தினம் ஒரு கதை-20
கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்கள் அனைவரையும் ஆளுக்கொரு எலுமிச்சை பழம் கொண்டு வருமாறு முதல் நாளில் பேராசிரியர் சொன்னார்.
‘ஏன் எலுமிச்சை பழம்?’ என்ற யோசனையுடன் மறுநாள் மாணவர்கள் கொண்டு போனார்கள்.
‘‘அவரவர் இனிஷியலை எலுமிச்சை பழத்தில் செதுக்குங்கள்’’ என்றார் பேராசிரியர்.
மாணவர்கள் செய்தார்கள்.
கூடை ஒன்றில் அனைத்து எலுமிச்சை பழங்களையும் போடச் சொன்னார். நன்றாகக் கலந்தார்.
மாணவர்களை அவரவர் பழத்தை எடுக்கச் சொன்னார். இனிஷியல் பார்த்து எல்லோரும் சரியாக எடுத்துவிட்டார்கள்.
அனைவரையும் எலுமிச்சை பழத்தோலை உரித்து விட்டு மீண்டும் கூடையில் போடச் சொன்னார். கலந்தார்.
மறுபடியும் அவரவர் எலுமிச்சை பழத்தை எடுக்கச் சொன்னார். எடுக்க முடியவில்லை. ‘எது யாருடையது’ என்று அடையாளம் தெரியாமல் மாணவர்கள் விழித்தார்கள்.
‘‘தோலை நீக்கிவிட்டால் அனைத்து எலுமிச்சையும் ஒன்றுதான். அதே சமயம் அதன் சுவை என்றும் மாறுவதில்லை. அது போல நீங்கள் எந்த மதம், சாதி, இனமாக இருந்தாலும் அடிப்படையில் மனிதப் பண்புள்ளவர்கள். அந்த மனிதநேயத்தை எக்காரணம் கொண்டும் விட்டு விடாமல் சகோதரத்துவத்துடன் பழகத் தெரிந்திருக்க வேண்டும். இதுதான் உங்களுக்கு முதல் பாடம்’’ என்று சொல்லி வகுப்பை முடித்தார்.