஒரு முயல் துள்ளி துள்ளி ஒடும் போது யானையும் திமிங்கலமும் பேசுவதை கேட்டது.
“நான் தான் தரையில் வாழும் விலங்குகளில் பெரியவன்” யானை சொன்னது.
“நான் தான் கடலில் வாழும் விலங்குகளில் பெரியவன் “திமிங்கலம் சொன்னது.
“நாம் இருவரும் சேர்ந்தால் இந்த காட்டில் உள்ள அனைத்து விலங்குகளையும் நமக்கு அடிமையாக்கலாம்” யானை ஆணவத்தால் பேசியது.
“ஆம் நாம் இணைந்து காட்டில் உள்ள அனைவரையும் அடி பணிந்து நமக்கு வேலை செய்ய வைப்போம்” திமிங்கலமும் ஆணவத்தால் பேசியது.
இதைக் கேட்ட முயல் காட்டின் சுதந்திரத்துக்கு ஆபத்து வருகிறது என்பதை உணர்ந்து யானைக்கும் திமிங்கலத்துக்கும் பாடம் கற்பிக்க நினைத்தது.
நீளக் கயிறு ஒன்றை எடுத்து கடற்கரையோரம் வந்தது.
அங்கிருந்த திமிங்கலத்திடம் “ ஒரு பாறையை அசைத்து உருட்ட முடியாமல் காட்டில் உள்ள விலங்குகள் அனைத்தும் சிரமப்படுகிறோம். நீதான் பலசாலி ஆயிற்றே. உதவலாமே” என்றது. திமிங்கலம் மகிழ்ச்சியுடன் சம்மதிக்க கயிறை திமிங்கலத்தின் மீது கட்டி இன்னொரு பகுதி கயிற்றை எடுத்து காட்டுக்குள் ஒடியது. அங்கே யானை வந்து கொண்டிருந்தது.
“யானை அண்ணா யானை அண்ணா நீதான் காட்டில் பலசாலி ஆயிற்றே. ஒரு பாறை ஒன்றை அப்புறப் படுத்த சிரமப்படுகிறோம். கொஞ்சம் உதவி செய்யேன்” என்றதாம். யானை உற்சாகமாக சம்மதிக்க கயிற்றை யானையின் துதிக்கையில் கட்டியது.
ஒரு கயிற்றின் இந்த முனையில் திமிங்கலம். அந்த முனையில் யானை. இருவருக்கும் இது தெரியாதபடி காட்டின் ஒவ்வொரு பகுதியில் அல்லவா இருக்கிறார்கள்.
திமிங்கலம் வெறி கொண்டு இழுக்க,. விட்டேனா பார் என்று யானை பதிலுக்கு வெறி கொண்டு இழுக்க நாள் முழுவதும் இழுத்து இழுத்து இரண்டு மிருகங்களும் சோர்ந்து விட்டன.
சரி பாறை எங்கே என்று பார்க்கலாம் என்று இருவரும் முடிவு செய்து பாறையை நோக்கி வருவதாக வரும் போது திமிங்கலமும் யானையும் ஒன்றை ஒன்று பார்த்து “ஆஹா நம்மை முயல் ஏமாற்றி விட்டதே” என்று வெட்கப்பட்டு கொண்டிருக்கும் போது முயல் அங்கே வந்தது.
“உருவத்தில் பெரியவர்களாய் இருப்பது முக்கியமில்லை. அறிவிலும் பெரியவராய் இருக்கும் போதுதான் ஏமாறாமல் இருக்க முடியும் “ என்று புத்தி சொன்னது. யானையும் திமிங்கலும் திருந்தி முயலுக்கு நன்றி சொல்லி ஆணவத்தை கைவிட்டன.