தினம் ஒரு கதை - 58
தாத்தா தன் 20 வயது பேரனை அழைத்தார். ‘‘எனக்கு உடம்பு முடியவில்லை. இந்த முறை நம் தோப்பில் சென்று தேங்காய் கொண்டு வர என்னால் முடியாது. நீ மாட்டு வண்டியை எடுத்துக் கொண்டு போய் வா’’ என்றார்.
பேரனும் சம்மதித்து வண்டியை எடுத்தான். போகும்போது தாத்தா அவனுக்கு ஏதோ புத்திமதி சொல்ல, அதை காதிலேயே வாங்கவில்லை அவன். ‘‘அதெல்லாம் எனக்குத் தெரியும். என்னிடம் இளமை இருக்கிறது. துடிப்பு இருக்கிறது. அறிவு இருக்கிறது’’ என்று சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பினான்.
தோப்புக்குச் சென்றவன், தேங்காய் வெட்டிப்போடும் வேலையாட்களிடம், ‘‘சீக்கிரம் காயை எல்லாம் வெட்டிப் போடுங்கய்யா. என்ன சோம்பேறித்தனமா நிக்கறீங்க?’’ என்று அதிகாரம் செய்தான். கத்திக்கொண்டே இருந்தான்.
அவர்கள் தேங்காயை வெட்டிப் போட்டுவிட்டு, இவனிடம் அதற்கான பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினார்கள். ‘‘இந்த தேங்காயை வண்டியில் யார் ஏற்றுவார்கள்?’’ என்று இவன் கத்தினான்.
‘‘ஐயா, தேங்காயை வெட்டுவதுதான் எங்கள் வேலை. வண்டியில் ஏற்றுவதற்கு வேறு ஆளைப் பாருங்கள்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். அதன்பிறகு இவனே எல்லா தேங்காய்களையும் வண்டியில் ஏற்றினான்.
அதற்குள் மதியம் ஆகிவிட்டது. நேரமாகிவிட்டதால் வண்டியை வேக வேகமாக ஓட்டினான். மாடுகளை அதிவேகத்தில் விரட்டினான்.
வழியில் ஓர் இடத்தில் சாலையில் இருந்த கல்லில் ஏறி வண்டி குலுங்க, வண்டியில் இருந்த தேங்காயில் பாதி உருண்டு தரையில் விழுந்தது. சிதறிய தேங்காய்களை ஒவ்வொன்றாக எடுத்து வண்டியில் வைத்துக்கொண்டு வீடு திரும்பியபோது இருட்டி விட்டது.
பசியுடன் வந்த பேரனுக்கு தாத்தா உணவு கொடுத்தார். அதை வயிறார உண்டு தூங்கப் போகும்போது தாத்தாவிடம் பேரன் கேட்டான்... ‘‘தாத்தா! நான் கிளம்பும்போது ஏதோ சொல்ல வந்தீர்களே, என்ன அது?’’
அதற்கு தாத்தா, ‘‘அதுவா? ‘அன்பாக அதிகாரம் செய்து காரியம் சாதித்து, மெல்ல வண்டியோட்டி விரைவாய் வீடு வா’ என்று சொல்ல வந்தேன்’’ என்றார்.
தோப்பில் வேலையாட்களிடம் அன்பாகப் பேசியிருந்தால் அவர்களே தேங்காய்களை வண்டியில் ஏற்றிக் கொடுத்திருப்பார்கள்.
வண்டியை மெல்ல ஓட்டி இருந்தால் தேங்காய்கள் உருண்டோடி இருக்காது. விரைவில் வீடு வந்திருக்கலாம் என்பதைப் புரிந்து கொண்ட பேரன், அனுபவத்தின் நன்மை உருவமாக தன் முன்னே நிற்கும் தாத்தாவை ஆச்சரியத்தோடு பார்த்தான்.